இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்(கொ.மு.சு) – 2020 சனவரி

2020 சனவரியில் தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மெதுவான வேகத்தில் விரிவடைந்து 54.0 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தமைக்கு புதிய கட்டளைகளிலும் கொள்வனவு இருப்புக்களிலும் காணப்பட்ட மெதுவான விரிவாக்கமே முக்கிய காரணமாகும். 

குறிப்பாக உணவுத் தயாரிப்பு மற்றும் குடிபானத் துறையில் புதிய கட்டளைகள், உற்பத்தி மற்றும் கொள்வனவு இருப்பு துணைச் சுட்டெண்கள் மெதுவான வேகத்தில் விரிவடைந்தமைக்கு பண்டிகைக் காலத்திற்குப்பின்னர் கேள்வி குறைவடைந்தமையே காரணமாகும். மேலும், புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் துறையின் கொள்வனவுகளின் இருப்புக்கள் மெதுவடைந்தமைக்கு சீனப் புத்தாண்டு விடுமுறைகள் காரணமாயமைந்தன. ஊழியர்கள் உயர்ந்த கொடுப்பனவுகளைக் கொண்ட தொழில்களைப் பெறுவதற்காக தமது தற்போதைய தொழில்களை விட்டுச்சென்றமையின் காரணமாக இம்மாதகாலப்பகுதியில் தொழில்நிலை சுருக்கமடைந்தது. 

அதேவேளை, குறிப்பாக புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள், தயாரிப்புத் துறையின் நிரம்பலர் விநியோக நேரம் கணிசமானளவிற்கு நீண்டு காணப்பட்டது. நிரம்பலர் விநியோக நேரம் நீண்டு செல்வது வழமையாக, விரிவடைந்த தயாரிப்பு நடவடிக்கைகளின் காரணமாக மூலப் பொருட்களுக்கான உயர்ந்த கேள்வியை எடுத்துக்காட்டுகின்ற போதும் 2020 சனவரி தொடக்கத்தில் கொரோனா வைரஸ் நோய் (கொவிட் - 19) சீனாவில் பரவியமையே இத்தாக்கத்திற்கு முக்கிய காரணமாகக் காணப்பட்டது. மேலும், இத்துறையிலுள்ள பதிலிறுப்பாளர் சீனாவிலிருந்தான மூலப்பொருட்களுக்கான அவர்களின் இறக்குமதிக் கட்டளைகள் இதே காரணத்திற்காக காலவரையறையின்றி தாமதமாவதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். 

தொழில் நிலை தவிர்ந்த, கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் தயாரிப்பின் அனைத்து துணைச் சுட்டெண்களும் தொடக்க மட்டமான 50.0 (நடுநிலையான) அளவினை விஞ்சி 2020 சனவரி மாத காலப்பகுதியில் தயாரிப்பு நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த விரிவாக்கத்தினை சமிக்ஞைப்படுத்தின.

புதிய கொரோனா வைரஸ் நோயின் பரவல் உலகளாவிய வழங்கல் சங்கிலிக்கு இடையூறாக அமையுமென குறிப்பாக ஆடைத் துறையுடன் தொடர்பான தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்ற போதும் அடுத்த மூன்று மாதங்களுக்கான தயாரிப்பு நடவடிக்கைகளுக்கான ஒட்டுமொத்த எதிர்பார்ப்புக்கள் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் சிறிதளவில் மேம்பாடடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

முழுவடிவம்

Published Date: 

Friday, February 14, 2020