நாணயக் கொள்கை மீளாய்வு - 2016 திசெம்பர்

இலங்கை தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தற்காலிக மதிப்பீடுகளின்டி, 2016இன் மூன்றாம் காலாண்டுப்பகுதியில் இலங்கையின் பொருளாதாரம் முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியின் 5.6 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 4.1 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2016இன் மூன்றாம் காலாண்டுப் பகுதியில் பணிகள் துறை 4.7 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ள வேளையில் கைத்தொழில் நடவடிக்கைகள் 6.8 சதவீதம் கொண்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்தன. எனினும் வேளாண்மையுடன் தொடர்பான நடவடிக்கைகள; தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக சுருக்கத்தினைப் பதிவு செய்து 1.9 சதவீதத்தினால் குறைவடைந்தமைக்கு 2016இன் மூன்றாம் காலாண்டில் நிலவிய மோசமாக வானிலை நிலமைகளின் தாக்கமே காரணமாகும். முன்னணிப் பொருளாதார குறிகாட்டிகளில் காணப்பட்ட சாதகமான அபிவிருத்திகள் அதே போன்று 2015இல் நான்காம் காலாண்டில் காணப்பட்ட தாழ்ந்ததளம் என்பன, மோசமான வானிலை நிலமைகள் மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மை என்பனவற்றிறகு; மத்தியிலும் 2016இன் நான்காம் காலாண்டில் பொருளாதாரத்தின் மேல்நோக்கிய வளர்ச்சிக்கு வழிகாட்டின. 

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் (கொ.நு.வி.சு 2006/07=100) ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 நவம்பரில் 3.4 சதவீதத்திலிருந்து 2016 திசெம்பரில் 4.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. நவம்பர் மாதத்தில், தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணினால் அளவிடப்பட்டவாறான (தே.நு.வி.சு 2013=100) முதன்மைப் பணவீக்கம் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்து அரசாங்கத்தின் பரிமாற்றல்களை பிரதிபலித்தது. இதன் விளைவாக கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின்படி மையப்பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில்) 2016 நவம்பரில் 5.1 சதவீதத்திலிருந்து 2016 திசெம்பரில் 6.3 சதவீதத்திற்கு விரிவடைந்த வேளையில் நுகர்வோர் விலைச்சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட மையப்பணவீக்கம் 2016 ஒத்தோபரின் 5.7 சதவீதத்திலிருந்து 2016 நவம்பரில் 6.8 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது. இத்தகைய   மாற்றமடைந்துவரும் தன்மைகளுக்கு மத்தியிலும், பணவீக்கம் இனிவரும் காலத்திலும் சராசரியாக நடுஒற்றை இலக்க மட்டத்தில் தொடர்ந்து காணப்படும் போல் தெரிகிறது.

நாணயத் துறையில் வர்த்தக வங்கிகளினால் தனியார் துறையினருக்கு வழங்கப்பட்ட கொடுகடனின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்ட வீழ்ச்சியைக் காட்டியதுடன் முன்னைய மாதத்தின் 25.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 ஒத்தோபரில் 22.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. எனினும், உண்மையான நியதிகளில் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனில் காணப்பட்ட தேறிய வளர்ச்சி 2016 ஒத்தோபரில் ரூ.79.0 பில்லியனில் உயர்மட்டத்தில் காணப்பட்டது. அதேவேளையில், வர்த்தக வங்கிகளிலிருந்து அரச துறைக்கு கிடைத்த கொடுகடன் 2016 ஒத்தோபரில் மிதமாக அதிகரித்தது. இதன்படி, விரிந்த பணத்தின் (M2b) வளர்ச்சி ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், 2016 செத்தெம்பரின் 18.4 சதவீதத்திலிருந்து ஒத்தோபரில் 17.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. உள்நாட்டு பணச்சந்தையில் ரூபாவின் திரவத்தன்மை திசெம்பரில் மிகை மட்டத்திற்கு திரும்பிய வேளையில்; மத்திய வங்கியினால் பின்பற்றப்பட்ட இறுக்கமான நாணய வழிமுறைகளுக்கு பதிலிறுத்தும் விதத்தில் அதிகரித்த சந்தை வட்டிவீதங்கள் இம்மாதகாலத்தில் பரந்தளவில் உறுதியடைந்திருப்பது போல் தோன்றுகிறது. 

வெளிநாட்டுத் துறையில், இறக்குமதி மீதான செலவினத்தில் ஏற்பட்ட ஒரே தடவையிலான அதிகரிப்பின் தாக்கத்தின் முக்கிய காரணமாக 2016 ஒத்தோபரில் வர்த்தக நிலுவையின் பற்றாக்குறை கணிசமாக அதிகரித்தது. சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்களும் அதேபோன்று தொழிலாளர் பணவலுப்பல்களும் ஆரோக்கியமான வேகமொன்றில் தொடர்ச்சியாக அதிகரித்தன. மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2016 நவெம்பர் இறுதியில் ஐ.அ.டொலர் 5.6 பில்லியனில் மதிப்பிடப்பட்ட வேளையில் இலங்கை ரூபா, ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலருக்கெதிராக 3.6 சதவீதத்தினால் தேய்வடைந்தது. 

மேலே ஆராயப்பட்ட அபிவிருத்திகளைப் பரிசீலனையில் கொண்டு நாணயச் சபை 2016 திசெம்பர் 30ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் தற்போதைய நாணயக் கொள்கை நிலை பொருத்தமானது என்ற கருத்தினைக் கொண்டிருந்தது. இதன்படி, நாணயச்சபை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் எவ்விதமாற்றமுமின்றி முறையே 7.00 சதவீதத்திலும் 8.50 சதவீதத்திலும் பேணுவதென தீர்மானித்தது.

நாணயக் கொள்கைத் தீர்மானம்:       கொள்கை வீதங்கள் மாற்றமடையவில்லை

துணைநில் வைப்பு வசதி வீதம்                    7.00%

துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம்      8.50% 

நியதி ஒதுக்கு விகிதம்                                   7.50%

 

Published Date: 

Friday, December 30, 2016