அரசாங்கம் பிட்ச் தரமிடலின் அவசரமான தரமிடல் செயற்பாட்டினை வன்மையாக மறுதலிக்கின்றது

பெருமளவிற்கு ஆய்ந்தமைவில்லாத ஓர் நடத்தையாக பிட்ச் தரமிடல் 2021 திசெம்பர் 17ஆம் நாளன்று இலங்கையின் நாட்டிற்கான பன்னாட்டுத் தரமிடலினைக் குறைத்தது. இதனூடாக ஒட்டுமொத்த உலகமும் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் பன்முக அலைகளுடன் போராடிக்கொண்டிருக்கும் சூழலொன்றில் இலங்கையில் நடைபெற்றுவரும் நேர்க்கணிய அபிவிருத்திகளை பிட்ச் தரமிடல் அங்கீககரிக்க தவறியமை எடுத்துக்காட்டப்படுகின்றது. இந்நடவடிக்கையானது 2022 தேசிய வரவுசெலவுத் திட்ட அறிவிப்பிற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சேர்விசஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய தரமிடலின் வாத ஆதாரமற்ற குறைப்பினைப் போன்றதாகும். குறிப்பாக பொருளாதாரத்தின் சகல துறைகளிலுமான அண்மைய அபிவிருத்திகள் மற்றும் அண்மித்துவரும் வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்கள் தொடர்பில் இலங்கையின் அதிகாரிகள் தொடர்ச்சியாக பிட்ச் தரமிடலிற்கு இற்றைப்படுத்தப்பட்டது என்பதனை குறிப்பாக கருத்திற்கொள்ளும்போது பன்னாட்டு ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தரமிடல் முகவராண்மையொன்றின் தரப்பிலிருந்து இலங்கையின் தரமிடலைக் குறைப்பதற்கான இத்தகையதொரு விரைவுத்தன்மையானது சிந்தனைக்கெட்டாததொரு விடயமாகக் காணப்படுகின்றது.

குறிப்பாக, 2021இன் மூன்றாம் காலாண்டுப்பகுதியில் முடக்கல் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டியிருந்த போதிலும் உண்மைப் பொருளாதாரமானது காலாண்டுப் பகுதியில் ஆழமான சுருக்கமொன்றினை தடுத்திருந்ததுடன் இது புதிய இயல்பு நிலைமைத் தொடர்பில் இலங்கையின் நெகிழ்வுத்திறனை சமிக்ஞைப்படுத்தியிருந்தது. உண்மையில், 2021 சனவரி - செத்தெம்பர் காலப்பகுதியில் உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 4.4 சதவீதத்தினால் (ஆண்டிற்காண்டு) விரிவாக்கமடைந்து 2021ஆம் ஆண்டில் 4 சதவீதத்திற்கும் மேலான பொருளாதார வளர்ச்சிக்கான வலுவான சாத்தியப்பாட்டினை மீள உறுதிப்படுத்தப்பட்டது. நடவடிக்கைகள் தொடர்பான உயர் அதிர்வுடைய தரவுகள் என்பன பொருளாதாரமானது உலகளாவிய நோய்த்தொற்றிற்கு முன்னரான மட்டத்தினை விஞ்சி வலுவானதொரு மீட்சியினை நோக்கியுள்ளதென எடுத்துக்காட்டுகின்றது. தயாரிப்பாளர் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது 2021 நவம்பரில் 61.9இனை அடைந்திருந்ததுடன் இது இதுவரை காலம் நவம்பரில் பதிவுசெய்த உயர்ந்த மட்டமாவதுடன் உலகளாவிய நோய்த்தொற்றிற்கு முன்னரான நடவடிக்கை மட்டத்தினைக் காட்டிலும் மிகவும் உயர்ந்த மட்டமாகும். கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின் சந்தை மூலதனமயமாக்கலானது 2021இன் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற உயர்ந்த எண்ணிக்கையிலான ஆரம்ப பொது வழங்கல்களுடன் வரலாற்றுரீதியிலான உயர்ந்த மட்டத்தினை அடைந்திருந்தது. 2021இன் ஒத்தோபர் முதல் பத்து மாத காலப்பகுதியில் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனானது முன்னைய ஆண்டின் தொடர்புடைய காலப்பகுதியின் ரூ.260 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.685 பில்லியனுக்கு மேலாக விரிவாக்கமடைந்திருந்தது.

வர்த்தகப் பற்றாக்குறையானது மிக உயர்ந்த ஏற்றுமதி வருவாய்களினால் ஆதரவளிக்கப்பட்டு மாதத்திற்கு மாத அடிப்படையில் 2021 மே மாதம் தொடக்கம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்திருந்தது. வணிக ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2021 ஒத்தோபரில் இதுவரையான காலப்பகுதிக்கான உயர்ந்த மட்டத்தினை பதிவுசெய்திருந்ததுடன் இம்மட்டமானது 2021 நவம்பரில் விஞ்சியிருந்ததாக முதனிலைத் தகவல்கள் சுட்டிக்காட்டியிருந்தன. ஊகத்தினால் தூண்டப்பட்ட சில விலகல்களினைத் தவிர 2021 ஏப்பிரல் முதல் நாணயமாற்று வீதமானது உறுதியாக காணப்பட்டதனால் ஏற்றுமதி வருவாய்களின் மாற்றல்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டுச் செலாவணி வருவாய்கள் அண்மைய வாரங்களில் கணிசமாக முன்னேற்றமடைந்திருந்தன. மாதாந்த அடிப்படையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் உயர்ந்தளவான வளர்ச்சி அவதானிக்கப்பட்டிருந்ததுடன் இது எதிர்வரும் காலப்பகுதியில் ஏறத்தாழ ஐக்கிய அமெரிக்க டொலர் 5 பில்லியன் கொண்ட வருடாந்த அந்நியச் செலாவணி வருவாய் இழப்பின் முன்கூட்டிய மீள்திருப்பத்தினையும் எடுத்துக்காட்டுகின்றது.      

தொழிலாளர் குடியகழ்வின் மீளாரம்பம், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தான இலங்கை தொழிலாளர்களுக்கான அதிகரித்த கேள்வி மற்றும் கவர்சியான ஊக்குவிப்பு பொதியொன்றினூடாக முறைசார் வழிகளில் தொழிலாளர் பணவனுப்பல்களுக்கு வசதிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் என்பவற்றுடன் தொழிலாளர்களின் பணவனுப்பல்களுக்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக காணப்படுகின்றன. இத்தகைய வழிமுறைகளின் மூலம் வெளியக நடைமுறைக் கணக்கு நிலுவையானது வளர்ச்சியினை ஆதரவளிக்கக்கூடிய மட்டங்களில் பேனுப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இது மூலோபாயமற்ற மற்றும் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட சொத்தக்களின் எதிர்பார்க்கப்படும் பணவாக்கல்களுக்கு மேலதிகமாக கொழும்பு துறைமுக நகரம் மற்றும் கைத்தொழில் வலயங்கள் என்பவற்றில் அடையாளங் காணப்பட்ட செயற்றிட்டங்களுக்கான நேரடி முதலீட்டின் ஊடாக நிதியியல் கணக்கிற்கு பங்குரிமை மூலதனத்தினை வசதியளிக்கின்றது.

இத்தகைய அபிவிருத்திகள் மற்றும் தேசிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தடுப்பூசியேற்றும் செயற்றிட்டத்தின் முன்னெடுப்பானது குறுங்கால மற்றும் நடுத்தர காலத்தில் பொருளாதாரத்தின் உள்ளாற்றலை அடைந்துகொள்வதற்கு துணைபுரியும்.

பிட்ச் தரமிடலானது 2022 தேசிய வரவுசெலவுத் திட்டத்தினூடாக அறிமுகப்படுத்தப்பட்ட இறை மறுசீரமைப்பினையும் அங்கீககரிக்க தவறியுள்ளது. புதிய வரி வழிமுறைகளின் அறிமுகம், தரமுயர்த்தப்பட்ட வரி நிர்வாக முறைமைகள் மற்றும் பொருளாதாரத்தின் மீளெழுச்சி என்பவற்றுடன் 2022ஆம் ஆண்டு அரசிறையில் கணிசமான அதிகரிப்பொன்றினைப் பெற்றுத்தருமென எதிர்பார்க்கப்படுகின்றது. அரச துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையின் அதிகரிப்பு மற்றும் அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில் முயற்சிகளின் ஆற்றல் வாய்ந்த தன்மையினை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் என்பன குறிப்பிடத்தக்க மறுசீரமைப்புக்களாகக் காணப்படுவதுடன் அரச நிறுவனங்களுக்கு வருடாந்த ஆணைப்பத்திரங்களுக்குப் பதிலாக காலாண்டு ஆணைப்பத்திரங்களை வழங்குதல் என்பன ஒதுக்கீடுகளின் பயன்பாட்டில் நிதியியல் ஒழுக்கவியலை உறுதிநிலைக்கு இட்டுச்செல்லுமென எதிர்பார்க்கப்படுவதுடன் அதன் மூலம் செலவினப் பக்கத்திற்கு ஆதரவளிக்கும். அத்தகைய வருமான மற்றும் செலவினப் பக்க வழிமுறைகள் நிலைபெறத்தக்க படுகடன் மட்டத்திற்குப் பங்களிக்கக்கூடிய அரசிறைப் பற்றாக்குறையினதும் அரசின் நிதியிடல் தேவைப்பாடுகளையும் குறைப்பதற்கு வழிவகுக்கும்.

சந்தைச் சமனிலை மட்டங்களில் ஆரம்ப விஞ்சுதலொன்றிற்குப் பின்னர் உள்நாட்டுச் சந்தையானது இறைத் திரட்சியின் எதிர்பார்க்கப்பட்ட பாதைக்கு நேர்க்கணியமாக பதிலிறுத்தியுள்ளதுடன் வட்டி வீதங்களும் நிலைப்படுத்தப்பட்டுள்ளன. முதலாந்தர சந்தை ஏலவிற்பனைகளில் மேம்பட்ட கோரிக்கைகள் மற்றும் செயல்திறன்மிக்க திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் என்பவற்றின் விளைவாக மத்திய வங்கியின் வசமுள்ள அரசாங்கப் பிணையங்களும் குறிப்பிடத்தக்களவில் வீழ்ச்சியடைந்துள்ளன.

எதிர்வரும் மாதங்களில் கொடுப்பனவினை மேற்கொள்வதற்கான தோல்வியின் அதிகரித்த நிகழ்தகவு தொடர்பாக பிட்ச் நிறுவனத்தினால் கூறப்பட்ட ஆதாரமற்ற கூற்றுக்களுக்கு மாறாக பிராந்தியத்திலுள்ள நட்பு நாடுகளின் ஆதரவினைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் மற்றும் மத்திய வங்கி என்பவற்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் அண்மையில் பயனளிப்பினை நெருங்கிக்கொண்டிருப்பதனால் எதிர்வரும் காலப்பகுதியில் சென்மதி நிலுவை மீதான அழுத்தத்தினையும் எதிரீடு செய்யும். பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாடு என்பவற்றினை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டலானது 2021 திசெம்பர் மற்றும் 2022 மார்ச் மாத காலப்பகுதியில் எதிர்பார்க்கப்பட்ட பணப்பாய்ச்சல்கள் தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டிருந்ததுடன் அரசாங்கம் மற்றும் மத்திய வங்கி என்பன இத்தகைய உட்பாய்ச்சலானது நிச்சயமாக கிடைக்கப்பெறுமென கருதுவதுடன் 2021இன் இறுதியிலான மொத்த அலுவல்சார் ஒதுக்கானது ஐ.அ.டொலர் 3 பில்லியனுக்கு மேலாக காணப்படும். பிட்ச் நிறுவனமானது உடனடியாக பயன்படுத்தத்தக்க ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.5 பில்லியன் கொண்ட சீன மக்கள் வங்கியுடனான துணைநில் பரஸ்பர பரிமாற்றல் வசதியினை முழுமையாக பொருட்படுத்தவில்லை போலுள்ளது. இத்தீர்மானத்தினை அடைந்துகொள்வதில் பிட்ச் நிறுவனமானது இந்தியா மற்றும் மத்திய கிழக்கு மற்றும் ஏனைய பிராந்திய பொருளாதாரங்களுடன் இடம்பெற்ற உயர்மட்ட கூட்டங்களைத் தொடர்ந்து எதிர்பார்க்கப்படும் கொடுகடன் வசதிகள் மற்றும் ஏனைய உட்பாய்ச்சல்கள் போன்றவற்றினையும் பரிசீலனையில் கொண்டிருக்கவில்லை. 

பிட்ச் தரமிடல் நிறுவனமானது முதல் ஆய்வுத் திகதியான 2021 திசெம்பர் 31 வரை காத்திருக்காமல் இலங்கையினை தரமிறக்குவதற்கு மேற்கொளண்ட தீர்மானமானது அதனது பொறுப்பற்ற தன்மையினைத் தவிர வேறொன்றினையும் எடுத்துக்காட்டவில்லை. இத்தரமிடல் குறைப்பின் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுமாயின் அது முதலீட்டாளர்களை மாத்திரமே பாதிக்கக்கூடும். இலங்கை எதிர்வரும் காலப்பகுதியில் அனைத்து படுகடன் கடப்பாடுகளையும் உரிய நேரத்தில் மேற்கொள்ளும் என்பது தொடர்பில் தெளிவான உத்தரவாதமொன்றினை அரசாங்கம் வழங்கியுள்ளதுடன் கடந்த இரு ஆண்டுகளாக கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றினால் ஏற்பட்ட கடுமையான அழுத்தங்களிற்கு மத்தியிலும் கொடுப்பனவொன்றினை மேற்கொள்வதற்கு இலங்கை தாமதித்திருக்கவில்லை என்பதனையும் கட்டாயமாக குறித்துக்;காட்டுதல் வேண்டும்.

எனவே, பன்னாட்டு முதலீட்டுப் பங்காளர்கள் உட்பட பொருளாதாரத்தின் அனைத்து ஆர்வலர்களும் இந்நியாயமற்ற தரமிடல் நடவடிக்கையினால் கருத்துமாற்றமடைய வேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுவதுடன் மாறாக அடுத்த சில நாட்களில் தீர்க்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்ற கொந்தளிப்புக்களை கட்டுப்படுத்துவதற்கு இலங்கையுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஆறுமாதகால வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டவாறான எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு உட்பாய்ச்சல்களின் முன்னேற்றம் தொடர்பிலான விரிவான ஊடக அறிக்கையொன்று இவ்வாரத்தில் வெளியிடப்படும்.

Published Date: 

Saturday, December 18, 2021