ஈ.ரி.ஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸியல் சேர்விஸ்; பிஎல்சி நிறுவனங்கள் மீது இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்படும் ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கை

இரண்டு கம்பனிகளினதும் வைப்பாளர்கள் மற்றும் ஏனைய கடன் வழங்குநர்களின் நலவுரித்துக்களைப் பாதுகாக்கும் நோக்குடனும் நிதியியல் முறைமையின் பாதுகாப்பினையும் ஆற்றல் வாய்ந்தமையினையும் உறுதிசெய்வதற்குமாக ஈ.ரி.ஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸியல் சேர்விஸ் பிஎல்சி நிறுவனங்களின் பலயீனமான நிதியியல் செயலாற்றத்தினை கருத்திற்கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை 2018.01.01 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் உடனடியாக நடைமுறைக்கு வரும்விதத்தில், தற்காலிக நடவடிக்கையொன்றாக, பின்வரும் ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.

1.  இரு கம்பனிகளினதும் விவகாரங்களை முகாமைசெய்வதற்கு குழுவொன்றினை நியமித்தல்.
2.  முதிர்ச்சியடைகின்ற வைப்புக்களின் மீளப்பெறுகையினை கட்டுப்படுத்தல் மற்றும் அத்தகைய வைப்புக்களை ஆறுமாத காலப்பகுதியொன்றுக்கு மீளப் புதுப்பித்தல்.
3.  இணங்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கிணங்க வைப்புக்களுக்கான வட்டி நிலுவையினை கொடுப்பனவு செய்தல்.

அதேவேளை, கம்பனிகள், வாய்புமிக்க முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்யலாம் என்பதுடன் ஏற்புடைய சட்டங்களுக்கும் ஒழுங்குவிதிகளுக்கும் அமைவாக இலங்கை மத்திய வங்கி பொருத்தமான முதலீட்டாளர்களுக்கு வசதியளிக்கும். வைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மத்திய வங்கியானது மேலதிக நடவடிக்கைகளை எடுத்துவருவதுடன் கம்பனிகளின் தொழிற்பாடுகளை உன்னிப்பாக கண்காணிக்கின்றது என்பதனை மேற்குறித்த இரண்டு கம்பனிகளினதும் வைப்பாளர்களுக்கு அறியத்தருவதுடன், இதனால் ஈ.ரி.ஐ மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸியல் சேர்விஸ் பிஎல்சி நிறுவனங்களின் உறுதிப்பாட்டினை உறுதி செய்வதற்கான அதன் முயற்சிகளில் மத்திய வங்கியுடன் ஒத்துழைக்குமாறு வைப்பாளர்கள் வேண்டப்படுகின்றனர்.

மேலதிக விளக்கங்களுக்கு, 011 2477258 அல்லது 011 2477229 என்ற தொலைபேசி இலக்கங்க;டாக மத்திய வங்கியின் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்தினை வைப்பாளர்கள் தொடர்பு கொள்ளலாம்.

 

Published Date: 

Tuesday, January 2, 2018