வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - செத்தெம்பர் 2017

2017 செத்தெம்பரில் ஏற்றுமதித் துறைச் செயலாற்றமானது ஏற்றமதிகளில் ஏற்பட்ட இரட்டை இலக்க வளர்ச்சியினால் தூண்டப்பட்டு தொடர்ந்து மூன்றாவது மாதமாக மாதாந்த ஏற்றுமதிகளை ஐ.அ.டொலர் 1 பில்லியன் அளவினை விஞ்சிக் காணப்பட்டன. எனினும், இம்மாத காலப்பகுதியில் எரிபொருள் மற்றும் அரிசி என்பனவற்றின் உயர்ந்த இறக்குமதிகள் காரணமாக வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. 2016 செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் முக்கிய சேரிடங்களிலிருந்து வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் ஓரளவு குறைந்த எண்ணிக்கை காரணமாக சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் இம்மாத காலப்பகுதியில் மிதமாக வீழ்ச்சியடைந்தன. 2017இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்களில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியின் விளைவாக செத்தெம்பரிலும் தொழிலாளர் பணவனுப்பல்கள் தொடர்ந்தும் மிதமானதாகக் காணப்பட்டது. எனினும், தொடர்ச்சியான முதலீட்டாளர் நம்பிக்கையினைப் பிரதிபலிக்கின்ற விதத்தல், சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கானது கொழும்புப் பங்குச் சந்தை மற்றும் அரச பிணையங்கள் சந்தை என்பனவற்றிற்கான உயர்ந்த வெளிநாட்டு உட்பாய்ச்சல்களின் காரணமாக இம்மாத காலப்பகுதியில் தொடர்ந்தும் பலம் பெற்றது. இதனைத் தொடர்ந்து 2017 செத்தெம்பர் இறுதியில் திரண்ட நிலுவை ஐ.அ.டொலர் 2 பில்லியன் கொண்ட மிகையினைப் பதிவுசெய்தது. அதேவேளை, மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2016 இறுதியின் ஐ.அ.டொலர் 6.0 பில்லியனிலிருந்து 2017 செத்தெம்பர் இறுதியில் ஐ.அ.டொலர் 7.3 பில்லியனுக்கு அதிகரித்தது.

முழுவடிவம்

Published Date: 

Monday, November 27, 2017