இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை இரண்டாந்தரச் சந்தையில் கொள்வனவு செய்வதற்கு 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகளை (2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்திற்கமைவாக நிதி வியாபாரத்தில் ஈடுபடுகின்ற கம்பனிகள் நீங்கலாக) அனுமதிப்பதற்கு 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளுக்கமைவாக கௌரவ நிதி அமைச்சர், அமைச்சரவையின் ஒப்புதலுடன் ஒழுங்குவிதிகளை வழங்கியுள்ளார்.
மேற்குறித்த ஒழுங்குவிதிகளின் பிரகாரம், நடைமுறையிலுள்ள வெளிநாட்டுச் செலாவணி ஒழுங்குவிதிகளின் நியதிகளுக்கமைவாகவும் பின்வருகின்ற நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டும் இலங்கைக்கு வெளியே வதிகின்ற ஆளொருவரிடமிருந்து கடன்பெற்ற வெளிநாட்டு நாணயத்தின் 50% இனை உபயோகப்படுத்தி நாட்டிற்கான பன்னாட்டு முறிகளில் கம்பனிகள் முதலிடலாம்.