ஊழியர் சேமலாப நிதியத்தின் பட்டியலிடப்பட்ட பங்குரிமை சொத்துப்பட்டியலின் பெறுமதி 2021 இறுதியில் ரூ. 84 பில்லியன் கொண்ட செலவிற்கெதிராக ரூ. 28 பில்லியன் அதிகரிப்புடன் ரூ. 112 பில்லியன் சந்தைப் பெறுமதியைப் பதிவுசெய்துள்ளது

நாணயச் சபையால் முகாமைச் செய்யப்படுகின்ற ஊழியர் சேமலாப நிதியமானது இலங்கையின் பாரிய ஓய்வூநிதியமாக விளங்குகின்றது. ஊழியர் நிதியத்தின் பெறுமதியைப் பாதுகாக்கின்ற அதேவேளை அதன் உறுப்பினர்களுக்கான ஆதாயங்களை அதிகரிக்கின்ற நீண்டகால நோக்குடன் அதன் முதலீட்டுச் சொத்துப்பட்டியலை இந்நிதியம் பேணுகின்றது. இந்நிதியம், குறித்த சில ஏற்றுக்கொள்ளப்பட்ட இடர்நேர்வு வழியலகுகளினுள் தொழிற்படுவதுடன் அதன் 94 சதவீதமான நிதியங்களை அரசாங்கப் பிணையங்களிலும் எஞ்சியவற்றை பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத பங்குரிமைகள், கம்பனித் தொகுதிக்கடன்கள், நம்பிக்கைச் சான்றிதழ்கள் அத்துடன் ஏனைய பணச் சந்தை சாதனங்கள் போன்றவற்றிலும் முதலீடுசெய்துள்ளது. குறித்துரைக்கப்பட்ட வரையறைகளுக்குட்பட்டு நாணயச் சபையினால் ஒப்புதலளிக்கப்பட்ட உபாயச் சொத்து ஒதுக்கீட்டில் வழங்கப்பட்டவாறான தகைமையுடைய சொத்து வகுப்புக்களில் பன்முகப்படுத்தப்பட்ட சொத்துப்பட்டியலில் நிதியங்கள் முதலிடப்பட்டுள்ளன. 2020.12.31 அன்றுள்ளவாறான ஊழியர் சேமலாப நிதியத்தின் முதலீட்டுச் சொத்துப்பட்டியலின் சந்தைப் பெறுமதியானது ரூ. 3,243 பில்லியனாகக் காணப்பட்டது.

மேலே குறிப்பிட்டவாறு, ஊழியர் சேமலாப நிதியத்தின் முதலீட்டுக் கொள்கைக்கமைவாக, இந்நிதியத்தின் உண்மையான ஆதாய வீதங்களை ஈட்டிக்கொள்ளும் நீண்டகால நோக்குடன் அதன் நிதியங்களின் ஏறத்தாழ 3 சதவீதத்தினை பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத பங்குரிமைகளில் அது முதலீடு செய்துள்ளது. தனிப்பட்ட பங்குரிமைச் செயலாற்றம் அதேபோன்று பங்குச்சந்தையின் ஒட்டுமொத்த செயலாற்றம் அத்துடன் நாட்டின் ஒட்டுமொத்த பேரண்டப் பொருளாதார நிலைமைகள் என்பன தளம்பலடைந்ததுடன் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்மாற்றங்கள், பட்டியலிடப்பட்ட பங்குரிமை சொத்துப்பட்டியலின் சந்தைப் பெறுமதியில் தாக்கம் செலுத்தியுள்ளன. சொத்துப்பட்டியலின் விலைமதிப்பீடும் அதன் இலாபத்தன்மையினை நிர்ணயித்தலும் இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்களுக்கமைவாக மேற்கொள்ளப்படுகின்றன.

மேற்குறிப்பிடப்பட்ட நிதியியல் அறிக்கையிடல் நியமங்களுக்கமைவாக, 2021 திசெம்பர் இறுதியிலுள்ளவாறு ஊழியர் சேமலாப நிதியத்தின் பட்டியலிடப்பட்ட பங்குரிமைச் சொத்துப்பட்டியலின் சந்தைப் பெறுமதி, ரூ. 84 பில்லியன் கொண்ட அதன் செலவுக்கெதிராக ரூ. 112 பில்லியன் கொண்ட பெறுமதியைப் பதிவுசெய்ததுடன், அதனூடாக சொத்துப்பட்டியலில் ரூ. 28 பில்லியன் கொண்ட கணிசமானளவான ஈட்டப்படாத ஆதாயத்தினைப் பிரதிபலிக்கின்றது. இதற்கு மேலதிகமாக, ஊழியர் சேமலாப நிதியமானது 2021 காலப்பகுதியில் பத்திரங்கள், காசுப் பங்கிலாபங்கள் அத்துடன் மூலதன ஈட்டல்கள் வாயிலாக ரூ. 4.7 பில்லியனையும் ஈட்டியது. மேலும், 2019 தொடக்கம் 2021 வரையான மூன்று வருட காலப்பகுதியில் கிடைக்கப்பெற்ற ரூ. 9.6 பில்லியன் கொண்ட பட்டியலிடப்படாத பங்குரிமை முதலீட்டுச் சொத்துப்பட்டியலின் மீது பெறப்பட்ட பங்கிலாப வருமானமானது ரூ. 2.5 பில்லியன்களாகப் பதிவாகியிருந்தது.

வெளிப்படைத்தன்மையைப் பேணுகின்ற நோக்குடன், ஊழியர் சேமலாப நிதியமானது அதன் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத பங்குரிமைச் சொத்துப்பட்டியலின் சந்தைப் பெறுமதியை காலாண்டு அடிப்படையில் அதன் இணையத்தளத்தில் வெளியிடுகின்றது. இத்தகவல்களை https://epf.lk/?page_id=2483 இணையத்தளத்தில் பார்வையிடமுடியும்.

Published Date: 

Monday, January 17, 2022