'இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிபரங்கள் - 2020" வெளியீடு

“இலங்கையின் பொருளாதார சமுகப் புள்ளிவிபரங்கள் - 2020” என்ற இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடு தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு நிறைவினை அடையாளப்படுத்தி புள்ளிவிபரத் திணைக்களமானது எளிதாக உசாவும் விதத்தில் வெளியிட்டின் அமைப்பினை மீளக்கட்டமைத்துள்ள அதேவேளை அதன் உள்ளடக்கத்திற்கு மெருகூட்டுவதற்கு மேலும் புள்ளிவிபரங்களைச் சேர்த்துள்ளது. அதற்கமைய, புதிய பதிப்பானது எட்டு முக்கிய விடயப்பரப்புக்களின் அதாவது ‘தேசிய கணக்குகள்’, ‘பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு’, ‘விலைகள், கூலிகள் மற்றும் தொழில்’, ‘வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் நிதி’, ‘அரச நிதி’, ‘பணம் மற்றும் மூலதனச் சந்தைகள்’, ‘நிதியியல் துறை’ அத்துடன் ‘ஏனைய நாடுகளின் புள்ளிவிபரங்கள்’ என்பவற்றின் கீழ் வகைப்படுத்தப்பட்ட புள்ளிவிபர அட்டவணைகளை உள்ளடக்குகின்றது. 

இவ்வெளியீடு அச்சு மற்றும் வெப்தள பதிப்புகள் என்ற இரண்டிலும் கிடைக்கப்பெறுவதுடன் சமூகப் பொருளாதார புள்ளிவிபரங்களில் ஆர்வமிக்க எவருக்கும் பயன்மிக்க தகவல் சேகரிப்பினைக் கொண்டிருக்கும். 

இவ்வெளியீட்டினை சென்றல் பொயின்ற் கட்டடத்தில் அமைந்துள்ள மத்திய வங்கியின் விற்பனை மற்றும் விநியோகக் கருமபீடம் (சதாம் வீதி, கொழும்பு 01) தொலைபேசி இல: 011-2444502, வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையம் (58, சிறி ஜெயவர்த்தனபுர மாவத்தை, இராஜகிரிய) தொலைபேசி இல: 011-2477803 மற்றும் மத்திய வங்கியின் பிரதேச அலுவலகங்கள் (மாத்தறை, மாத்தளை, நுவரெலியா, கிளிநொச்சி, திருகோணமலை, மற்றும் அநுராதபுரம்) ஆகிய இடங்களில் கொள்வனவு செய்யமுடியும் என்பதுடன் இவ்வெளியீட்டின் இலத்திரனியல் பதிப்பினை மத்திய வங்கியின் வெப்தளத்தின் (http://www.cbsl.gov.lk) ஊடாக தரவிறக்கம் செய்யமுடியும்.

Published Date: 

Wednesday, September 2, 2020