“இலங்கையில் கொடுப்பனவுப் பணிகளுக்கான ஒரு வழிகாட்டல்” - இலங்கையில் கொடுப்பனவு சாதனங்கள் மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான நூல்

இலங்கையின் கொடுப்பனவுத் தொழிற்துறைக்கு புதிய கொடுப்பனவுச் சாதனங்கள், முறைகள் மற்றும் செயன்முறைகள் என்பன அறிமுகப்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக இத்தொழிற்துறை தற்பொழுது விரைவாக மாற்றங்களுக்கு உட்பட்டுவருகிறது. பாரம்பரிய கொடுப்பனவு முறைமைகளுடன் சேர்ந்து இப்புதிய இக்கொடுப்பனவுச் செயன்முறைகள் வாடிக்கையாளர் அனுபவத்திற்கு புதிய வரைவிலக்கணம் தருவதுடன் வியாபாரங்களும் வாடிக்கையாளர்களும் அவர்களது நிதியியல் கொடுக்கல்வாங்கல்களைப் பாதுகாப்பாகவும் வினைத்திறனுடனும் மேற்கொள்வதனையும் இயலுமைப்படுத்தும்.

இப்பின்னணியில், பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்காக கொடுப்பனவுப் பணிகள் தொடர்பாக உள்ளூர் வெளியீட்டின் அவசியத்தினை இனங்கண்டு இலங்கை மத்திய வங்கி, இலங்கையில் கொடுப்பனவு சாதனங்கள்/முறைகள் மற்றும் உட்கட்டமைப்பு என்பனவற்றைத் தெளிவுபடுத்துகின்ற “இலங்கையில் கொடுப்பனவுப் பணிகளுக்கான ஒரு வழிகாட்டல்” என்ற நூலை வெளியிடுவதற்குத் தீர்மானித்தது. இந்நூல், உதவி ஆளுநர் திரு டி. குமாரதுங்க அவர்களினால் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் பி. நந்தலால் வீரசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

நூலானது பாரம்பரிய அதேபோன்று அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட காசோலைகள், கொடுப்பனவு அட்டைகள், கியூஆர் குறியீட்டினை (LANKAQR) அடிப்படையாகக் கொண்ட கொடுக்கல்வாங்கல்களை உள்ளடக்கிய செல்லிடக் கொடுப்பனவுச் செயலிகள் போன்ற கொடுப்பனவுச் சாதனங்கள், அதேநேர மொத்த தீர்ப்பனவு முறைமை, இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமை, செல்லிடத்தொலைபேசியை அடிப்படையாகக் கொண்ட இ-பண முறைமை போன்ற தீர்ப்பனவு மற்றும் கொடுப்பனவு முறைமைகள் பற்றி விவரமான முறையில் விளக்கங்களைத் தருகிறது. இந்நூலானது பொதுவான தன்னியக்க கூற்றுப்பொறி ஆளி (ATM), பகிரப்பட்ட தன்னியக்கக் கூற்றுப்பொறி ஆளி, பொதுவான விற்பனை மைய ஆளி, பொதுவான இலத்திரனியல் நிதியியல்மாற்றல் ஆளி (CEFTS) மற்றும் லங்காபே இணையவழி கொடுப்பனவுத் தளம், ஜஸ்ட் பே, நேரடியான பற்று என்பன உள்ளடங்கலாக பொதுவான இலத்திரனியல் நிதியியல் மாற்றல் ஆளியினை அடிப்படையாகக் கொண்ட பிரபல்யமான கொடுப்பனவுச் சாதனங்களையும் பற்றியும் விளக்குகிறது.

இந்நூலானது வாசிப்பதற்கு சுலபமான முறையில் அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பதுடன் நிதியியல் கொடுக்கல்வாங்கல்களை மிகுந்த வசதியுடன் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது பற்றி பொதுமக்கள் இலகுவாகப் புரிந்துகொள்வதற்கு உதவும் விதத்தில் கொடுக்கல்வாங்கல் பாய்ச்சல் வரைபடங்கள் உள்ளடங்கலாக கோட்டு வரைபடங்களும் தரப்பட்டுள்ளன. நூலானது, பயன்படுத்தப்பட்டுள்ள கலைச்சொற்கள் தொடர்பில் விபரமான விளக்கங்களை வழங்குவதுடன் இதன் காரணமாக மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் குறிப்பாக, உயர் ஆய்வுகளை மேற்கொள்ளுவோர் இத்துறை தொடர்பான விடயத்தில் அவர்களின் அறிவினை வளர்த்துக்கொள்வதன் மூலம் நன்மையடைவர். நிதியியல் நிறுவனங்களின் ஊழியர்கள் அவர்களது நாளாந்தப் பணிகளுக்கானதொரு வழிகாட்டியாக இந்நூலினைப் பயன்படுத்திக்கொள்ளமுடியும். இதன் மூலம் வாடிக்கையாளர் விசாரணைகளுக்கு உதவமுடியும் என்பதுடன் தமது வாடிக்கையாளர் திருப்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

 இந்நூலின் இலத்திரனியல் பதிப்பு இலங்கை மத்திய வங்கியின் வெப்தளத்திலிருந்து இ-நூலாகப் பதிவிறக்கம் செய்வதற்கு கிடைக்கப்பெறுகின்றதுடன் ஆர்வமிக்கவர்கள் அச்சுப்பிரதியினை இலங்கை மத்திய வங்கியின் விற்பனைப் பீடத்திலிருந்து காலக்கிரமத்தில் கொள்வனவு செய்துகொள்ள முடியும்.

 

Published Date: 

Sunday, April 17, 2022