ஸ்ரான்டட் கிறெடிட் பினான்ஸ் லிமிடெட் - 2011 ஆண்டின் 42ஆம் இலக்க நிதி வியாபாரச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உரிமத்தினையும் 2000 ஆண்டின்56ஆம் இலக்க நிதிக் குத்தகைக்குவிடல் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழினையும் இரத்துச் செய்தல்

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதி வியாபாரச் சட்டத்தின் கீழ் உரிமமளிக்கப்பட்ட உரிமம் பெற்ற நிதிக் கம்பனியொன்றான ஸ்ரான்டட் கிறெடிட் பினான்ஸ் லிமிடெட், 2008 முதல் திரவத்தன்மை நெருக்கடியினை எதிர்கொண்டிருந்தது. கம்பனியின் வைப்பாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் தமது பணத்தினை மீளப்பெற முடியாதுள்ளனர். வேறுபட்ட உபாயங்களூடாக கம்பனிக்கு புத்துயிரளிப்பதற்கு எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன. தற்போதைய நிலைமையினைத் தொடர்வது வைப்பாளர்களின் நலவுரித்துக்களுக்கும் கம்பனியின் ஏனைய ஆர்வலர்களுக்கும் மேலும் கெடுதலை உருவாக்கும்.

ஆகவே, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2018 யூலை 25 தொடக்கம் செயற்படத்தக்கவாறு 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதி வியாபாரச் சட்டத்தின் கீழ் ஸ்ரான்டட் கிறெடிட் பினான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்துச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, ஸ்ரான்டட் கிறெடிட் பினான்ஸ் லிமிடெட் நிறுவனமானது 2018 யூலை 25 முதல் செயற்படத்தக்கவாறு 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதி வியாபாரச் சட்டத்தின் கீழ் நிதி வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படாது.

மேலும், இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்தின் பணிப்பாளர், 2018 யூலை 25 தொடக்கம் செயற்படத்தக்கவாறு 2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதிக் குத்தகைக்குவிடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நிதிக் குத்தகை நிறுவனமொன்றாக ஸ்ரான்டட் கிறெடிட் பினான்ஸ் லிமிடெட்டின் பதிவுச் சான்றிதழினை இரத்துச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளார். அதற்கமைய, ஸ்ரான்டட் கிறெடிட் பினான்ஸ் லிமிடெட் 2018 யூலை 25 தொடக்கம் செயற்படத்தக்கவாறு நிதிக் குத்தகைக்குவிடல் சட்டத்தின் கீழ் புதிய நிதிக் குத்தகைக்குவிடல் வசதிகளை வழங்குவதற்கு அனுமதிக்கப்படாது.

இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித்திட்டத்தின் ஒழுங்குவிதிகளுக்கமைவாக வைப்பாளர் ஒருவருக்கு உயர்ந்தபட்சம் ரூ.600,000/- வரை ஸ்ரான்டட் கிறெடிட் பினான்ஸ் லிமிடெட்டின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித்திட்டம் அவசியமான நடவடிக்கைகளை எடுக்கும். மேலும், வைப்பாளர்கள், கோரிக்கைகள் முன்னுரிமைக்குட்பட்டு தீர்த்துக்கட்டல் செயன்முறையின் போது அவர்களது எஞ்சியுள்ள வைப்புக்களின் பாகத்தினை மீட்கக்கூடியதாகவிருக்கும். 

கம்பனியின் அனைத்துக் கடன்படுநர்களும் கம்பனியினால் அறிவிக்கப்பட்ட வங்கிக் கணக்கொன்றினூடாக தமது நிலுவைகளை கம்பனிக்குச் செலுத்துமாறு வேண்டப்படுகின்றனர். கம்பனியின் தவறான முகாமைத்துவம் மற்றும் மோசடியான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான தரப்பினருக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதனை இலங்கை மத்திய வங்கி வலியுறுத்த விரும்புகின்றது.

 

Published Date: 

Wednesday, July 25, 2018