தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் – பன்னாட்டுத் தீர்ப்பனவிற்கான வங்கி உயர்மட்ட ஆய்வரங்கு மற்றும் தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் நிறைவேற்றுக் குழுவின் 18ஆவது கூட்டம்

இலங்கை மத்திய வங்கி, 2019 செத்தெம்பர் 26 இலிருந்து 28 வரை கொழும்பில் தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் - பன்னாட்டுத் தீர்ப்பனவிற்கான வங்கி உயர்மட்ட ஆய்வரங்கினையும் தென்கிழக்காசிய மத்திய வங்கிகளின் நிறைவேற்றுக் குழுவின் 18ஆவது கூட்டத்தினையும் நடாத்தியது. இந்நிகழ்வில் மத்திய வங்கியின் ஆளுநர், பதில் ஆளுநர்கள் மற்றும் தென்கிழக்காசிய மத்திய வங்கிகளின் உறுப்பினர்களாகவுள்ள மத்திய வங்கிகள் மற்றும் நாணய மேலாண்மைச் சபைகளின் பேராளர்கள் மற்றும் தனிச் சிறப்புமிக்க பேச்சாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாண்டிற்கான தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் – பன்னாட்டுத் தீர்ப்பனவிற்கான வங்கி உயர்மட்ட ஆய்வரங்கின் தொனிப்பொருளாக “மத்திய வங்கித்தொழில் பற்றி வேறுபட்ட முறையில் சிந்தியுங்கள்” காணப்பட்டது. இத்தொனிப்பொருளின் கீழ், பன்னாட்டுத் தீர்ப்பனவிற்கான வங்கி, நியூயோர்க் பெடரல் றிசேர்வ் வங்கி, பொருளாதாரக் கொள்கைகள் மீதான குழு, ஏசியா ஸ்கூல் ஒவ் பிசினஸ் மற்றும் சயன்ஸ் போ பரிஸ் என்பனவற்றை உள்ளடக்கிய பல பன்னாட்டு நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புகழ்பெற்ற பேச்சாளர்கள் கலந்து கொண்டு மத்திய வங்கிகள் புதிய சவால்களையும் அபிவிருத்திகளையும் கையாள்வதில் அவர்களது அணுகுமுறைகள் பற்றி மத்திய வங்கிகள் எவ்வாறு சிந்திக்கலாம் என்பது பற்றி தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இது தொடர்பில் காலநிலை மாற்றங்கள், டிஜிட்டல் மயப்படுத்தல், இன்றியமையாத சிந்தனைகளைப் பிரயோகித்தல் மற்றும் பணவீக்க இலக்கிடல் என்பன பற்றிக் கலந்துரையாடப்பட்டன.

தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் அமைப்பு 19 மத்திய வங்கி உறுப்பினர்களையும் புறுணை, தருசலாம், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, கொங்கொங் சிறப்பு நிருவாகப் பிராந்தியம், கொரியா, லாவோஸ் மக்கள் சனநாயகக் குடியரசு, மலேசியா, மொங்கோலியா, மியன்மார், நேபாளம், பபுவாநியுகினியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, சீன ரைபேய், தாய்லாந்து மற்றும் வியட்நாம் என்பனவற்றின் நாணய அதிகாரசபைகளையும் அதேபோன்று 8 துணை உறுப்பினர்களையும் 8 அவதானிப்பாளர்களையும் உள்ளடக்கியிருந்தது. 1982இல் நிறுவப்பட்ட தென்கிழக்காசிய மத்திய வங்கிகளின் மத்திய நிலையம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அறிவினைப் பகிர்ந்து கொள்வதிலும் நிதியிடல், நாணய மற்றும் வங்கித்தொழில் விடயங்களில் புரிந்துகொள்ளலைப் பெருமளவிற்கு மேம்படுத்துவதிலும் தலையாய பங்கினையாற்றி வருகின்றது.

 

 

Published Date: 

Thursday, October 3, 2019