இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம் நிறுவப்பட்டிருக்கிறது

திருத்தப்பட்டவாறான, 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் 33ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிறுவனங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பப்படும் அனைத்து வெளிவாரி முறைப்பாடுகளையும் குறைகளையும் கையாளும் பொருட்டு ஒரே கூரையின் கீழ் பணியாற்றும் விதத்தில் 2020.08.10ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கி “நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம்” என்ற பெயரில் புதிய திணைக்களமொன்றினை நிறுவியுள்ளது.

நிதியியல் வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகளையும் குறைகளையும் கவனத்திற்கொள்வது நிதியியல் சந்தை ஒழுங்குபடுத்தல்களினதும் நீண்டகால நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினதும் முக்கிய குறிக்கோளாகும். நிதியியல் பணிகளை வழங்குவதில் நிதியியல் பணி வழங்குவோரிடையே காணப்படும் அதிகரித்த போட்டியின் காரணமாக நிதியியல் பணிகளைப் பயன்படுத்துபவர்களின் நலவுரித்துக்களைப் பாதுகாப்பதற்கு பொருத்தமான பொறிமுறையொன்றுக்கான தேவை ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம் நிதியியல் முறைமையின் உறுதிப்பாடும் மேன்மையும் பாதுகாக்கப்படுகிறது. இலங்கையின் நிதியியல் சந்தைகளிலுள்ள நிதியியல் வாடிக்கையாளர்களின் அனுபவம் தொடர்பான அண்மைய அறிக்கைகள், மிகுந்த நிதியியல் அறிவினைக் கொண்ட வாடிக்கையாளர்கள் கூட சில நிதியியல் பணி வழங்குவோரின் தவறான சந்தை நடத்தைகளினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. 

ஆரம்பத்தில், நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம் இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிதியியல் பணி வழங்குவோர் தொடர்பான நிதியியல் வாடிக்கையாளரின் முறைப்பாடுகளின் மீதும் குறைகளின் மீதும் கவனத்தினைச் செலுத்தும். இறுதிக் கட்டத்தில், சந்தை நடத்தைகளைக் கண்காணித்தல், நுகர்வோர் வலுவளித்தல், நிதியியல் வாடிக்கையாளர் அறிவூட்டல், நிதியியல் பணி வழங்குவோரின் நியாயமற்ற போட்டியினைக் கண்காணித்தல் போன்ற துறைகளையும் உள்ளடக்கத்தக்க விதத்தில் விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இம்முயற்சியின் இறுதிக் குறிக்கோள் இலங்கையின் நிதியியல் தொழில்துறையிலுள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சுயாதீனமான அமைப்பொன்றை உருவாக்குவதேயாகும். 

பொதுமக்கள் இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகளுக்கும் அவர்களது முறைப்பாடுகளையும் குறைகளையும் அனுப்புவதற்கும் பின்வரும் தொடர்புவிபரங்களைப் பயன்படுத்தவும்.

தொலைபேசி : 94 11 247 7966

தொலைநகல்: 94 11 247 7744

அஞ்சல் முகவரி : நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம், இல.30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு 01

மின்னஞ்சல் : fcrd@cbsl.lk

Published Date: 

Friday, August 21, 2020