முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி

முன்னாள் ஆளுநர் (2016-2019)

முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி இலங்கை மத்திய வங்கியின் பதினான்காவது ஆளுநராக 2016 யூனில் பதவியேற்றுக் கொண்டதுடன் 2019 நவெம்பரில் அப்பதவியிலிருந்து விலகிக் கொண்டார்.

முனைவர் குமாரசுவாமி அவரது பல்கலைக்கழகக் கல்வியை கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்திலிருந்து பெற்ற கலைமானி (சிறப்புப்) பட்டத்துடன் நிறைவு செய்து கொண்டதுடன் பொருளியலில் அவரின் முனைவர் பட்டத்தினை சசெக்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் அவர் இலங்கை திரும்பி 1974இல் உயர் பதவி அலுவலராக மத்திய வங்கியில் இணைந்து கொண்டார்.

முனைவர் குமாரசுவாமி பதினைந்து ஆண்டுகள் இலங்கை மத்திய வங்கியில் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம், புள்ளிவிபரம் மற்றும் வங்கி மேற்பார்வைத் திணைக்களங்களில் பணியாற்றியிருக்கின்றார். எனினும், 1981 – 1989 காலப்பகுதியில் நிதி திட்டமிடல் அமைச்சில் பணியாற்றுவதற்காக வங்கிப் பணியிலிருந்து விடுக்கப்பட்டார்.

இவர் 1990 – 2008 காலப்பகுதியில் பொதுநலவாய செயலகத்தில் பொருளாதார அலுவல்கள் பிரிவின் தலைவர், செயலாளர் நாயகத் திணைக்களத்தின் துணைப் பணிப்பாளர் மற்றும் பொதுநலவாயச் செயலக சமூக மாற்றல் நிகழ்ச்சித்திட்டப் பிரிவின் இடைக்காலப் பணிப்பாளர் உள்ளிட்ட பல மூத்த பதவிகளை வகித்திருக்கின்றார். 

அவர் 2013 – 2015 வரையான காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை ஆலோசனைக் குழுவில் அங்கத்தவராக இருந்ததுடன் 2015 – 2016 காலப்பகுதியில் அபிவிருத்தி உபாய அமைச்சு மற்றும் பன்னாட்டு வர்த்தக அமைச்சில் மதியுரையாளராகவும் விளங்கினார்.

முனைவர் குமாரசுவாமி ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ரோக்கியோ சிமெந்துக் கம்பனி (இலங்கை) பிஎல்சி என்பனவற்றின் நிறைவேற்றுக் கம்பனி பணிப்பாளராக விளங்கினார். மேலும், அவர் இலங்கையிலுள்ள பல ஆய்வு நிறுவனங்களிலும் இணைந்திருந்தார்.

முனைவர் குமாரசுவாமி ஆர்வம் மிக்க விளையாட்டு வீரராவார். அவர் சிறிலங்காவின் ரக்பி குழுவின் கப்டனாக இருந்து 1974இல் யப்பானில் இடம்பெற்ற ரக்பி ஏசியாவில் நாட்டினை இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றினார். அவர் முதல் தர கிரிக்கெட் வீரருமாவார்.