இலங்கை மத்திய வங்கியானது இலங்கை அரசாங்கம் சார்பில் ஐ.அ.டொலர் 1 பில்லியன் கொண்ட முதிர்ச்சியடைகின்ற நாட்டிற்கான பன்னாட்டு முறியின் தீர்ப்பனவினை கூப்பன் கொடுப்பனவுகளுடன் சேர்த்து 2020 ஒத்தோபர் 2 அன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இத்தீர்ப்பனவானது அதன் வெளிநாட்டுப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பினை மீள உறுதிசெய்வதுடன் இதன் மூலம் முதலீட்டாளர் நம்பிக்கைக்கு வலுவூட்டி அதன் கறைபடியாத படுகடன் தீர்ப்பனவுப் பதிவுகளைப் பேணுவதற்கான அரசாங்கத்தின் இயலுமை மற்றும் விருப்பம் தொடர்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொண்டிருக்கக்கூடிய எவையேனும் கரிசனைகளைப் புறந்தள்ளுகிறது. உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையானது இத்தீர்ப்பனவு மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தின் ஏனைய அண்மைக்கால சாதகமான அபிவிருத்திகளுக்கு ஏற்கனவே சாதகமாகப் பதிலிறுத்தியுள்ளது. அரசாங்கத்தினாலும் இலங்கை மத்திய வங்கியினாலும் எடுக்கப்பட்ட முனைப்பான வழிமுறைகள் மூலம் துணையளிக்கப்பட்ட உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தைக்கான எதிர்பார்க்கப்பட்ட உட்பாய்ச்சல்கள் மூலம் எதிர்வரும் காலங்களில் சந்தை பற்றிய எண்ணப்பாங்கு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.








