ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்குத் திருப்பியனுப்புதல்

நாணயச் சபையானது, ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்குத் திருப்பியனுப்புதல் அத்தகைய பெறுகைகளை இலங்கை ரூபாவிற்கு மாற்றிக்கொள்ளுதல் தொடர்பில் 2021.02.18ஆம் திகதியிடப்பட்ட 2215/39ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டவாறான விதிகளை வழங்கியுள்ளது.

அதற்கமைய, 2021 பெப்புருவரி 18ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் மேலதிக அறிவித்தல் வரை பின்வரும் விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.

1. பொருட்களின் ஒவ்வொரு ஏற்றுமதியாளரும்:

(i) ஏற்றுமதி செய்யப்பட்ட அனைத்துப் பொருட்கள் தொடர்பிலும் கப்பலேற்றப்பட்ட திகதியிலிருந்து நூற்றி எண்பது (180) நாட்களுக்கிடையில் ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கையில் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்; அத்துடன்

(ii) ஏற்றுமதி செய்யப்பட்ட ஒவ்வொரு பொருட்கள் தொடர்பிலும் ஏற்றுமதிப் பெறுகைகளின் ஒவ்வொரு கிடைப்பனவு மீதுமான தொடர்பான அனைத்து ஆவணச்சான்றுகளையும் அத்தகைய பெறுகைகளை இலங்கையில் பெறுகின்ற தொடர்பான உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளிடம் அல்லது உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளிடம் (இதனகத்துப் பின்னர் “உரிமம்பெற்ற வங்கிகள்” என அழைக்கப்படும்) உடனடியாக சமர்ப்பித்தல் வேண்டும்.

2. இவ்விதியின் கீழ் வேண்டப்பட்டவாறு, பொருட்களின் ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் இலங்கைக்குள் அத்தகைய ஏற்றுமதிப் பெறுகைகளைப் பெற்றுக்கொண்டதும் உடனடியாக, இலங்கையில் பெறப்பட்ட குறிப்பிட்ட சொல்லப்பட்ட ஏற்றுமதிப் பெறுகைகளில் மொத்தத்திலிருந்தும் இருபத்தைந்து சதவீதத்தினை (25%) உரிமம்பெற்ற வங்கியொன்றின் மூலமாக மாற்றிக் கொள்ளுதல் வேண்டும்.

3. இலங்கையில் பெறப்பட்ட ஏற்றுமதிப் பெறுகைகளிலிருந்து மேற்சொல்லப்பட்ட இருபத்தைந்து சதவீதத்தினை (25%) மாற்றிக் கொள்ளும் தேவைப்பாடு, நாணயச் சபையினால் காலத்திற்குக் காலம் வேறு ஏதேனும் சதவீதம் நிர்ணயிக்கப்படும் வரை தொடர்ந்திருத்தல் வேண்டும்.

4. குறித்துரைக்கப்பட்டவாறான காலப்பகுதிக்குள் இலங்கையில் ஏற்றுமதிப் பெறுகைகள் பெறப்பட்டமையினையும் இவ்விதியில் அத்தகைய பெறுகைகள் மாற்றப்பட்டுள்ளமையினையும் அனைத்து உரிமம்பெற்ற வங்கிகளும் கட்டாயமாகவும் கடுமையாகவும் கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன் அவற்றுடன் தொடர்பான அல்லது தொடர்புபட்ட அனைத்து ஆவணச்சான்றுகளையும் பேணி வருதலும் வேண்டும்.

5. அனைத்து உரிமம்பெற்ற வங்கிகளும் காலத்திற்குக் காலம் கேட்டுக் கொள்ளப்படுகின்றவாறு இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல் வேண்டுமென்பதுடன், விடயத்தினைப் பொறுத்து விதியின் கீழ் பேணப்படும் பதிவேடுகளைப் புலனாய்வு செய்வதற்கும் பரீட்சிப்பதற்கும் இவ்விதிகளுடன் முழுமையான விதத்திலும் கடுமையான விதத்திலும் இணங்கிச் செல்வதற்கு அத்தகைய உரிமம்பெற்ற வங்கிகளினால் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் பரீட்சிப்பதற்கும் மீளாய்வு செய்வதற்குமாக ஆளுநரினால் அல்லது துணை ஆளுநரினால் அதிகாரமளிக்கப்பட்டவாறான இலங்கை மத்திய வங்கி அலுவலர்களை எவ்வித கட்டுப்பாடுமின்றி அணுகுவதற்கு அனுமதித்தல் வேண்டும்.

6. இவ்விதி, ஏற்றுமதி செய்யப்பட்ட அனைத்துப் பெருட்கள் தொடர்பிலும் அத்துடன் 2021 பெப்புருவரி 18ஆம் திகதிக்குப் பின்னர் ஏதேனும் திகதியில் பொருட்கள் கப்பலேற்றப்பட்ட திகதியிலிருந்து நூற்றி எண்பதாவது (180) ஆவது நாள் நியதிக்கும் இலங்கையில் கிடைக்கப்பெறுகின்ற ஏற்றுமதிப் பெறுகைகளுக்கும்; ஏற்புடையதாதல் வேண்டும்.

7. இவ்விதிகள் 2021 பெப்புருவரி 18ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

8. ஏதேனும் சந்தேகங்களைத் தவிர்த்துக் கொள்வதற்காகவும் இவ்விதிகளின் நோக்கத்திற்காகவும் “ஏற்றுமதிப் பெறுகைகள்” என்பது இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 2019.10.17ஆம் திகதியிடப்பட்ட இல.2145/49ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 7ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 29ஆம் பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குவிதிகளின் கீழும் நியதிகளுக்கமைவாகவும்; இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட வேண்டுமெனத் தேவைப்படுத்தப்பட்ட அத்தகைய பெறுகைகளை உள்ளடக்குதல் வேண்டும்.

Published Date: 

Friday, February 19, 2021