வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2019 யூலை

இறக்குமதிகளில் ஏற்பட்ட வீழ்ச்சியிலும் பார்க்க கூடுதலாக ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்தமையின் காரணமாக 2019 யூலையில் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. பல மாதங்களாகக் காணப்பட்ட உறுதியான வளர்ச்சியின் பின்னர் 2019 யூலையில் ஏற்றுமதி வருவாய்கள் 7.0 சதவீதம் கொண்ட (ஆண்டிற்கு ஆண்டு) வீழ்ச்சியைப் பதிவுசெய்ததுடன் இறக்குமதிச் செலவினம் 2.2 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) வீழ்ச்சியடைந்தது. 

2019 யூலையில் ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு நீர்க்கல எரிபொருளின் குறைந்த விலைகள் காரணமாக பெற்றோலிய உற்பத்திகளிலிருந்தான வருவாய் குறைவடைந்தமையும் முன்னைய ஆண்டின் தொடர்பான மாதத்தில் உயர்ந்த ஏற்றுமதித் தளத்தினைத் தோற்றுவித்த 2018 யூலையில் இடம்பெற்ற கப்பற் கலமொன்றின் ஏற்றுமதியும் காரணங்களாக அமைந்தன. 

2019 யூலையில் வர்த்தகப் பற்றாக்குறை 2019 யூனில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 316 மில்லியன் கொண்ட பற்றாக்குறையுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 717 மில்லியனுக்கு விரிவடைந்தது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் தாக்கத்திலிருந்து சுற்றுலா வருகைகள் குறிப்பிடத்தக்களவிற்கு மீட்சியடைந்தமையை அவதானிக்க முடிந்ததுடன் இது 2019 யூலையில் முன்னைய மாதத்திலும் பார்க்க 83.4 சதவீதம் கொண்ட அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தது.  

2019 யூலையில் தொழிலாளர் பணவனுப்பல்கள் ஐ.அ.டொலர் 626 மில்லியனுக்கு 1.0 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) அதிகரித்தன. ஒன்றுசேர்ந்த அடிப்படையில் தொழிலாளர் பணவனுப்பல்கள் 2019 முதல் ஏழு மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 3,895 மில்லியனாக விளங்கின. 

2019 யூலையில் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் வெளிநாட்டு முதலீடுகள் குறிப்பிடத்தக்களவு உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்த வேளையில் சில வெளிப்பாய்ச்சல்கள் அரச பிணையங்கள் சந்தையில் பதிவுசெய்யப்பட்டன. 

முழுவடிவம்

Published Date: 

Thursday, September 26, 2019