தேசிய LANKAQR முன்னெடுப்பு கொழும்பில் தொடக்கி வைக்கப்பட்டது

தேசிய LANKAQR முன்னெடுப்பான “நாடு முழுவதற்குமான LANKAQR” 2020 ஒத்தோபர் 5ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வர்த்தக அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்தன அவர்களினால் பணம், மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி சீரமைப்பு இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு அஜித் நிவார்ட் கப்ரால், கூட்டுறவுச் சங்கங்கள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், மாண்புமிகு லசந்தா அழகியவண்ண, சமுர்த்தி, வீட்டுத்துறைப் பொருளாதாரம், நுண்பாக நிதி, சுயதொழில் வாய்ப்பு, வியாபார அபிவிருத்தி மற்றும் குறைப் பயன்பாடு அரச மூலவளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு செகான் சேமசிங்க, மத்திய வங்கியின் ஆளுநர், தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷமன், நிதி அமைச்சின் செயலாளர். திரு. எஸ்.கே. ஆட்டிகல உட்பட நாணயச் சபை உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் தொடக்கி வைக்கப்பட்டது. இதில் அரச திணைக்களத்தின் அநேக தலைவர்கள், வங்கிகளின் தலைவர்கள், ஏனைய கொடுப்பனவுப் பணிகளை வழங்குவோர் அதேபோன்று சில்லறை விற்பனைத் தலைவர்கள், சுகாதாரம் மற்றும் ஊடக தொழில் துறையினர் மற்றும் வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

காசு குறைந்த சமூகத்தினை நோக்கி முன்னேறுகின்ற வேளையில், இலங்கையில் நிதியியல் வசதிக்குட்படுத்தலை அதிகரிக்கும் நோக்குடன்LANKAQR குறியீடு உரிமம்பெற்ற நிதி நிறுவனங்கள் மற்றும் லங்கா கிளியர் (பிறைவேற்) லிமிடெட் என்பனவற்றுடன் இணைந்து இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டது. LANKAQR, LANKAQR வசதியினைக் கொண்டிருக்கக்கூடிய வங்கிகள் மற்றும் ஏனைய நிதியியல் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் அவர்களது வங்கிக் கணக்குகளிலிருந்து வணிகர் அல்லது பணிகள் வழங்குவோர் போன்ற ஏதேனும் வங்கி அல்லது நிதியியல் நிறுவனத்தில் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குகளுக்கு நேரடியாகக் கொடுப்பனவுகளைச் செய்யக் கொடுப்பனவுச் செயலிகள் இயலுமைப்படுத்துகின்றன. LANKAQR குறைந்த செலவினைக் கொண்ட எண்ணியல் கொடுப்பனவுத் தீர்வாக இருப்பதுடன் இது, குறிப்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை இலக்காகக் கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர்கள் மீது LANKAQR இனை அடிப்படையாகக் கொண்ட கொடுப்பனவுகளுக்காக கட்டணம் விதிக்கப்படமாட்டாது. வணிகர்கள் அவர்களது வியாபாரத்தலங்களில் காட்சிப்படுத்துவதற்காக LANKAQR இன் அங்கத்துவ நிறுவனங்களினால் கட்டணமெதுவுமின்றி LANKAQR அச்சிடப்பட்ட ஒட்டுத்துண்டுகள் வழங்கப்படுகின்றன. உயர்ந்தபட்ச வணிக கழிவிடல் வீதம் (வணிக கழிவிடல் வீதம் - LANKAQR குறியீட்டினை வழங்குகின்ற வங்கிகளுக்கு வணிகர்களினால் செலுத்தப்படுகின்ற கட்டணம்) 2020ஆம் ஆண்டுப்பகுதியில் 0.5 சதவீதமாக இருக்கும். மேலும், அரச பணிகளுக்கான அனைத்துக் கொடுப்பனவுகளும் கட்டணங்களெதுவுமின்றி இருக்கும். LANKAQR அதன் பயன்பாட்டாளர்களுக்குப் பல்வேறுபட்ட நன்மைகளையும் வழங்குவதன் காரணமாக இலங்கை மத்திய வங்கியும் நிதியியல் நிறுவனங்களும் 2020 இறுதியில் ஒரு மில்லியன் LANKAQR இயலுமைப்படுத்தப்பட்ட வணிகர்களை உருவாக்கிக் கொள்வதனையும் கொடுப்பனவுகளைச் செய்வதற்காகப் பொதுமக்களுக்கான LANKAQR இல் கிடைப்பனவினை அதிகரிப்பதனையும் இலக்காகக் கொண்டுள்ளன. 

இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் திரு. கே. எம். எம். சிறிவர்த்தன சபையோரை வரவேற்றுப் பேசுகையில் இம்முன்னெடுப்பு நாட்டில் நிதியியல் வசதிக்குட்படுத்தலை அதிகரித்து வர்த்தகத்தினை வலுப்படுத்தி நாட்டினை சுபீட்சப் பாதைக்குக் கொண்டு செல்லும் எனக் குறிப்பிட்டார். திரு. டி. குமாரதுங்க LANKAQR இன் நன்மைகள் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டதுடன் இது வெளிநாட்டு உதவிகள் எதுவுமின்றி இலங்கையர் குழுவினராக ஒருங்கிணைந்து பணியாற்றியதன் பெறுபேறு எனக் குறிப்பிட்டதுடன் இதன் மூலம் நாடு பல மில்லியன் ரூபாவினைச் சேமிக்கும் எனவும் குறிப்பிட்டார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் பொதுமக்களுக்கு அளப்பரிய நன்மைகளைக் கொண்டுவரும் கொடுப்பனவு முறைமைகளை மேம்படுத்துவதற்கு அனைத்து நிதியியல் நிறுவனங்களும் உத்வேகத்துடன் ஒன்றுதிரண்டிருப்பது வரலாற்றுச் சம்பவம் எனக் குறிப்பிட்டார். பணம், மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சிகள் சீர்திருத்தங்கள், இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு அஜித் நிவாட் கப்ரால் அவர்கள், வர்த்தகம் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காகப் புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றவதன் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்திக் குறிப்பிட்டார். மேலும் நாட்டிற்கான வினைத்திறன் மிக்கதும் பாதுகாப்பானதுமான கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் முறைமையின் முக்கியத்துவத்தினை அங்கீகரிக்கின்ற விதத்தில் இலங்கை மத்திய வங்கி 2000 களின் தொடக்கத்திலிருந்தே இலங்கையின் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளை நவீனமயப்படுத்தி வருவது பற்றி குறிப்பிட்டதுடன் இலங்கையர்களுக்கு கூடியளவு வர்த்தக, வணிக வாய்ப்புக்களை வழங்குகின்ற புதிய தொழில்நுட்பம் தொடர்ந்தும் பின்பற்றப்படுவதனை பெருமையாகக் குறிப்பிட்டார்.

பிரதம விருந்தினரும் மாண்புமிகு வர்த்தக அமைச்சருமான முனைவர் பந்துல குணவர்த்தன LANKAQR இனை அறிமுகப்படுத்தியமைக்காக மத்திய வங்கியையும் நிதியியல் நிறுவனங்களையும் வாழ்த்தியதுடன் அனைத்து வியாபாரங்களும் அரச பணிகளும் LANKAQR இனைப் பின்பற்றுவதன் மூலம் பொதுமக்கள் எண்ணியல் கொடுப்பனவுகளின் நன்மைகளை குறைந்த செலவில் அனுபவிக்க முடியுமெனக் குறிப்பிட்டார். மாண்புமிகு அமைச்சர் ரூ.100 குறைவான LANKAQR கொடுக்கல்வாங்கல்களுக்கான LANKAQR இற்கான கட்டணங்களைத் தள்ளுபடி செய்து விடுமாறு நிதியியல் நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டதுடன், அரச ஊடகங்கள் மற்றும் ஏனைய ஊடக நிறுவனங்கள் அதேபோன்று அனைத்து வியாபாரங்களும் இத்தேசிய முன்னெடுப்பிற்கு முழுமையான ஆதரவினை வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். “நாடு முழுவதற்குமான LANKAQR” தொடக்கி வைக்கப்படுகின்றமையினை குறிக்கும் முகமாக, மாண்புமிகு அமைச்சர் LANKAQR இனைப் பயன்படுத்தி “இத்துகம” கொவிட் நிதியத்திற்கு LANKAQR இனை அடிப்படையாகக் கொண்ட கொடுப்பனவொன்றினைச் செய்தார்.

“நாடு முழுவதற்குமான LANKAQR” தேசிய பிரச்சாரம் 2020 ஒத்தோபர் 10 சனிக்கிழமையன்று நடைபெறவிருப்பதுடன் இதற்கு அனைத்து LANKAQR உறுதிப்படுத்தப்பட்ட வங்கிகள், நிதியியல் கம்பனிகள் மற்றும் இ-பண சேவைகளை வழங்குபவர்கள் புதிய வணிகர்களுக்கு வசதிகளை வழங்கும் விதத்தில் தமது கிளைகளைத் திறந்து வைத்திருத்தல் வேண்டும். 

LANKAQR இணங்குவிப்பு QR குறியீடு தற்பொழுது இலங்கை வங்கி, கார்கில்ஸ் வங்கி லிமிடெட், இலங்கை வர்த்தக வங்கி பிஎல்சி, டிஎப்சிசி வங்கி பிஎல்சி, நேஷன் டிரஸ்ட் வங்கி பிஎல்சி, நஷனல் டெவலப்மன்ட் வங்கி பிஎல்சி, சம்பத் வங்கி பிஎல்சி, சனச டெவலப்மன்ட் வங்கி பிஎல்சி, எல்பி பினான்ஸ் எல்ஓஎல்சி, டயலொக் மற்றும் மொபிடெல் என்பனவற்றினால் வழங்கப்படுகின்றன. LANKAQR இயலுமைப்படுத்தப்பட்ட செயலிகளாக பிஓசி ஸ்மாட் பே (BOC SmartPay), டிரக்ட்பே (DirectPay), வண் பே (Onepay), ஓரல்பே (OrelPay), கொம்பாங் கியு + (ComBank Q+), பிளாஷ்(Flash), டிஎப்சிசி பே (DFCC Pay), பிறைமி (FriMi), என்டிபி நியோஸ் (NDB NEOS), விபே (WePay), யூபே (UPay), சிம் (CIM), ஐபெ (iPay), டயலொக் இஸி கேஷ் (Dialog eZ Cash)  மற்றும் மொபிட்டெல் எம்கேஷ் (Mobitel mCash)  என்பன காணப்படுகின்றன.

 

FULL TEXT

Published Date: 

Monday, October 5, 2020