இலங்கையிலுள்ள வங்கிகள் தொடர்பில் மூடிஸ் இன்வெஸ்டர் சேர்விஸ் இனால் தெரிவிக்கப்பட்ட துறைக் கருத்துக்கள் மீதான மத்திய வங்கியின் நோக்கு

2019 செத்தெம்பர் 27ஆம் நாளன்று மூடிஸ் இன்வெஸ்டர் சேர்விஸ் “இலங்கையின் கடன்வழங்கல் வீதக் குறைப்பானது வங்கிகளுக்கான கொடுகடன் எதிர்மறையாகும்” என்ற தலைப்பில் இலங்கையிலுள்ள வங்கிகள் மீதான துறைக் கருத்து ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பில், இலங்கை மத்திய வங்கி, மூடியின் முடிவுரையானது முழுத் தகவலையும் கருத்திற் கொண்டிருக்கவில்லை என்பதனால் எவ்வித அடிப்படையுமற்றது என்று கருதுகிறது.

இலங்கை மத்திய வங்கி, சிறந்த முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பணவீக்கத்திற்கு மத்தியிலும், கொடுகடன் மற்றும் நாணயக் கூட்டுக்களின் மெதுவடைந்து செல்லும் வளர்ச்சி, குறைவடைந்த பொருளாதார வளர்ச்சி என்பனவற்றினைக் கருத்திற்கொண்டு கடந்த பதினொரு மாத காலமாக நாணயக் கொள்கையினையும் நாணய நிபந்தனைகளையும் தளர்த்துவதற்காக பல்வேறு வழிமுறைகளை எடுத்து வந்திருக்கிறது. இவ்வழிமுறைகளுள், இரண்டு கட்டங்களில் 2.50 சதவீதப் புள்ளிகளினால் நியதி ஒதுக்கு விகிதத்தில் செய்யப்பட்ட குறைப்பு, உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் ஏறத்தாழ ரூ.150 பில்லியன் கொண்ட மேலதிக நிதியை வருமானத்தினை உருவாக்குகின்ற நடவடிக்கைகளில் முதலீடு செய்வதற்கு இயலுமைப்படுத்தியது. நியதி ஒதுக்கு விகிதத்தில் செய்யப்பட்ட குறைப்பும் உள்நாட்டுப் பணச் சந்தையில் ரூபாத் திரவத்தன்மையினை மேம்படுத்திய அதேவேளையில் 2019 மேயிலும் ஓகத்திலும் இரண்டு தடவைகள் 100 அடிப்படைப் புள்ளிகளினால் கொள்கை வீதங்கள் குறைக்கப்பட்டமையின் மூலம் நாணயச் சந்தை வட்டி வீதங்களில் மேலும் குறைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.

2019 செத்தெம்பரில் நீக்கப்பட்ட, 2019 ஏப்பிறலில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் வைப்பு வட்டி வீதங்களின் மீது விதிக்கப்பட்ட உச்சவரம்பு, வங்கிகளிடையே வைப்புக்களைத் திரட்டுவதில் காணப்பட்ட ஆரோக்கியமற்ற போட்டித்தன்மையை மட்டுப்படுத்துவதனையும் கடன்வழங்கல் வட்டி வீதங்களைக் குறைப்பதனையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. வங்கிகளின் ஆலோசனையுடன் விதிக்கப்பட்ட இத்தற்காலிக உச்சவரம்பு 2019 ஏப்பிறல் இறுதியிலிருந்து நான்கு மாதங்களுக்கிடையில் சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதங்களை 284 அடிப்படைப் புள்ளிகளினால் குறைக்க உதவியது. எனினும், வங்கிகளுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதும் வைப்பு வீதங்கள் அதேபோன்று குறுங்கால நிதிகள் மற்றும் அரச பிணையங்கள் போலன்றி, பெரும்பாலான சந்தைக் கடன்வழங்கல் வீதங்களைக் கீழ் நோக்கிக் குறைப்பதில் நெகிழ்ச்சியற்றதன்மையே காணப்பட்டது. 

இத்தகைய பின்னணியொன்றிலேயே மத்திய வங்கி 2019 செத்தெம்பர் 24ஆம் நாளன்று உரிமம் பெற்ற வங்கிகளின் கடன்வழங்கல் வீதங்களின் மீது உச்சவரம்பொன்றினை விதித்தது. குறைவடைந்த  நியதி ஒதுக்குத் தேவைப்பாடுகளின் நியதிகளினைத் தொடர்ந்து நிதியத்தின் செலவில் ஏற்பட்ட வீழ்ச்சி, குறைவடைந்த பணச் சந்தை வட்டி வீதங்கள், குறைவடைந்த கொள்கை வட்டி வீதங்கள் மற்றும் குறைவடைந்த வைப்பு வட்டி வீதங்கள் என்பனவற்றைக் கருத்திற் கொண்டு கடன்வழங்கல் வீதங்களை கீழ் நோக்கிச் சீராக்குவதற்கு வங்கிகளுக்குப் போதுமான கால அவகாசத்தினை வழங்கியதன் மூலம் மத்திய வங்கி வங்கித்தொழில் முறைமையின் சுமுகமான தொழிற்பாடுகளுக்கும் அதேபோன்று இலாபத்தன்மைக்கும் ஏற்படக்கூடிய ஏதேனும் இடையூறுகளைக் குறைப்பதற்கும் எதிர்பார்த்தது. மற்றைய காரணிகள் மாறாது வைக்கப்பட்டிருப்பதனால், கடன்வழங்கல் வீதங்கள் மீது விதிக்கப்படுகின்ற உச்சவரம்பிலிருந்து வங்கித்தொழில் முறைமைக்கு ஏற்படுகின்ற வட்டி வீத இலாபத்தில் பொருண்மிய ரீதியான மாற்றங்கள் ஏற்படும் என மத்திய வங்கி எதிர்பார்க்கவில்லை. மத்திய வங்கி அதன் நடவடிக்கை பற்றி 2020 மாச்சு அளவில் சீராக்கம் செய்வதற்கான அதன் எண்ணத்தினையும் அறிவித்திருக்கிறது.

மேலும், அதிகளவு யதார்த்தம் மிக்க பெயரளவு மற்றும் உண்மைக் கடன்வழங்கல் வீதங்கள் பொருளாதார நடவடிக்கைகளைப் படிப்படியாகத் தூண்டும் எனவும் அதன் மூலம் கொடுகடனுக்கான கேள்வியை அது உத்வேகப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது, குறைந்த வட்டி வீதங்களின் காரணமாக கடன்பாட்டாளர்களின் மேம்பட்ட மீள்கொடுப்பனவு இயலாற்றலுடன் சேர்ந்து, வர்த்தக வங்கிகள் உயர்வடைந்து செல்லும் செயற்படாக் கடன்கள் தொடர்பான சவால்களைக் கட்டுப்படுத்துவது உட்பட, அவை முன்னோக்கிச் செல்வதனையும் வலுப்படுத்தும். ஆகவே, உரிமம் பெற்ற வங்கிகளின் கடன்வழங்கல் வீதத்தின் மீது விதிக்கப்பட்ட உச்சவரம்பு, உண்மையில், மூடிஸ் இன்வெஸ்டர் சேர்விஸ் இனால் தெரிவிக்கப்பட்ட கருத்திற்கு மாறாக, கொடுகடன் நேர்க்கணியத் தன்மையினையே உருவாக்குமென மத்திய வங்கி கருதுகிறது.

Published Date: 

Monday, September 30, 2019