உரிமம் பெற்ற வங்கிகளின் பணிப்பாளர் சபைக்கான “தாக்குப்பிடிக்கும் விதத்தில் முன்னேறுதல்” என்ற தலைப்பிலான தொழில்நுட்ப அமர்வு

டிஜிட்டல் யுகத்தில் சவால்களை முனைப்புடன் எதிர்கொள்ளக்கூடிய வலுவானதும் இயலாற்றல் மிக்கதுமான வங்கித்தொழில் துறையை உறுதிப்படுத்தும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியானது இலங்கையில் தொழிற்படும் அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளினதும் பணிப்பாளர் சபை, முதன்மை நிறைவேற்று அலுவலர்கள் மற்றும் முக்கிய முகாமைத்துவ ஆளணியினர்களின் அறிவு மட்டங்களை மேலும் மேம்படுத்த தொழில்நுட்ப அமர்வொன்றை “தாக்குபிடிக்கும் விதத்தில் முன்னேறுதல்” என்ற தலைப்பில் 2018 நவெம்பர் 14ஆம் திகதியன்று ராஜகிரியவிலுள்ள வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வுநிலையத்தில் ஒழுங்குசெய்தது.

ஆரம்ப உரையை வழங்கிய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், பொருளாதாரத்தின் நிலை தொடர்பான பொழிப்பையும் இலங்கை மத்திய வங்கியின் அண்மைய நாணயக் கொள்கை நிலைக்கான காரணங்களையும் விளக்கினார். மூலதனத் தேவைப்பாடு, தொழில்நுட்ப இடர்நேர்வு முகாமைத்துவம் என்பனவற்றுடன் தொடர்புபட்ட வங்கிகளுக்கான ஒழுங்குமுறைக் கட்டமைப்பை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆளுநர் விளக்கினார். நிதியியல் தொழில்நுட்பத்தின் தோற்றம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் என்பவை வங்கிகளின் வியாபார மாதிரிகளில் பாரியளவு மாற்றத்தைக் காலப்போக்கில் ஏற்படுத்துவதுடன் புதிய வியாபார வாய்ப்புக்களையும் தோற்றுவிக்கும். ஆயினும் வங்கித்தொழில் முறைமையின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் இப்புதிய தொழில்நுட்பங்களை இணைத்துக் கொள்வதற்கு வங்கிகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டுமென ஆளுநர் சுட்டிக் காட்டினார். வங்கித்தொழில் துறையின் செயலாற்றம் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் அபிவிருத்திகள் தொடர்பில் உரையாற்றிய வங்கி மேற்பார்வைப் பணிப்பாளர், மேம்படுத்தப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் வலுப்படுத்தல்களுடனான சட்டமொன்றை இயற்றுதல், வங்கிகளின் மூலதனத்தை வலுப்படுத்தல், பாசல் III கட்டமைப்புடன் இணங்கிச் செல்லுதல் மற்றும் இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமம் 9 இன் முன்மதியான பின்பற்றல் போன்ற விடயங்களில் விசேட கவனம் செலுத்தினார்.

இத்தொழில்நுட்ப அமர்வானது, எதிர்காலச் சபைகளின் கலாச்சார நடத்தை, தொழில்நுட்ப இடர்நேர்வுக்கு வங்கிகளின் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மை மற்றும் டிஜிட்டல் யுகத்தில் பணம் தூயதாக்கலுக்கெதிரான இணங்குவிப்புக்களுக்கான சவால்கள் போன்ற காலத்திற்கேயுரிய தலைப்புக்களில் பிரசித்த பெற்ற மூன்று வளவாளர்களின் அனுபவப் பகிர்வினூடாக மேலும் மெருகூட்டப்பட்டது. ஸ்டான்டர்ட் சார்டட் வங்கியின் ஏசியான், தெற்காசியா, பெரும்பாக சீனா மற்றும் வட ஆசியா பிராந்திய துணைக் கம்பனி ஆளுகைத் தலைவர் திரு. கார்ல் கொலிங்ஸ்வோர்த் எதிர்காலப் பணிப்பாளர் சபைக்குத் தேவையான புதிய திறன்கள், கலாச்சாரம் மற்றும் நடத்தை பற்றி விரிவாக விளக்கினார். சிட்டி வங்கியின் வியாபாரத் தொடர்ச்சி முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்ப இடர்நேர்வு முகாமைத்துவப் பிராந்தியத் தலைவர் திரு. பிரயன் மக்கினோன் தொழில்நுட்ப இடர்நேர்வுகளைத் தாக்குப்பிடிக்கும் விதத்திலான தொழில்நுட்ப இடர்நேர்வு முகாமைத்துவம் மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற ஏற்பாடுகளின் தேவைப்பாடுகளை விவரித்தார். திறைசேரி அலுவலகத்தின் தொழில்நுட்ப உதவிக்கான ஐக்கிய அமெரிக்க திணைக்களத்தின் வதிவிட ஆலோசகர் திரு. கெவின் வெலன் டிஜிட்டல் வங்கித்தொழிலில் வங்கிகள் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்துநர்கள் எதிர்நோக்கும் நிதியியல் தொழில்நுட்ப மற்றும் பணச் சுத்தரிகரிப்பு தொடர்பான சவால்கள்/ வாய்ப்புக்கள் பற்றி விளக்கினார்.

இலங்கை மத்திய வங்கி உரிமம் பெற்ற வங்கிகளின் பணிப்பாளர்கள் மற்றும் முதன்மைத் தொழிற்பாட்டு அலுவலர்கள் நிதியியல் தொழில்நுட்பம், அத்தொழில்நுட்பத்தின் காரணமாக எழும் இடர்நேர்வுகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருப்பதனை இலங்கை மத்திய வங்கி கட்டாயமாகக் கருதுகின்றது. அதன்படி, பணிப்பாளர் சபையின் அறிவுத்திறனை மேம்படுத்தவும் உரிமம் பெற்ற வங்கிகளின் பணிப்பாளர் சபை மற்றும் முதன்மைத் தொழிற்பாட்டு அலுவலர்க;டனான தொடர்புகளை வலுப்படுத்துவதற்காகவும் இத்தொழில்நுட்ப அமர்வினை மத்திய வங்கி நடத்தியது. இந்த அமர்வு வங்கித் தலைவர்கள் மற்றும் முதன்மை நிறைவேற்று அலுவலர்களுடனான காலாந்தரமான கூட்டங்களுக் மேலதிகமாக நடாத்தப்பட்டதுடன் வங்கித்தொழில் துறையின் உறுதித்தன்மையின் நலனுக்காக இத்தகைய உரையாடல்களைத் தொடர விரும்புகிறது.

உள்நாட்டில் கூட்டிணைக்கப்பட்ட வங்கிகளின் வங்கித் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை, இலங்கையில் தொழிற்படும் வெளிநாட்டு வங்கிகளை மேற்பார்வை செய்யும் பிராந்திய பிரதிநிதிகள், அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளினதும் முதன்மை நிறைவேற்று அலுவலர்கள், முதன்மை தொழிற்பாட்டு அலுவலர்கள், முதன்மை இடர்நேர்வு அலுவலர்கள் மற்றும் முதன்மை இணங்குவிப்பு அலுவலர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் மூத்த அலுவலர்கள் உள்ளிட்ட 200 இற்கும் மேற்பட்ட பங்குபற்றுநர்கள் இத்தொழில்நுட்ப அமர்வில் கலந்து கொண்டனர்.

Published Date: 

Friday, November 16, 2018