ஒதுக்குகளை உயர்த்துவதற்காக ஐ.அ.டொலர் 400 மில்லியன் பரஸ்பரபரிமாற்றலை வழங்க இந்திய றிசேர்வ் வங்கி உடன்பட்டிருக்கிறது

சார்க் பரஸ்பரபரிமாற்றல் வசதியின் கீழ் இலங்கை மத்திய வங்கிக்கு ஐ.அ.டொலர் 400 மில்லியனை வழங்குவதற்கு இந்திய றிசேர்வ் வங்கி உடன்பட்டிருக்கிறது.

இலங்கை மத்திய வங்கிக்கும் இந்திய றிசேர்வ் வங்கிக்குமிடையிலான ஐ.அ.டொலர் 1 பில்லியன் கொண்ட இருபுடை பரஸ்பரபரிமாற்றல் ஒழுங்குசெய்வதற்கான கோரிக்கையொன்றினை இலங்கை மத்திய வங்கி விடுத்திருக்கிறது. இது பரிசீலனையின் கீழ் இருந்து வருகிறது.

இலங்கைக்குப் போதுமான வெளிநாட்டு ஒதுக்குகளைப் பேணுவதற்கு ஆதரவளிப்பதன் மூலம் முதலீட்டாளர் நம்பிக்கையினை உத்வேகப்படுத்துவதற்கு இந்திய றிசேர்வ் வங்கி விரைந்து உரிய நேரத்தில் உதவுகின்ற அதேவேளையில் இறக்குமதிகள், படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் போன்ற வெளிப்பாய்ச்சல்கள் மற்றும் அவசியமானவிடத்து ஒழுங்குமுறையற்ற சீராக்கங்களைத் தவிர்ப்பதற்கு நாணயத்திற்கான ஆதரவு போன்ற வசதிகளையும் வழங்குகிறது.

இவ்வொழுங்குகளுக்கு வசதியளிக்கும் விதத்தில் இந்திய அரசாங்கம் டெல்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் என்பன ஆற்றிய அதிதீவிர வகிபாகத்திற்காக மத்திய வங்கி அதன் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

நாட்டில் தாமதமாக்கப்பட்ட அரசியல் அபிவிருத்திகள் முடிவடைந்தமையினைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கியும் (i) நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை வழங்குவதற்கும் (ii) காலக்கடன்களைப் பெறவும் (iii) இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அரச வங்கிக;டாக தொடர்ந்து கொடுகடன்களைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தைகளை நடத்தவும் ஏற்கனவே நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்றன. இத்தொழிற்பாடுகள் 2019இன் முதலாம் காலாண்டில் முடிவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு மேலும், நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மாண்புமிகு மங்கள சமரவீர அவர்கள் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பில் ப.நா. நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்காக வாசிங்டனுக்கு (2019 சனவரி 14 – 16) விஜயம் செய்யவுள்ளார்.

 

Published Date: 

Wednesday, January 9, 2019