அரச பிணையங்கள் சந்தையின் வெளிப்படையான தன்மை மேலும் மேம்படுத்தப்படுகிறது

இரண்டாவது கட்டமாக, 2016.09.15 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் அரச பிணையங்கள் இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்களுக்காக, புளும்பேர்க் இலத்திரனியல் முறிகள் வர்த்தகப்படுத்தல் தளத்தில் வர்த்தக வங்கிகள் இணைந்து கொண்டன. இதற்கு முன்னதாக, அனைத்து முதனிலை வணிகர்களும் வர்த்தகத் தளத்தில் 2016.08.01இல் இணைந்து கொண்டனர். ஆகவே, தற்பொழுது அனைத்து முதனிலை வணிகர்களும் வங்கிகளும் இத்தளத்தில் தமக்கிடையே வர்த்தகப்படுத்தல்களை மேற்கொண்டதுடன், ரூ.50 மில்லியனுக்கும் அதற்கு மேற்பட்டதுமான தொகையைக் கொண்ட வணிகங்களைக் கொண்ட முதலீட்டாளர்கள் தொடர்பான அனைத்து வணிகங்களும் 30 நிமிடங்களுக்குள் கருமபீடங்களிலேயே மேற்கொள்ளப்பட்டன. மத்திய வங்கி, மறுநாள், வர்த்தகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு பிணையத்தினதும் அடிப்படை விளைவுகள் மற்றும் அளவுகள் மீதான அடிப்படை வர்த்தகத் தகவல்களை அதன் வெப்தளத்தில் வெளியிடுகிறது. 2016.08.01 இலிருந்து 2016.09.15 வரையான 32 சந்தை நாட்களில் வெளியிடப்பட்ட பிணையங்களின் பெரும்பாலானவற்றின் வர்த்தகத்தில் ரூ.218.7 மில்லியன் கொண்ட 1,816 எண்ணிக்கை கொண்ட உடனடி கொடுக்கல்வாங்கல்கள் இடம்பெற்றன. எதிர்காலத்தில் மத்திய வங்கி அத்தகைய சந்தை தொடர்பான தகவல்களை நண்பகலிலும் நாளின் இறுதியிலுமாக நாளொன்றிற்கு இரு தடவைகள் வெளியிடும். இதற்கமைய, அனைத்து ஆர்வலர்களும் வெளிப்படையானதன்மை, விலையினைக் கண்டறிதல் மற்றும் சந்தையிலுள்ள இவ்வர்த்தகப்படுத்தல் தளத்தினூடாக உருவாக்கப்பட்ட திரவத்தன்மை என்பனவற்றிலிருந்து தோன்றுகின்ற நன்மைகளின் பயனை அனுபவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இலங்கையில் அரச பிணையங்கள் சந்தையின் அபிவிருத்தியில் அடையப்பட்ட இக்குறிப்பிடத்தக்க மைல்கல்லிற்கு ஆதரவளித்த அனைத்து ஆர்வலர்களுக்கும் மத்திய வங்கி அதன் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. அடுத்த கட்டமாக, மத்திய வங்கி இவ்விலத்திரனியல் முறி வர்த்தகப்படுத்தல் தளத்திற்கு மீள்கொள்வனவு/ நேர்மாற்று மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல்களை அறிமுகப்படுத்துவதற்கு தற்பொழுது பரிசீலித்து வருகின்றது.

 

Published Date: 

Saturday, September 17, 2016