வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2021 ஓகத்து

அதிகரித்த நிதியியல் உட்பாய்ச்சல்கள் 2021 ஓகத்து மாத காலப்பகுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளை வலுப்படுத்திய வேளையில், வணிகப்பொருள் ஏற்றுமதிகள் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக ஐ.அ.டொலர் 1.0 பில்லியனை விஞ்சிக் காணப்பட்டன. இருப்பினும், இறக்குமதிச் செலவினத்தின் அதிகரிப்பானது ஏற்றுமதி வருவாய்களின் அதிகரிப்பினை விஞ்சிக் காணப்பட்டு ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் வர்த்தகப் பற்றாக்குறையின் விரிவாக்கமொன்றினைத் தோற்றுவித்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் 2021 ஓகத்தில் சில உத்வேகத்தினைத் திரட்டி, இலக்கங்கள் குறைவாகக் காணப்பட்டாலும் கடந்த மாதத்தினைப் விட குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பினைப் பதிவுசெய்தன. 2021 ஓகத்தில் தொழிலாளர் பணவனுப்பல்களின் மிதமான போக்கொன்று அவதானிக்கப்பட்டிருந்தது. பொதுவான சிறப்பு எடுப்பனவு உரிமைகளின் ஒதுக்கீட்டின் பகுதியாக 2021இல் இலங்கை பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து சிறப்பு எடுப்பனவு உரிமைகளின் ஒதுக்கீட்டினைப் பெற்றுக்கொண்டது. மேலும், இலங்கை மத்திய வங்கிக்கும் வங்காளதேச வங்கிக்குமிடையிலான இருபுடை நாணயப் பரஸ்பர பரிமாற்றல் ஏற்பாடுகளின் கீழான ஆரம்ப பகிர்ந்தளிப்புக்கள் 2021 ஓகத்து மாத காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்டன. வங்கிகளுக்கிடையிலான சந்தையில் சராசரி உடனடிச் செலாவணி வீதம் 2021 ஓகத்தில் பரந்தளவில் உறுதியாகக் காணப்பட்ட வேளையில், மாதத்தின் இறுதிப்பகுதியினை நோக்கிய செலாவணி வீதத்தின் மீதான அழுத்தங்கள் அவதானிக்கப்பட்டு, ரூபாவின் உறுதிப்பாட்டினைப் பேணுவதற்கு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் மத்திய வங்கி தலையிடுவதனைத் தூண்டியது.  

முழுவடிவம்

Published Date: 

Tuesday, October 19, 2021