எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் அலுவல்சார் ஒதுக்குகளின் நிலைமை

எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்கள் (2021 திசெம்பர் 22ஆம் நாளன்று அறிவிக்கப்பட்டவாறு) அண்மித்துவருவதுடன் அண்மைய உட்பாய்ச்சல்களின் பெறுகையுடன் அலுவல்சார் ஒதுக்குகளின் நிலைமை தற்போது ஏறத்தாழ ஐ.அ.டொலர் 3.1 பில்லியன் பெறுமதியினை அடைந்துள்ளதுடன் 2021இன் இறுதியளவில் அத்தகைய மட்டத்தில் தொடர்ந்தும் காணப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் இலங்கை மத்திய வங்கியானது பொது மக்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது. மேலும் பேரண்டப்பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டவாறு தற்போது பேச்சுவார்த்தைக்குட்பட்டுள்ள ஏனைய பல்வேறு வசதிகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்கள் 2022 சனவரி மாதத்தின் ஆரம்பப் பகுதியில் கிடைக்கப்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தொழிலாளர் பணவனுப்பல்களுக்கான ஊக்குவிப்புத் திட்டங்களின் அறிமுகம் மற்றும் ஏற்றுமதிப் பெறுகைகளின் மீளனுப்பல் மற்றும் மாற்றல் என்பவற்றை உள்ளடக்கிய விதிகள் போன்ற உள்நாட்டுச் சந்தையில் வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையினை மேம்படுத்தும் நோக்கில் மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள வழிமுறைகளும் அலுவல்சார் ஒதுக்குகளை மேம்படுத்துகின்றன. சுற்றுலாத்துறையில் வரவேற்கத்தக்க வலுவான மீட்சி மற்றும் ஏற்றுமதிகளின் உறுதியான செயலாற்றம் என்பன வெளிநாட்டுத் துறைக்கு மேலும்  ஆதரவளிக்கின்றது. இதற்கமைய, ஒதுக்கு நிலைமையானது 2022 ஆம் ஆண்டு முழுவதிலும் போதியளவு மட்டங்களில் காணப்படுமென அரசாங்கமும் மத்திய வங்கியும் நம்பிக்கை கொண்டுள்ளன.

இப்பின்னணியில் அண்மித்துவரும் வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் தொடர்பில் தெளிவான மீளுறுதிப்படுத்தல்களுக்கு மத்தியிலும் நாட்டினைத் தரம் குறைப்பதற்கான சில தரமிடல் முகவராண்மைகளின் அவசர மற்றும் தெளிவற்ற முடிவுகள் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் முதலீட்டாளர்களுக்கு இரண்டாந்தரச் சந்தையில் அத்தியாவசியமற்ற இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தன என்பது துரதிஷ்டவசமானதொன்றாகும். அத்தகைய தரமிடல் நடவடிக்கைகள் முதலீட்டாளர் நம்பிக்கையிலும் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதன் விளைவாக சில எதிர்பார்க்கப்பட்ட வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்களில் தகாத தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய வாத ஆதாரமற்ற மற்றும் கேள்விக்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதிருப்பின் இவை முன்னரே பொருண்மியமாகியிருக்கும்.

Published Date: 

Wednesday, December 29, 2021