தேசிய வெளிநாட்டு பணவனுப்பல் நடமாடும் செயலியினை இலங்கை மத்திய வங்கி தொடங்குகின்றது

இலங்கைக்கு வெளிநாட்டு பணவனுப்பல் உட்பாய்ச்சல்களை அதிகரிப்பதற்கும் அதேபோன்று வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு பணம் அனுப்புகின்ற போது முறைசார்ந்த பணம் அனுப்பும் வழிகளை உபயோகிப்பதனை ஊக்குவிப்பதற்கும் இலங்கை மத்திய வங்கி தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. அதற்கமைய, "Lanka Remit" என்ற வர்த்தகநாமத்தின் கீழ் தேசிய வெளிநாட்டு பணவனுப்பல் நடமாடும் செயலியினை இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்துள்ளது. இச்செயலி லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

"Lanka Remit" தேசிய வெளிநாட்டு பணவனுப்பல் நடமாடும் செயலி, இலங்கையின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சரும், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணித்தல் அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கௌரவ அமைச்சர் நாமல் ராஜபக்ஷ் அவர்களினால் பெப்புருவரி 08 அன்று தொடங்கிவைக்கப்பட்டது.

தேசிய வெளிநாட்டு பணவனுப்பல் நடமாடும் செயலியான "Lanka Remit" வெளிநாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்களுக்கு ஏற்கனவே காணப்படுகின்ற பணவனுப்பும் வழிகளுக்கு நேரடியான பெறுவழியினை வழங்குகின்றது. அதேபோன்று, இலங்கைக்கு பணம் அனுப்புவதற்கு மிகவும் வசதியான அத்துடன் செலவுச் சிக்கனமான பணவனுப்பல் வாயில்களை அவர்கள் தெரிவுசெய்வதையும் வசதிப்படுத்துகின்றது.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, சம்பத் வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி பிஎல்சி, தேசிய சேமிப்பு வங்கி, கொமர்ஷல் பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி, நேஷன்ஸ்ட் ரஸ்ட் வங்கி, நெஷனல் டெவலப்மன்ட் பாங்க் பிஎல்சி, கார்கில்ஸ் பாங்க் லிமிடெட், மொபிட்டல் பிறைவேட் லிமிடெட் மற்றும் டயலொக் எக்ஸியாட்டா பிஎல்சி என்பன "Lanka Remit" உடன் ஏற்கனவே இணைந்துள்ள அதேவேளை ஏனைய பணவனுப்பல் சேவை வழங்குநர்கள் மிக விரைவில் இச்செயலியுடன் இணைவதற்கு எதிர்பார்த்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்தவாறே நேரடிக் கட்டணப் பட்டியல் செலுத்தும் வசதி போன்ற பெறுமதிசேர்க்கப்பட்ட பல எண்ணிக்கையான சேவைகளை வழங்குவதற்கும் வெளிநாடுகளில் வழங்கப்பட்ட இலத்திரனியல் கொடுப்பனவு அட்டைகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு பணம் அனுப்புவதை வசதிப்படுத்துவதற்கும் "Lanka Remit" எதிர்பார்க்கின்றது.

நிதி அமைச்சு, வெளிவிகார அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் இலங்கை வங்கியாளர்கள் சங்கம் ஆகியன உள்ளடங்கலாக ஆர்வலர்களின் ஆதரவுடன் "Lanka Remit" செயலியினை இலங்கை மத்திய வங்கி ஊக்குவிக்கின்றது.

 

Published Date: 

Tuesday, February 8, 2022