அண்மைய தரமிடல் தீர்மானங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் தரமிடல் முகவர்களுடனான சர்ச்சை

இலங்கையின் நீண்டகாலத் தரமிடலை ‘B+’ (உறுதியான தன்மை) இலிருந்து ‘B’ (உறுதியான தன்மை) தரம் குறைப்பதற்காக 2018 திசெம்பர் 03ஆம் நாளன்று பிட்ஜ் ரேட்டிங்கினாலும் 2018 திசெம்பர் 4ஆம் நாளன்று ஸ்டான்டட் அன்ட் புவரினாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நாட்டின் பேரண்டப் பொருளாதார அடிப்படைகளின் மீதான ஊர்ஜிதப்படுத்தப்படாத அம்சங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என இலங்கை மத்திய வங்கி கருதுகின்றது.

நாட்டின் அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட அண்மைய அபிவிருத்திகளுக்கு மத்தியிலும் பொருளாதாரத்தின் மீது, குறிப்பாக, வெளிநாட்டு நிதியிடல் தேவைப்பாடுகள் மற்றும் படுகடன் கொடுப்பனவுக் கடப்பாடுகளின் மீது அண்மைய அரசியல் அபிவிருத்திகள் கொண்டிருக்கக்கூடிய தாக்கங்களைக் குறைப்பதற்காக இலங்கை மத்திய வங்கியினாலும் அரசாங்கத்தினாலும் அதிகளவான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 2019 சனவரியில் முதிர்ச்சியடைகின்ற ஐ.அ.டொலர் 1 பில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளினதும் 2019 ஏப்பிறலில் முதிர்ச்சியடையும் ஐ.அ.டொலர் 500 மில்லியன்கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளினதும் அரசாங்கத்திற்கான வெளிநாட்டுப் பொறுப்புக்களைப் பூர்த்திசெய்வதற்காக ரூ. 310 பில்லியன் வரையறையை விஞ்சாத தீவிரப் பொறுப்பு முகாமைத்துவ முன்னெடுப்புக்களின் கீழ் வழங்கப்பட்ட வசதிகளுக்கு மேலதிகமாக, உபாயமற்ற சொத்துக்களின் உரித்துநீக்கம் மற்றும்  அண்மையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட கூட்டுக் கடன்கள் என்பனவற்றின் பெறுகைகளிலிருந்து அதிகாரிகள் தாங்கிருப்பு நிதியினை ஏற்கனவே கட்டியெழுப்பியிருக்கின்றனர். ஆண்டின் எஞ்சிய பகுதியில் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 750 மில்லியனிலிருந்து ஐ.அ.டொலர் 1 பில்லியன் வரையிலான இலங்கை அபிவிருத்தி முறிகளின் வழங்கலும், 2019இன் தொடக்கத்தில் மத்திய கிழக்கு மற்றும் கிழக்காசியாவிலிருந்து அரச வங்கிகளுக்கான கொடுகடனை அதிகரிப்பதற்கான மூலங்களும் ஏறத்தாழ நிறைவடையும் நிலையில் இருக்கின்றன. மேலும், 2019 பெப்புருவரியளவில் கூட்டுக்கடன் ஒழுங்குகளுக்கு ஐ.அ.டொலர் 500 மில்லியனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றிற்குப் புறம்பாக, அடுத்த ஆண்டுப்பகுதியில் இருபுடை மற்றும் பல்புடை முகவர்களிடமிருந்து ஏறத்தாழ ஐ.அ.டொலர் 600 மில்லியன் கொண்ட பொறுகைகள் எதிர்பார்க்கப்படுவதன் காரணமாக மேலும் ஆதரவு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே கிடைக்கத்தக்கதாகவுள்ள நிதிகளும் இப்பெறுகைகளும் சேர்ந்து 2019ஆம் ஆண்டுப்பகுதியில் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் அனைத்துக் கொடுப்பனவுகளையும் ஈடு செய்வதற்கு போதுமானதாகவிருக்கும்.

அதேவேளை, ஒதுக்குப் போதுமையினை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன், வெளிநாட்டு நாணய பரஸ்பர பரிமாற்றல் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மத்திய வங்கி, மத்திய வங்கிகளுடனும் சார்க் பரஸ்பர பரிமாற்றல் கட்டமைப்பு போன்ற பிராந்திய நிதியங்களுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கின்றது. இவ்வழிமுறைகள் நாட்டின் வெளிநாட்டு ஒதுக்குப் போதுமையினை மேலும் வலுப்படுத்துவது மாத்திரமின்றி, வெளிநாட்டுக் கடப்பாடுகளை உரிய நேரத்தில் தீர்ப்பனவு செய்வதையும் இயலுமைப்படுத்தும். அதேவேளையில் மிகையான தளம்பல்களைத் தடுப்பதற்காக, வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் எச்சரிக்கையுடன்கூடிய தலையீட்டினை மேற்கொள்வதற்கான வசதியையும் வழங்குகின்றது. வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்கள் உயர்வடைந்தமையின் ஆதரவு காரணமாக அண்மைய நாட்களின் போது செலாவணி வீதத்தில் சாதகமான சீராக்கமொன்று இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாக இருப்பதுடன் இனிவரும் விடுமுறை நாட்களிலும் புத்தாண்டு பண்டிகையின் போதும் இது மேலும் உயர்வடையக்கூடும். மேலும், ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் இறை மற்றும் பேரண்ட முன்மதியுடைய வழிமுறைகள் வெளிநாட்டு வர்த்தக நிலுவையில் மேம்பாடுகளை தோற்றுவிக்குமென எதிர்பார்க்கப்படுவதுடன் இதன்மூலம் வெளிநாட்டு ஒதுக்குகள் மற்றும் செலாவணி வீதத்தின் மீதான அழுத்தம் குறைவடையும்.

அதேவேளை, உருவாக்கப்பட்ட வசதிகள் மற்றும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட படுகடன் முகாமைத்துவ உபாயங்கள் என்பனவற்றினூடாக உள்நாட்டு நிதியிடல் நிலைமைகள் குறிப்பிடத்தக்க மேம்பாட்டினை காட்டுகின்றன. இது, 2019, 2020 மற்றும் நடுத்தர காலப்பகுதியில் திறைசேரி முறிகளினதும் இலங்கை அபிவிருத்தி முறிகளினதும் மீண்டும் மீண்டும் ஏற்படும் தேவைப்பாடுகளை குறைத்திருக்கின்றது. குறிப்பாக, வங்கித்தொழில் துறையினால் புதிதாக கையேற்கப்பட்ட அரச பிணையங்கள் அண்மைய ஆண்டுகளில் ஏறத்தாழ 5 சதவீதத்தினால் அதிகரித்துச் சென்ற போக்கிற்கெதிராக 2018இல் 1.5 சதவீதத்தினால் மாத்திரம் அதிகரித்திருக்கின்றது. 

இலங்கையின் வங்கித்தொழில் மற்றும் நிதியியல் துறை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டின் பாதிக்கப்படும் தன்மைகளுக்கு தாக்குப்பிடிக்கும் விதத்தில் தொடர்ந்தும் காணப்படுவதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது அவசியமானதாகும். தொழிற்பாட்டுச் சூழல் சவாலுக்குரியதாகவிருந்த போதும்கூட வங்கித்தொழில் துறை கடுமையான மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்புக்கு உட்பட்டதாகக் காணப்படுகின்றது. உயர்ந்த மட்ட மூலதனம் மற்றும் திரவத்தன்மை தேவைப்பாடுகளுக்கிணங்யொழுகுவதற்கு வங்கித்தொழில் துறை கடமைப்பட்டிருப்பதானது இச்சவால்களை எதிர்நோக்கும்விதத்தில் இத்துறை தாக்குப்பிடிக்கக்கூடியதாக இருப்பதை எடுத்துகாட்டுகின்றது. இதன்மூலம் வங்கித்தொழில் துறையில் உறுதியான தோற்றப்பாடொன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இச்சாரா மாறிகளை கவனத்தில் கொள்கையில், இலங்கை மத்திய வங்கி பிட்ஜ் ரேட்டிங்கினாலும் ஸ்டான்டட் அன்ட் புவர் ரேட்டிங்கினாலும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தரமிடல் நடவடிக்கைகள் தேவையற்றது என்ற கருத்தினைக் கொண்டிருக்கின்றது. அத்தகைய நடவடிக்கை அரசியலின் நிச்சயமற்ற தன்மையின் சர்ச்சையை எடுத்துக்காட்டுகின்றதேயொழிய பேரண்டப் பொருளாதாரக் கொள்கைகள் அல்லது அடிப்படைகளிலிருந்து நழுவிச்சென்றமைக்கான சான்றுகளை காட்டுகின்றதென நியாயப்படுத்தமுடியாது. அடிப்படை பேரண்டப் பொருளாதார நிலைமைகள் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் ஐந்தாவது மீளாய்வு தொடர்பில் பன்னாட்டு நிதியத்துடன் அடையப்பட்ட கோட்பாட்டு ரீதியான அலுவலர்மட்ட உடன்படிக்கையின் மூலம் வலுப்படுத்தப்பட்டிருக்கின்றது.  

Published Date: 

Tuesday, December 4, 2018