மத்திய வங்கியானது 4% தொழிற்படு மூலதனக் கடன் திட்டத்தின் சலுகைக் காலப்பகுதியினை 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக நீடிக்கின்றது

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்ட தொழில்களை சீரமைக்கும் தேசிய முக்கியத்துவத்தினை இனங்கண்டு, 6 மாத காலப்பகுதியினைக் கொண்ட சலுகைக் காலம் உள்ளடங்கலாக  24 மாதங்களைக் கொண்ட மீள்கொடுப்பனவு காலப்பகுதியொன்றுடன் கூடிய ஆண்டுக்கு 4 சதவீத வட்டிவீதத்தில் தொழிற்படு மூலதனக் கடன்களை வழங்குவதற்காக சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் கடன் திட்ட வசதியினை இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையுடன் இலங்கை மத்திய வங்கி 3 கட்டங்களில் நடைமுறைப்படுத்தியது.

எவ்வாறாயினும், கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக எதிர்பார்க்கப்பட்டவாறு தமது தொழில்களை சீரமைத்துக்கொள்வதில் அநேகமான கடன்பெறுநர்கள் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே, தவறுதல் எதுவுமின்றி கடன்களை மீளச்செலுத்துவதற்கு கடன்பெறுநர்களுக்கு வசதியேற்படுத்தி ஊக்குவிக்கவேண்டிய முக்கியத்துவத்தினை பரிசீலனையில் கொண்டு இலங்கை மத்திய வங்கியானது சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் கடன்வசதியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கடன்களுக்கு ஏற்புடைய சலுகைக் காலத்தினை, கடன்பெறுநர்களால் முன்வைக்கப்படுகின்ற எழுத்திலான கோரிக்கையின் மீது மேலும் மூன்று (03) மாதங்களால் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, 9 மாதங்களைக் கொண்ட சலுகைக் காலப்பகுதியொன்றினைப் பெற்றுக்கொள்வதற்கு விரும்புகின்ற இத்தொழிற்படு மூலதனத் திட்டங்களின் பயனாளிகள் தொடர்புடைய வங்கிக்கு எழுத்திலான கோரிக்கையொன்றினை அனுப்புமாறு கோரப்படுகின்றனர்.

Published Date: 

Friday, November 6, 2020