இடர்ப்பாட்டிலுள்ள நிதிக் கம்பனிகள் மீதான ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகள்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித் தொழில்  சட்டத்தின் கீழ், நிதித் தொழிலைக் கொண்டு நடத்துவதற்காக சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இற்கு வழங்கிய உரிமத்தினை இரத்துச் செய்வதற்கான அறிவித்தலை விடுப்பதற்கு 2017.11.06ஆம் திகதி தீர்மானித்திருக்கின்றது.

சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, அக்கம்பனியின் முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தவறான முகாமைத்துவம் மற்றும் ஒழுங்கற்ற கொடுக்கல்வாங்கல்களின் காரணமாக 2013ஆம் ஆண்டிலிருந்து கடுமையான திரவத்தன்மை நெருக்கடிகளை எதிர்நோக்கியது. இக்கம்பனிகளின் பணிப்பாளர்களும் மூத்த முகாமைத்துவமும் சொத்துக்களின் பெறுமதியினை மோசடியான முறையில் பெருப்பித்துக் காட்டியமை அவதானிக்கப்பட்டிருப்பதுடன் அத்தகைய சொத்துக்களுடன் தொடர்பான ஆவணங்களின் பரீட்சிப்புக்கள் அவை ஒன்றில் புனையப்பட்டனவாகவோ அல்லது வில்லங்கமான முறைகளுடன் சிக்க வைக்கப்பட்டனவாகவோ இருப்பதனை எடுத்துக்காட்டின.

கம்பனியானது 2014இலிருந்து தொழிற்படவில்லை. இக்காலப்பகுதியில், இக்கம்பனியில் முதலீடு செய்து புத்துயிரளிப்பதற்கு ஆர்வத்தினை வெளிப்படுத்திய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தனிப்பட்டவர்களுடன் மத்திய வங்கி கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தது. எந்தவொரு  புத்துயிரளிக்கும் திட்டத்திற்கும் குறைந்தபட்சம் ரூ.3 பில்லியன் முதலீடுகள் தேவைப்படும் என்பதனையும் குறைந்தபட்சம் 30-40 சதவீதமான வைப்புக்கள் கடந்த 4 ஆண்டு காலமாக அவற்றின் மீது வட்டியோ அல்லது முதலோ செலுத்தப்படாமல் இருப்பதனால் அவற்றை உடனடியாக மீளச் செலுத்த வேண்டுமென்பதனைத் தெளிவுபடுத்த நாணயச் சபை விரும்புகின்றது. அதேநேரம் முதலீட்டாளர்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களாக இருக்கும் சந்தர்ப்பத்தில், முதலீட்டாளர்கள் நம்பகத்தன்மை கொண்டவர்களாக இருக்க வேண்டுமென்பதுடன் நிதிகள் சட்ட ரீதியான வழிகள் மூலம் இலங்கைக்கு மாற்றல் செய்யப்படலும் வேண்டும்.

கம்பனியின் மொத்த வைப்புப் பொறுப்புக்கள் ஏறத்தாழ ரூ.3.5 பில்லியனாகவும் வைப்பாளர்களின் எண்ணிக்கை 4,092 ஆகவும் காணப்பட்டன. இதில், 2,501 வைப்பாளர்கள் ரூ.600,000 இற்கும் குறைவான வைப்புக்களைக் கொண்டிருக்கின்றனர். தற்போதைய ஒழுங்குவிதிகளின்படி, இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் கீழ் செலுத்தப்படக்கூடிய உயர்ந்தபட்சத் தொகை ரூ.300,000 ஆகும். எனினும், நாணயச் சபை சிறிய வைப்பாளர்களுக்கு அளித்த உறுதிமொழியினைப் பரிசீலனையில் கொண்டு இழப்பீட்டினை ரூ.300,000 இலிருந்து ரூ.600,000 இற்கு இருமடங்காக்குவதற்குத் தீர்மானித்திருக்கிறது. இதன்படி, சென்றல் இன்வெஸ்ட்மன்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சியைப் பொறுத்தவரை 61 சதவீதமான வைப்பாளர்களின் வைப்புக்கள் முழுமையாகத் தீர்ப்பனவு செய்யப்படும்.

இலங்கை மத்திய வங்கியானது இரத்துச் செய்யும் அறிவித்தல் எச்சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்டதோ அச்சட்டமான 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதியொன்றிற்குள் கம்பனி அதன் ஆட்சேபனைகளை நாணயச் சபைக்குச் சமர்ப்பிப்பதற்கான உரிமையைக் கொண்டுள்ளது என்பதனை சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் வைப்பாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் அறிவித்துக் கொள்கிறது. மேலும், முதலீட்டாளர்களாக வரக்கூடிய சாத்தியமுடைய முதலீட்டாளர்களுக்கு நிதியின் கிடைப்பனவினை நிரூபிப்பதற்குப் பல தடவைகள் கால நீடிப்பினை வழங்கிய போதும் அவர்கள் இன்னமும் அதனை நிறைவேற்றவில்லை என்பதனையும் தெரிவித்துக் கொள்வது முக்கியமானதாகும். 

“ஸ்ரான்டட் கிறடிட் பினான்ஸ் லிமிடெட்” மற்றும் “சிற்றி பினான்ஸ் கோப்பரேசன் லிமிடெட்” என்பனவற்றைப் பொறுத்தவரை, இவ்விரண்டு கம்பனிகளினதும் சட்டப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டியிருப்பதனால் நாணயச் சபை இரத்துச் செய்தல் அறிவித்தலை வழங்கவில்லை.

இக்கம்பனிகளின் வைப்பாளர் நிதியினை மோசடி செய்யவும் பிழையாகப் பயன்படுத்தவும் பொறுப்பாக இருந்தவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு இலங்கை மத்திய வங்கி அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்பதனை அறியத்தர விரும்புகிறது. 

Published Date: 

Tuesday, December 5, 2017