நாணயக்கொள்கை மீளாய்வு: இல. 06 - 2023 ஓகத்து இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2023 ஓகத்து 23ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 11.00 சதவீதம் மற்றும் 12.00 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தில் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளின் கவனமான பகுப்பாய்வு மற்றும் 2023 யூனிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட நாணய நிலைமைகளின் குறிப்பிடத்தக்க தளர்வடைதலினையும் தொடர்ந்து சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. இதுவரையிலான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நாணயக்கொள்கை தளர்வடைதல் வழிமுறைகளிற்குப் பதிலிறுத்தும் விதத்தில் சந்தை வட்டி வீதங்களின் கீழ்நோக்கிய சீராக்கத்தினையும் சந்தை வட்டி வீதங்களை மேலும் சீராக்குவதற்கு விரைவாக இடமளிப்பதற்கான தேவைப்பாட்டினையும் நாணயச்சபை கருத்தில் கொண்டது. இருப்பினும், குறித்த சில கடன்வழங்கல் உற்பத்திகளின் சந்தை வட்டி வீதங்கள் தொடர்ந்தும் விஞ்சியளவில் காணப்படுவதனையும் அவை தற்போதைய நாணயக்கொள்கை நிலைப்பாட்டுடன் இசைந்து செல்லும் விதத்திலமையவில்லை என்பதனையும் சபை அவதானித்தது. மேலும், அண்மைய நாணயக்கொள்கை தளர்வடைதல் வழிமுறைகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் ஒட்டுமொத்த சந்தைக் கடன்வழங்கல் வட்டி வீதங்களில் விரைவான வீழ்ச்சியினை சபை எதிர்பார்க்கின்றது. இதற்கமைய, விஞ்சியளவில் காணப்படக்கூடிய குறித்த சில கடன்வழங்கல் வட்டி வீதங்களைக் குறைப்பதற்கும் எதிர்வருகின்ற காலப்பகுதியில் உரிமம்பெற்ற வங்கிகள் பொருத்தமான அளவினால் ஒட்டுமொத்த ரூபாய்க் கடன்வழங்கல் வட்டி வீதங்களைக் குறைப்பதனை நெறிப்படுத்துவதற்கும் இலக்கிடப்பட்ட நிர்வாக வழிமுறைகளைப் பின்பற்றுவதற்குச் சபை தீர்மானித்தது.

முழுவடிவம்

Published Date: 

Thursday, August 24, 2023