கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2020 செத்தெம்பரில் குறைவடைந்துள்ளது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)   ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2020 ஓகத்தின் 4.1  சதவீதத்திலிருந்து 2020 செத்தெம்பரில் 4.0 சதவீதத்திற்கு சிறிதளவால் குறைவடைந்தது. 2019 செத்தெம்பரில் நிலவிய உயர்ந்த தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கத்தின் மூலம் இது பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது. உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஓகத்தில் 12.3 சதவீதத்திலிருந்து 2020 செத்தெம்பரில் 11.5 சதவீதத்திற்கு குறைந்தவிடத்து உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஓகத்தின் 0.8 சதவீதத்திலிருந்து 2020 செத்தெம்பரில் 0.9 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாற்றமானது 2020 ஓகத்தின் 4.8 சதவீதத்திலிருந்து 2020 செத்தெம்பரில் 4.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது 2020 செத்தெம்பரில் 0.7 சதவீதமாகப் பதிவாகியிருந்தது. இதற்கு, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் விடயங்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்களே காரணமாகும். அதற்கமைய, உணவு வகையினுள் காய்கறிகள், தேங்காய், உடன் பழவகை மற்றும் பெரிய வெங்காயம் என்பனவற்றின் விலைகள் 2020 செத்தெம்பரில் அதிகரித்தன. உணவல்லா வகையில் வெறியக் குடிவகைகள், புகையிலை மற்றும் போதைப்பொருள், மற்றும் போக்குவரத்துத் துணை வகைகளிலுள்ள விடயங்களின் விலைகள் மாத காலப்பகுதியின் போது அதிகரித்தன.

பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஓகத்தின் 3.2 சதவீதத்திலிருந்து 2020 செத்தெம்பரில் 2.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. மேலும், ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கமும் 2020 ஓகத்தின் 3.8 சதவீதத்திலிருந்து 2020 செத்தெம்பரில் 3.6 சதவீதத்திற்கு மேலும் வீழ்ச்சியடைந்தது.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, September 30, 2020