தடயவியல் கணக்காய்வுகள்

2015 பெப்புருவரி 01ஆம் திகதி தொடக்கம் 2016 மாச்சு 31ஆம் திகதி வரையான காலப்பகுதியின் போது திறைசேரி முறிகளை வழங்கல் தொடர்பாக பரீட்சித்துப் பார்த்து புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான சனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் பரிந்துரைகள், கணக்காய்வு அறிக்கைகளில் அண்மைய ஆண்டுக் காலங்களில் வெளிச்சத்திற்கு வந்த விடயங்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட சில ஒழுங்குமுறைப்படுத்தல் அத்துடன் முகவர் தொழிற்பாடுகளுடன் தொடர்புடைய உள்ளக விசாரணைகளில் கண்டறியப்பட்டவைகள் என்பனவற்றின் விளைவாக இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் ஆலோசனையுடன் ஏற்புடைய அரசாங்கப் பெறுகை வழிகாட்டல்களுடன் இணங்கி அமைச்சரவை நியமித்த ஆலோசகர்கள் பெறுகைக் குழுவினால் தெரிவுசெய்யப்பட்டிருந்த உலகளாவிய நடைமுறையுடனும் பன்னாட்டு அனுபவத்துடனும் கூடிய கணக்காய்வு நிறுவனங்களின் இலங்கைக்கு வெளியிலமைந்த ஆளணியினால் முழுமையாகக் கொண்டு நடாத்தப்படும் தடயவியல் கணக்காய்வுகளை தொடங்குவதற்கு உத்தியோகபூர்வ அனுமதியளித்தது. அமைச்சரவை நியமித்த ஆலோசகர்கள் பெறுகைக் குழுவில் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் பிரதிநிதி அவதானிப்பாளர் ஒருவராகச் செயற்பட்டார்.

கணக்காய்வு நிறுவனங்களைத் தெரிவுசெய்வதற்கான பெறுகைச் செயன்முறை மீதான முன்னேற்றம் தொடர்பாக 2019 சனவரி 14 அன்று பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அறிவித்தலில் குறிப்பிடப்பட்டவாறு, கணக்காய்வாளர் தலைமை அதிபதியினதும் சட்டமா அதிபரினதும் ஆலோசனையுடன் இறுதிப்படுத்தப்பட்ட விசாரணை நியதிகளுக்கமைவாக கீழே குறித்துரைக்கப்பட்ட குறித்தொதுக்கப்பட்ட ஐந்து பணிகளில் தடயவியல் கணக்காய்வுகள் கொண்டு நடாத்தப்பட்டன:  

  1. 2002 சனவரி 01 தொடக்கம் 2015 பெப்புருவரி 28 வரையான காலப்பகுதியின் போது பொதுப்படுகடன் திணைக்களத்தின் மூலம் திறைசேரி முறிகளை வழங்குதல்
  2. 2002 சனவரி 01 தொடக்கம் 2015 பெப்புருவரி 28 வரையான காலப்பகுதியின் போது வழங்கப்பட்ட/ கொடுக்கல்வாங்கல் செய்யப்பட்ட திறைசேரி முறிகள் தொடர்புபடுகின்ற ஊழியர் சேம நிதியத்தின் முதலாந்தர மற்றும் இரண்டாந்தர சந்தைக்          கொடுக்கல்வாங்கல்கள்
  3. 1998 சனவரி 01 தொடக்கம் 2017 திசெம்பர் 31 வரை பட்டியலிடப்பட்ட அல்லது பட்டியலிடப்படாத பங்குரிமை மூலதனங்களில் ஊழியர் சேம நிதியத்தின் கொடுக்கல்வாங்கல்கள் 
  4. 2015 பெப்புருவரி 01 தொடக்கம் 2016 மாச்சு 31 வரையான காலப்பகுதியின் போது பொதுப்படுகடன் திணைக்களத்தின் மூலமான திறைசேரி முறி வழங்கலும் கிடைக்கப்பெற்ற நிதியங்களை பொதுத் திறைசேரிக்கு பணவனுப்பல் செய்தலும் 
  5. 2009 சனவரி 01 தொடக்கம் 2017 திசெம்பர் 31 வரை தெரிவுசெய்யப்பட்ட முதனிலை வணிகர்கள் தொடர்பில் பொதுப்படுகடன் கண்காணிப்பாளர்/ வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களப் பணிப்பாளர் மூலமான மேற்பார்வை நடத்தையும் ஒழுங்குமுறைப்படுத்தல் வகிபாகமும் 

அனைத்து தடயவியல் கணக்காய்வுகளும் 2019 ஒத்தோபர் நடுப்பகுதியளவில் நிறைவு செய்யப்படுமென ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், 2019 ஏப்பிறலில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் சில முக்கிய தகவல்களை குறிப்பாக, சில வெளிவாரி மூலங்களிலிருந்தானவற்றை சேகரிப்பதில் எதிர்கொள்ளப்பட்ட சவால்கள் என்பன நீடிப்பினை வழங்குவதற்கு வழிவகுத்தன. அனைத்து ஐந்து தடயவியல் கணக்காய்வுகளும் தற்போது நிறைவு பெற்றுள்ளதுடன் இறுதி அறிக்கைகள் கணக்காய்வாளர்களினால் நாணயச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 

கண்டறியப்பட்டவற்றின் தன்மையினைக் கருத்தில் கொண்டு, நாணயச் சபையானது குறிப்பாக, அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமா என்பது உள்ளடங்கலாக தடயவியல் கணக்காய்வு அறிக்கைகளின் விநியோகம் பற்றி சட்டமா அதிபரின் அபிப்பிராயத்தினைக் கோரியது. 

அறிக்கைகளில் கண்டறியப்பட்டவைகள், பின்னிணைப்புக்கள் மற்றும் சான்றாவணங்கள் என்பன விசாரணைகளிலும் முன்னெடுக்கப்படுகின்ற மற்றும் எதிர்கால சட்ட நடவடிக்கைகளிலும்  சாத்தியமான சான்றுகளாக இருக்கக்கூடியவையாக கொள்ளப்பட வேண்டும் என்றும் அவற்றை அணுகுவதற்கு நியதிச்சட்ட அதிகாரத்தினைக் கொண்டுள்ளவர்களுக்கு மாத்திரம் அணுகுவழி மட்டுப்படுத்தப்பட வேண்டிய அதேவேளை விசாரணைகள் மற்றும் முன்னெடுக்கப்படுகின்ற அத்துடன் எதிர்கால வழக்காடல்கள் மீது ஏதேனும் சாத்தியமான பங்கமேற்படுத்துகின்ற விளைவுகளைத் தவிர்க்கும் பொருட்டு அவற்றைப் பெறுபவர்கள் அறிக்கைகளின் உள்ளடக்கம் தொடர்பில் இரகசியத்தன்மையினைப் பேண வேண்டியதனையும் வலியுறுத்தி சட்டமா அதிபர் அபிப்பிராயம் தெரிவித்துள்ளார். அறிக்கைகளையும் தொடர்புடைய ஆவணங்களையும் முழுமையாகப் பரிசீலனையில் கொண்டதன் பின்னர் விசாரணைகள் மற்றும் முன்னெடுக்கப்படுகின்ற அல்லது எதிர்கால வழக்காடல்களுக்குப் பங்கமேற்படாத வகையில் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தக்கூடிய அவ்வறிக்கையின் ஏதேனும் பாகங்கள் பற்றி மத்திய வங்கிக்கு அறிவிக்கப்படும் என சட்டமா அதிபர் மேலும் அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபரினால் வழங்கப்படும் ஆலோசனைக்கமைவாக நாணயச் சபை செயற்படுமென பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

 

Published Date: 

Tuesday, November 12, 2019