முனைவர் (செல்வி) துஷ்னி வீரகோன்

முனைவர் (செல்வி) துஷ்னி வீரகோன், 2023 செத்தெம்பர் 21ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும்வகையில் இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். 

முனைவர் (செல்வி) துஷ்னி வீரகோன், இலங்கை கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் அதன் பேரண்டப் பொருளாதாரக் கொள்கை ஆராய்ச்சித் தலைவருமாவார்.   அவர், தனது முனைவர் பட்டத்தினை நிறைவுசெய்து 1994இல் இலங்கை கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனத்தில் இணைந்ததுடன் பேரண்ட பொருளாதாரக் கொள்கை, பிராந்திய வர்த்தக ஒருங்கிணைப்பு மற்றும் பன்னாட்டுப் பொருளாதாரங்கள் தொடர்பில் பரந்தளவில் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் தற்பொழுது தென்னாசிய பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வுகளின் (ஸ்பிறிங்கர்) தொடர்களது ஆசிரியராகவும், தென்னாசிய பொருளாதார சஞ்சிகையின் (SAGE Journals) முதன்மை ஆசிரியராகவும் தென்னாசிய அபிவிருத்தி சஞ்சிகை, பன்னாட்டு அபிவிருத்தி சஞ்சிகை (Wiley) என்பனவற்றின் ஆசிரியர் குழாமிலும் பணியாற்றிவருவதுடன் இலங்கை கொள்கை ஆய்வு நிறுவகத்தின் வருடாந்த முதன்மை அறிக்கையான “இலங்கை: பொருளாதார நிலை” இன் ஆசிரியராகவும் இருந்து வருகின்றார்.

இவர் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் நியமன உறுப்பினராக (2019 – 2020) முன்னரும் பணியாற்றி பொருளாதார உறுதிப்பாடு, மீட்சி மற்றும் வளர்ச்சியை ஊக்குவித்தல் மீதான குழுவின் உறுப்பினர் அத்துடன் இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் உள்ளடங்கலாக இலங்கை அரசாங்கத்தின் கொள்கை அபிவிருத்திக் குழுக்களுடன் பணியாற்றி பரந்த அனுபவத்தைக் கொண்டவராவார். இவர் நேஷன் ட்ரஸ்ட் வங்கி (2007-16), காகிள்ஸ் வங்கி (2018-19) என்பவற்றின் சுயாதீன நிறைவேற்றுத்தரமற்ற பணிப்பாளர் உள்ளடங்கலாக கூட்டு நிறுவனங்களின் சபைகளில் பணிப்பாளராகவும், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சமூகக் கொள்கைப் பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் அவுஸ்திரேலியா, மொனாஷ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி பொருளாதாரம் மற்றும் நிலைபெறுதன்மைக்கான மதியுரைச் சபை உள்ளடங்கலாக கல்விசார் நிறுவனங்களில் பணிப்பாளராகவும் பதவிகளையும் வகித்துள்ளார். அவர் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் உலக வர்த்தக அமைப்பு போன்ற பன்னாட்டு அமைப்புக்களில் ஆலோசனையாளராகப் பணியாற்றியிருக்கிறார். 

முனைவர் (செல்வி) துஷ்னி வீரகோன், ஐக்கிய இராச்சியத்தின் பெல்பாஸ்ட் குயின்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து பொருளாதாரத்தில் விஞ்ஞானமானி முதல் வகுப்பு கௌரவப் பட்டத்தினையும், ஐக்கிய இராச்சியத்தின் மென்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுமானிப் பட்டத்தினையும் முனைவர் பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து கலைப்பீட புலமைப்பரிசிலினையும் பெல்பாஸ்ட் குயின்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து மெக்கான் பதக்கத்தினையும் புலமைப்பரிசிலினையும், மென்செஸ்டர் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டப்பின்படிப்பு புலமைப்பரிசிலினையும் ஐக்கிய இராச்சிய அரசாங்கத்திடமிருந்து வெளிநாட்டு ஆராய்ச்சிப் புலமைப்பரிசிலினையும் அத்துடன் மென்செஸ்டர் பல்கலைக்கழகத்திலிருந்து ட்ரும்மொன்ட் பிரேசேர் ஆராய்ச்சி மானியத்தினையும் பெற்றவராவார்.