இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மாற்றமின்றிப் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை 2018 மே 10ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்தது. இதற்கமைய துணைநில் வைப்பு வசதி வீதமும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதமும் முறையே 7.25 சதவீதத்திலும் 8.50 சதவீதத்திலும் தொடர்ந்தும் காணப்படும். சபையினது இத்தீர்மானத்தின் நோக்கம் யாதெனில், நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டத்தில உறுதிப்படுத்துவதும் அதன் மூலம் இலங்கைப் பொருளாதாரத்தின் சாதகமான வளர்ச்சித் தோற்றப்பாட்டிற்குப் பங்களிப்பதுமேயாகும்.

குறுங்காலத்தில் வழங்கல்பக்க தூண்டுதல்களில் ஏற்பட்ட மெதுவான அதிகரிப்பின் பின்னர் பணவீக்கம் நடு ஒற்றை இலக்க மட்டத்தில் உறுதியடைந்தது

சாதகமான உள்நாட்டு வழங்கல் நிலைமைகளின் காரணமாக, தளம்பலடைந்த உணவு விலைகள் குறைவடைந்தமையினால் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினையும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினையும் அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து ஒற்றை இலக்க மட்டமொன்றினை அடைந்தது. அதேவேளை, மையப் பணவீக்கம் தொடர்ந்தும் குறைவடைந்து கேள்வி அழுத்தங்கள் கட்டுப்படுத்தப்பட்டமையினை எடுத்துக்காட்டிய வேளையில், பணவீக்க எதிர்பார்ப்புக்கள் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தன. எனினும், உள்நாட்டு பெற்றோலிய உற்பத்திகள் திரவப் பெற்றோலிய வாயு மற்றும் பால்மா என்பனவற்றின் மேல் நோக்கிய விலைத் திருத்தங்களின் தாக்கம் காரணமாக குறுங்காலத்தில் பணவீக்கம் தற்காலிகமாக உயர்வடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கூட, இம்மாற்றமடைகின்ற நிரந்தரமற்ற வழங்கல்பக்க தூண்டல் விலை அழுத்தங்கள் மறைந்து உள்நாட்டு உணவு வழங்கல்கள் மேலும் முன்னேற்றமடைவதுடன் பணவீக்கம் 2018இன் பின்னரைப்பகுதியில் விரும்பத்தக்க நடு ஒற்றை இலக்கத்திற்கு உறுதியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர காலப்பகுதியில் பணவீக்கம் 4-6 சதவீத இலக்கிடல் வீச்சில் தொடர்ந்தும் காணப்படுமென எறிவு செய்யப்பட்டுள்ளது.

2018இல் பொருளாதார வளர்ச்சி மீட்சியடையும்

2017இல் காணப்பட்ட குறைந்த வளர்ச்சிச் செயலாற்றத்திற்குப் பின்னர் 2018இல் இலங்கையின் பொருளாதாரத்தில் மிதமான மீட்சியொன்று காணப்பட்டமைக்கு உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகள் வலுவடைந்து வருகின்றமையும் உள்நாட்டு நிலைமைகள் மேம்பட்டு வருகின்றமையும் காரணங்களாக அமைந்தன. முன்னோக்கிய குறிகாட்டிகள் வேளாண்மைத் துறையின் மிதமான மீட்சியின் பின்னணியில் பொருளாதாரச் செயலாற்றம் மேம்படுமென்பதனையும் கைத்தொழில் மற்றும் பணிகள் துறைகளில் சாதகமான உத்வேகமொன்று தொடர்ந்தும் காணப்படுமென்பதனையும் எடுத்துக்காட்டுகின்றன. தொடர்ச்சியான இறைத்திரட்சி முயற்சிகள் வளர்ச்சி வாய்ப்புக்களை ஓரளவிற்கு குறைக்கின்ற வேளையில்இ இறை ஒழுங்குகளிலிருந்து பொருளாதாரம் பெறக்கூடிய பேரண்டப் பொருளாதார நன்மைகள் நடுத்தர காலப்பகுதியில் உறுதியான வளர்ச்சியொன்றை உறுதிப்படுத்தும். எதிர்பார்க்கப்பட்ட அமைப்பியல் சீர்திருத்தங்களின் நடைமுறைப்படுத்தல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் எதிர்பார்க்கப்பட்ட உட்பாய்ச்சல்கள் கிடைத்தமைஇ தூண்டுதலளிக்கும் தாழ்ந்த பணவீக்கச் சூழல், போட்டித்தன்மைமிக்க செலாவணி வீதம் என்பன ஒன்றுசேர்ந்து நடுத்தர காலப்பகுதியில் பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த வளத்தினை பயன்படுத்திக் கொள்வதனை இயலச்செய்யும்.

2018 ஏப்பிறலில் தளர்த்தப்பட்ட கொள்கைக்கு பதிலிறுத்தும் விதத்திலமைந்த குறுங்கால சந்தை வீதங்கள்

2018 ஏப்பிறலின் கொள்கை வீதச் சீராக்கங்களுக்குப் பதிலிறுத்தும் விதத்தில் ஓரிரவு வட்டி வீதங்கள் கொள்கை வீத வீச்சு குறுக்கமடைந்து ஏறத்தாழ நடுப்புள்ளியில் உறுதியடைந்திருக்கிறது. குறுங்கால வட்டி வீதங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியுடன் இசைந்து செல்லும் விதத்தில் ஏனைய சந்தை வட்டி வீதங்கள், குறிப்பாக கடன்வழங்கல் மீதான வட்டி வீதங்கள் எதிர்வரும் காலத்தில் கீழ் நோக்கிச் சீராக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் வளர்ச்சி ஏறத்தாழ எதிர்பார்க்கப்பட்ட மட்டமொன்றினைச் சுற்றிக் காணப்பட்ட போதும், 2018 மாச்சில் உயர்ந்த பருவ கால கொடுகடன் கேள்வி அவதானிக்கப்பட்டிருக்கிறது. 2018 மாச்சு இறுதிவரையான தரவுகளின் அடிப்படையில், தனியார் துறைக் கொடுகடன் பொருளாதாரத்தின் அனைத்து முக்கிய துறைகளுக்கும் நியாயமான விதத்தில் பகிரப்பட்டுள்ளமையினை அவதானிக்க முடிகிறது. பருவ காலத்தை அடிப்படையாகக் கொண்ட விழாக்கால கொடுகடன் விரிவாக்கத்தின் விளைவாக 2018 மாச்சில் விரிந்த பணத்தின் வளர்ச்சி சிறிதளவால் அதிகரித்தது. எனினும், விரிந்த பணத்தின் வளர்ச்சி 2018 இறுதியளவில் ஏறத்தாழ 15 சதவீதத்தில் உறுதியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

இறுக்கமான உலகளாவிய நிதியியல் நிலைமைகளுக்கு மத்தியிலும் அலுவல்சார் ஒதுக்குகள் தொடர்ச்சியாகக் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றன

2018இன் முதல் இரண்டு மாத காலப்பகுதியில் ஏற்றுமதி வருவாய்கள் அதிகரித்தமையின் காரணமாக ஏற்றுமதிகள் சாதகமான உத்வேகமொன்றினைப் பேணின. எனினும்இ தங்கம் மற்றும் உந்து ஊர்திகளின் பாரிய இறக்குமதிகளின் காரணமாக இறக்குமதிகளின் செலவினம் ஏற்றுமதிகளை விஞ்சிக் காணப்பட்டமையின் விளைவாக வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. தங்க இறக்குமதிகள் மீது சுங்கத் தீர்வை விதிக்கப்பட்டமையானது வர்த்தகப் பற்றாக்குறையை ஓரளவிற்குக் குறைப்பதற்கு உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுற்றுலா மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பனவற்றிலிருந்தான வருவாய்கள் தொடர்ந்தும் அவற்றின் வளர்ச்சிச் செயலாற்றத்தினைக் காட்டின. இறுக்கமான உலகளாவிய நிதியியல் நிலைமைகளின் காரணமாக ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட அரச பிணையங்கள் சந்தை தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைக் கொண்டிருந்த வேளையில், கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை இதுவரையான இவ்வாண்டுப்பகுதியில் தேறிய உட்பாய்ச்சலை கவர்ந்து கொண்டது. இவ்வபிவிருத்திகளுக்கு மத்தியில், மத்திய வங்கி 2018இன் ஏப்பிறல் இறுதி வரையான காலப்பகுதியில் உள்நாட்டுச் சந்தையிலிருந்து ஐ.அ.டொலர் 458.5 மில்லியன் கொண்ட தேறிய வெளிநாட்டுச் செலாவணியினை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. 2018 ஏப்பிறலில் இடம்பெற்ற நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வெற்றிகரமான வழங்கல், உள்நாட்டுச் சந்தையிலிருந்து மத்திய வங்கியினால் கொள்வனவு செய்யப்பட்ட வெளிநாட்டுச் செலாவணி என்பனவற்றின் காரணமாக மொத்த அலுவல்சார் ஒதுக்கு நிலைமை 2018 ஏப்பிறல் இறுதியளவில் ஐ.அ.டொலர் 9.9 பில்லியனுக்கு மேம்பட்டிருந்ததுடன் வரலாற்றிலேயே மிக உயர்ந்த மட்டத்தினையும் பதிவுசெய்தது. இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் செலாவணி வீதம் ஐ.அ.டொலரிற்கு எதிராக 3.1 சதவீதத்தினால் தேய்வடைந்திருக்கிறது. இத்தேய்வில் பெரும்பங்கு ஏப்பிறல் இறுதியிலும் மேயின் ஆரம்பத்திலும் ஏற்பட்டிருக்கின்றமையானது உலகளாவிய சந்தையில் ஐ.அ.டொலர் பரந்த அடிப்படையில் வலுவடைந்து வருகின்றமையினை பிரதிபலிப்பதாகவுள்ளது. செலாவணி வீதத்தின் மிகையான தளம்பலைத் தணிப்பதற்காக மத்திய வங்கி உள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் தலையிட்டதுடன் ரூபா உறுதியடைவதற்கான அறிகுறிகளையும் காட்டியது.  

ஒற்றை இலக்க மட்டங்களில் பணவீக்கத்தினை உறுதியடையச் செய்வதற்காக கொள்கை நிலை மாற்றப்படவில்லை

நடைமுறை அபிவிருத்திகள் மற்றும் முக்கிய பேரண்ட பொருளாதார மாறிகளுக்கான தோற்றப்பாடு என்பனவற்றின் அடிப்படையில், மத்திய வங்கியின் நாணயச் சபை தற்போதைய நாணயக் கொள்கை நிலையினை தொடர்வது பொருத்தமானதாக இருக்குமென்ற கருத்தினைக் கொண்டிருந்தது. இத்தீர்மானத்திற்கு வருவதற்கு, நாணயச் சபை அண்மைய உலகளாவிய சந்தை அபிவிருத்திகள், நிருவிக்கப்பட்ட விலைகளில் அண்மையில் செய்யப்பட்ட சீராக்கங்களின் பேரண்டப் பொருளாதாரத் தாக்கம் மற்றும் 2018 ஏப்பிறலில் கொள்கை வீதங்களில் செய்யப்பட்ட சீராக்கங்களின் சந்தை மற்றும் பொருளாதாரத் தாக்கங்களை மதிப்பிடுவதற்கு இன்னும் கூடியளவு காலம் தேவை என்ற யதார்த்த நிலைமை என்பனவற்றைப் பரிசீலனையில் கொண்டிருந்தது.

இதன்படி, நடுத்தர காலப்பகுதியில் நடு ஒற்றை இலக்கத்தில் பணவீக்கத்தினை உறுதிப்படுத்துவதன் மீது மத்திய வங்கி கொண்டிருக்கும் கவனத்துடன் இசைந்து செல்லும் விதத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்கு நாணயச் சபை தீர்மானித்தது.

நாணயக் கொள்கைத் தீர்மானம்: கொள்கை வீதங்கள் மாற்றமடையவில்லை
துணைநில் வைப்பு வசதி வீதம் 7.25%
துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் 8.50%
நியதி ஒதுக்கு விகிதம் 7.50%

 

 

 

 

 

 

தகவல் குறிப்பு:

ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களுடனான பத்திரிகை மாநாடு இன்று (2018 மே 11) நண்பகல் 12.00 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் ஜோன் எக்ஸ்ரர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்.

நாணயக் கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2018 யூன் 29ஆம் நாள் வெளியிடப்படும்.

 முழுவடிவம்

                

 

 

 

 

Published Date: 

Friday, May 11, 2018