அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

 

கட்டடவாக்கத் துறைக்கும் அரசாங்கத்தின் ஏனைய வழங்குநர்களுக்குமான திரவவசதி

1.

இவ்வசதியின் நோக்கம் என்ன?

இத்திரவவசதியின் நோக்கம் யாதெனில், கொவிட்-19 இனால் மோசமாகப் பாதிக்கப்பட்ட கட்டடவாக்கம், மருந்தாக்கல் மற்றும் அடையாளம் காணப்பட்ட துறைகளுக்கு வெளிநிற்கின்ற கொடுப்பனவுகளுக்கான ஏற்பாவணக்கடிதத்திற்கெதிராக கொடுகடன் வசதிகளை வழங்குவதற்கு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளை இயலச்செய்வதாகும்.

2.

அரச திறைசேரியிடமிருந்து “வெளிநிற்கின்ற கொடுப்பனவுகளுக்கான ஏற்பாவணக்கடிதம்” இனைப் பெற்றுக்கொள்ள தகைமை உடையவர்கள் யார்?

இலங்கை அரசாங்கத்திடமிருந்து வரவேண்டிய நிலுவைகளைக் கொண்டுள்ள கட்டவாக்கம், மருந்தாக்கல் துறைகள் மற்றும் ஏனைய அடையாளம் காணப்பட்ட துறைகள் போன்றவற்றிலுள்ள ஒப்பந்ததாரர்கள் மற்றும் வழங்குநர்கள்.

3.

தகைமையுடைய கடன்பாட்டாளர்களை யார் தெரிவுசெய்கிறார்கள்?

தொடர்பான அமைச்சுக்களும் அரச திணைக்களங்களும்

4.

ஒப்பந்ததாரர்களையும் வழங்குநர்களையும் தெரிவுசெய்வதற்கான நடைமுறை என்ன?

பின்வரும் வெப்தளத்தில் 2020.06.29 அன்று திறைசேரி செயலாளரினால் விடுக்கப்பட்ட “கட்டடவாக்கம் மற்றும் ஏனைய துறைகளிலுள்ள அரச ஒப்பந்ததாரர்/ வழங்குநர்களின் பொருளாதார மீளெழுச்சிக்கு உதவியளித்தல்” தொடர்பான திறைசேரி தொழிற்பாடுகள் சுற்றறிக்கை இலக்கம் 01/2020 இனை தயவுசெய்து பார்க்கவும்.
http://www.treasury.gov.lk/treasury-operations-department

5.

“வெளிநிற்கின்ற கொடுப்பனவுகளுக்கான ஏற்பாவணக்கடிதத்தினை” யார் யாருக்கு வழங்குகின்றார்?

நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், ஒப்பந்ததாரர்/ வழங்குநரின் வங்கியான குறித்துரைக்கப்பட்ட உரிமம்பெற்ற வர்த்தக வங்கிக்கு ஒப்பந்ததாரர்/ வழங்குநருக்கான பிரதியொன்றுடன் வழங்குகிறார்.

6.

வெளிநிற்கின்ற கொடுப்பனவுகளுக்கான ஏற்பாவணக்கடிதத்தினை எங்கேயிருந்து பெற்றுக்கொள்ள முடியும்?

தொடர்பான அமைச்சு அல்லது அரச திணைக்களத்திடமிருந்து

7.

குறித்துரைக்கப்பட்ட வங்கிக் கணக்கு என்றால் என்ன?

ஒப்பந்ததாரரினால்/ வழங்குநர்களினால் முன்மொழியப்பட்ட வங்கிக் கணக்குக்கும் இக்கணக்கு தொடர்பான விபரங்கள் தொடர்பான அமைச்சுக்கு அல்லது அரச திணைக்களத்திற்கு வழங்கப்படுகின்றன.

8.

செயற்றிட்டமொன்றிற்காக வாடிக்கையாளரொருவருக்கு உரிமம்பெற்ற வர்த்தக வங்கியொன்று ஏற்கனவே நிதியிட்டிருக்கும் சூழ்நிலையில், வாடிக்கையாளர் அதே செயற்றிட்டத்திற்கான தற்போதைய நிலுவையினை தீர்ப்பனவு செய்யாமல் அதே செயற்றிட்டத்திற்காக வெளிநிற்கின்ற கொடுப்பனவுகளுக்கான ஏற்பாவணக்கடிதத்திற்கெதிராக புதிய நிதியிடலுக்கான கோரிக்கையினை விடுக்க முடியுமா?

உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் கழிவிடுவதற்கு ஏற்கனவே இணங்கிக்கொள்ளப்பட்ட நிலுவையிலுள்ளவை நீங்கலாக, அரசாங்கத்திடமிருந்து வரவேண்டிய வெளிநிற்கின்ற பெறுமதி வரையிலான தொகைக்கு திறைசேரி, வெளிநிற்கின்ற கொடுப்பனவுகளுக்கான ஏற்பாவணக்கடிதத்தினை வழங்குகிறது. வெளிநிற்கின்ற கொடுப்பனவுகளுக்கான ஏற்பாவணக்கடிதத்தினை வைத்திருக்கும் வாடிக்கையாளரொருவர் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளிடமிருந்து திரவ வசதிகளை கோருவதற்கு தகுதியுடையவராக இருப்பதுடன், இத்திரவத்தன்மை வசதியின் கீழ் வழங்கப்பட்ட நிதியம் தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களில் குறித்துரைக்கப்பட்ட துறைகளுக்கு கடன் வழங்குவதற்கு மாத்திரமே பிரத்தியேகமாக பயன்படுத்தப்பட்டது என்பதனை உறுதிப்படுத்துமாறும் உரிமம்பெற்ற வர்த்தக வங்கி கேட்டுகொள்ளப்படுகிறது. 

9.

கட்டடவாக்கத் துறைக்கான திரவத்தன்மை வசதியின்கீழ் கடன்பாட்டாளரொருவருக்கு வழங்கப்படுகின்ற உயர்ந்தபட்ச கடன்தொகை எவ்வளவு?

வெளிநிற்கின்ற கொடுப்பனவுகளுக்கான ஏற்பாவணக்கடிதத்தினை வைத்திருக்கும் வாடிக்கையாளரொருவர் குறித்துரைக்கப்பட்ட வெளிநிற்கின்ற கொடுப்பனவுகளுக்கான ஏற்பாவணக்கடிதத் தொகையினை விஞ்சாததொகையொன்றினை 4 சதவீதத்தினை விஞ்சாத வட்டி வீதத்தில் குறித்துரைக்கப்பட்ட வங்கியிலிருந்து கடன்களைக் கோருவதற்கு தகுதியுடையவராவார்.

10.

கட்டடவாக்கத்துறைக்கான திரவத்தன்மை வசதியின் கீழ் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கி வழங்கும் நிதியத்திற்கான வட்டி வீதம் என்ன?

இலங்கை மத்திய வங்கி உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு ஆண்டிற்கு 1 சதவீதம் கொண்ட சலுகை வட்டி வீதத்தில் நிதியினை வழங்குகிறது.

11.

இலங்கை மத்திய வங்கி உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு ஆண்டிற்கு 1 சதவீதம் கொண்ட சலுகை வட்டி வீதத்தில் நிதியினை வழங்குகிறது.

1 சதவீதம் வட்டி வீதம் 180 நாட்கள் வரை மாற்றமின்றியிருக்கும்

12.

கட்டடவாக்கத் துறைக்கான திரவத்தன்மை வசதியின் கீழ் ஒப்பந்ததாரர்/ வழங்குநர்களுக்கான உயர்ந்தபட்சக் கடன் வழங்கும் வீதம் என்ன?

உயர்ந்தபட்ச வட்டி வீதம் ஆண்டிற்கு 4 சதவீதமாகும்.

13.

கடன்பாட்டாளரின் உயர்ந்தபட்ச மீள்கொடுப்பனவுக் காலம் யாது?

திறைசேரி, வங்கிகளின் குறித்துரைக்கப்பட்ட கணக்குகளில் வெளிநின்ற தொகையினை தீர்ப்பனவு செய்வதற்கு தேவையான நிதியினை 2020.12.31 இற்கு முன்னர் வழங்குமென வெளிநிற்கின்ற கொடுப்பனவுகளுக்கான ஏற்பாவணக்கடிதம் உறுதிப்படுத்துவதனால் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் முன்மதியுடைய கடன் வழங்கல் நியமங்களை பிரயோகிப்பது அவசியமாகும்.

14.

கடனின் வட்டியை பெற்றுக்கொள்வதற்காக வெளிநிற்கின்ற கொடுப்பனவுகளுக்கான ஏற்பாவணக்கடிதத்திற்கெதிராக உரிமம்பெற்ற வங்கியொன்று இலாபத்தினைப் பெற்றுக்கொள்ள முடியுமா?

இவ்விடயத்தில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் முன்மதியுடைய கடன் வழங்கல் நியமங்களை பிரயோகிப்பது அவசியமாகும்.

15.

எத்தகையதொரு கட்டடத்தில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கி கடனை விடுவித்தல் வேண்டும் இலங்கை மத்திய வங்கியிலிருந்து நிதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பா அல்லது இலங்கை மத்திய வங்கியிலிருந்து நிதிகளைப் பெற்றுக்கொண்டதன் பின்பா?

உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் முன்மதியுடைய விதத்தில் கடன்களை வழங்கலாம் என்பதுடன் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து திரவத்தன்மை ஆதரவாக நிதியினை கோரமுடியும். இல்லையெனில், உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் இலங்கை மத்திய வங்கியிலிருந்து நிதியினைப் பெற்ற திகதியிலிருந்து ஒரு வாரத்திற்குள் தகைமையுடைய கடன்பாட்டாளர்களுக்கு கடன்களை பகிர்ந்தளிப்பதனை உறுதிப்படுத்தல் வேண்டும்.

16.

கட்டடவாக்கத் துறைக்கான திரவத்தன்மை வசதியின் கீழ் கோரப்பட்ட நிதியினை விடுவிப்பதற்கு இலங்கை மத்திய வங்கிக்கு எவ்வளவு காலமெடுக்கும்?

இது தொடர்பில் விடுக்கப்பட்ட தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களில் குறித்துரைக்கப்பட்ட தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்குட்பட்டு, மத்திய வங்கி ஒரு வியாபார நாளுக்குள் வங்கிகளுக்கு நிதியினை விடுவிக்கும். கோரிக்கைகள் நண்பகல் 1200 மணிக்கு முன்னர் பெறப்படுமாயின் நிதியம் அதே நாளன்று விடுவிக்கப்படும்.

17.

இலங்கை மத்திய வங்கியிலிருந்து கடன்பட்ட நிதியத்தினை உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மீளச்செலுத்த எடுக்கும் காலம் எவ்வளவு?

திரவத்தன்மை வசதி 180 நாட்களுக்குரியதென்பதனால், இலங்கை மத்திய வங்கி, அவ்வங்கியினால் நிதியம் விடுவிக்கப்பட்ட திகதியிலிருந்து 180 நாட்களில் தொடர்பான வங்கியின் நடைமுறைக் கணக்கிலிருந்து கடனின் முதல் தொகையினையும் வட்டியையும் கழித்துக்கொள்ளும்.

18.

வாடிக்கையாளர் வங்கிக்கு மாதாந்த அடிப்படையில் வட்டியைச் செலுத்தல் வேண்டுமா?

இவ்விடயத்தில் வங்கிகள் முன்மதியுடைய கடன் வழங்கல் நியமங்களை பிரயோகிப்பது அவசியமாகும்.

19.

ஆண்டொன்றிற்கு 4 சதவீதத்தில் காணப்பட்ட 180 நாட்களுக்குமான வங்கிக்கான வட்டியை கடனைப் பகிர்ந்தளிக்கின்ற நேரத்தில் முன்கூட்டியே அறவிட்டுக் கொள்ளமுடியுமா?

கடன்பாட்டாளரின் சம்மதத்துடன் வங்கி இதனைச் செய்யலாம்.

20.

அரசாங்கத்தினால் ஒப்பந்ததாரர்/ வழங்குநர்களுக்கு சேரவேண்டிய தொகை நேரகாலத்துடன் தீர்ப்பனவு செய்யப்படும் விடயத்தில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கியொன்று என்ன செய்தல் வேண்டும்?

அத்திகதி வரையிலான வட்டியுடன் முழுத்தொகையினையும் இலங்கை மத்திய வங்கிக்கு உடனடியாக மீளச்செலுத்துமாறு உரிமம்பெற்ற வர்த்தக வங்கி கேட்டுக்கொள்ளப்படும்.

21.

180 நாட்களுக்குப் பின்னர் வெளிநிற்கின்ற கொடுப்பனவுகளுக்கான ஏற்பாவணக்கடிதம் தொடர்பான பெறுகைகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் சந்தர்ப்பமொன்றில் இலங்கை மத்திய வங்கியிலிருந்தான நிதியிடலைப் புதுப்பித்துக்கொள்வதற்கான நடைமுறை என்ன?

வெளிநிற்கின்ற கொடுப்பனவுகளுக்கான ஏற்பாவணக்கடிதமானது 2020.12.31 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ வங்கியின் குறித்துரைக்கப்பட்ட கணக்குகளிலுள்ள வெளிநிற்கும் நிலுவையினை தீர்ப்பனவு செய்வதற்கு அவசியமான நிதியினை திறைசேரி வழங்கும் என்பதனை உறுதிப்படுத்துகிறது. எனினும், தீர்ப்பனவு செய்யப்படாத தொகைக்காக ஒப்பந்ததாரர்/ வழங்குநர்களுக்கு புதிய வெளிநிற்கின்ற கொடுப்பனவுகளுக்கான ஏற்பாவணக்கடிதத்தினை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானிக்குமாயின் மத்திய வங்கியுடனான வாக்குறுதியளிக்கப்பட்ட திறைசேரி உண்டியல் மற்றும் முறிகளினால் உத்தரவாதம் பெறப்பட்ட வாக்குறுதிச் சான்றிதழ்களை வங்கி புதிதாக சமர்ப்பித்ததும் வசதியின் முதிர்ச்சியில் புதிய நிதியம் உடனடியாக கிடைக்கச்செய்யப்படும்.

22.

கட்டடவாக்கத் துறைக்கான திரவத்தன்மை வசதியின் கீழ் நிதியத்தினை பெறுவதற்கு உத்தரவாதம் வழங்கக்கூடிய பிணையங்கள் யாவை?

உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் தமது சொந்த உடமையிலுள்ள திறைசேரி உண்டியல்களையும் திறைசேரி முறிகளையும் மாத்திரம் பிணையங்களாக உத்தரவாதப்படுத்த முடியும்.

23.

கட்டடவாக்கத் துறைக்கான திரவத்தன்மை வசதியின் கீழ் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் பிணையங்களை உத்தரவாதப்படுத்துவதற்கான நடைமுறைகள் என்ன?

திறந்த சந்தைத் தொழிற்பாடுகளில் பிணையங்களை உத்தரவாதப்படுத்தவதற்கு பின்பற்றப்படுகின்ற அதே நடைமுறைகளை வர்த்தக, கணனி வழி அதேநேர இலத்திரனியல் விலைக்குறிப்பீடு முறைமைகளினூடாக பிணையங்களை உத்தரவாதப்படுத்தல் வேண்டும்.

24.

கட்டடவாக்கத் துறைக்கான திரவத்தன்மை வசதியின் கோரிக்கைக்காக இலங்கை மத்திய வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய அவசியமான ஆவணங்கள் யாவை?

  1. துல்லியமான முறையில் நிரப்பப்பட்ட கடன் உடன்படிக்கை
  2. சரியான முறையில் நிரப்பப்பட்ட உத்தரவாத உடன்படிக்கை/ உடன்படிக்கைகள்
25.

மேற்குறிப்பிட்ட ஆவணங்களை எவ்வாறு பெறுவது?

உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அனைத்து ஆவணங்களும் தகவல்களும் அட்டவணை ஐஐஐ இனை தயாரிப்பதற்கான தொழிற்பாட்டு கைநூல் மற்றும் தொடர்புகொள்வதற்கான தகவல்களும் அனைத்து வங்கிகளினதும் முதன்மை நிறைவேற்று அலுவலர்களுக்கு 2020.07.23 அன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

26.

கட்டடவாக்கத் துறைக்கான திரவத்தன்மை வசதி தொடர்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதற்கு தொடர்புகொள்ள வேண்டிய விபரங்கள்?

   1. கட்டடவாக்கத் துறைக்கான திரவத்தன்மை வசதி தொடர்பில் மத்திய வங்கியிலிருந்து மேலும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் உள்நாட்டுத் தொழிற்பாடுகள் திணைக்களத்தினைத் தொடர்புகொள்ளலாம். (011-2477050, 011-2477626, 011-2477044)

   2. கட்டடவாக்கத் துறைக்கான திரவத்தன்மை வசதி தொடர்பான திறைசேரி தொழிற்பாடுகள் திணைக்களத்திலிருந்து மேலும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள திரு. ஆர். எம். ஏ. ரத்நாயக்க, பணிப்பாளர் நாயகம், (தொலைபேசி 071-8321648) திரு. திலிப் சில்வா மேலதிக பணிப்பாளர் நாயகம் (தொலைபேசி 071-4441020)

 

 

படுகடன் சட்ட இசைவுத்தாமதம் மற்றும் வங்கித்தொழில் துறை ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகள்

அடிக்கடி கேட்கப்படும் இவ்வினாக்கள் 2020.07.27 வரை மத்திய வங்கியினால் விடுவிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டிருப்பதுடன் கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட தனிப்பட்டவர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தொடர்பானவையாக ஏதுமிருப்பின், பதிலிறுப்புக்கள் எதிர்கால ஒழுங்குவிதிகள் அத்துடன்/ அல்லது திருத்தங்கள் அடிப்படையாகக் கொண்ட மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கும்.

1.

கொவிட்-19 நிவாரணத் திட்டத்தின் கீழ் சட்ட இசைவுத்தாமதத்திற்கு தகைமையுடையவர்கள் யார்?

கொவிட்-19 தொற்றின் காரணமாக அவர்களது தொழில் அல்லது வருமானத்தினை இழந்த சுயதொழில்புரியும் தனிப்பட்டவர்கள் மற்றும் ஏனைய தனிப்பட்டவர்கள்.

2020.03.27ஆம் நாளன்று விடுக்கப்பட்ட 2020ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரிவு 2இல் அடையாளம் காணப்பட்ட துறைகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து வசதிகள், கொவிட்-19 இனால் உண்மையில் பாதிக்கப்பட்ட தனிப்பட்டவர்களின் வருமானம், தொழில் மற்றும் போதுமான ஆவணங்களுடன் ஆதாரங்களைக் கொண்டுள்ள அந்நோக்கத்திற்காக வசதிகளைப் பெற்றுக்கொண்ட ஆட்கள்/ வியாபாரங்கள் என்பன சட்ட இசைவிற்கு தகைமையுடைய வாடிக்கையாளராவர்.

2.

கொவிட்-19 நிவாரணத்திற்கு தகைமையுடைய வியாபாரங்கள்/ துறைகள் யாவை?

சுற்றுலா, ஆடை, தகவல்தொழில்நுட்பம், தேயிலை, வாசனைத்திரவியம் மற்றும் பெருந்தோட்டம் உள்ளிட்ட நேரடி மற்றும் மறைமுக ஏற்றுமதிகளுடன் தொடர்பான வியாபாரங்கள் மற்றும் வேலைத் தடங்கல்கள் மற்றும் கொவிட்-19இன் விளைவாக வெளிநாட்டு முடக்க நிலைமைகளினால் பாதிக்கப்பட்டிருக்கும் தொடர்பான ஏற்பாட்டு வசதி வழங்குநர்கள். இவ்வியாபாரங்கள்/ துறைகளுக்கு சலுகைகள் தொடர்பில் மொத்தப்புரள்வு வரையறை குறித்துரைக்கப்படவில்லை.

தயாரிப்பு, பணிகள், வேளாண்மை (பதனிடல் உட்பட) கட்டடவாக்கம் போன்ற வியாபாரத் துறைகளில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள், ரூ.1 பில்லியனுக்கு குறைவான (இதற்காக கிடைக்கத்தக்க ஆகப்பிந்திய கணக்குகள் அல்லது மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட வருடாந்த பரிசீலனைகள்) மொத்தப் புரள்வினைக் கொண்ட அதிகாரமளிக்கப்பட்ட உள்நாட்டு மருந்தாக்கல் பொருட்களின் வழங்குநர்களை உள்ளடக்கிய வர்த்தகம், வியாபாரம்.

3.

பெரும்பாலான முறைப்பாடுகள் 6 மாத சட்ட இசைவுத்தாமதம் வழங்கப்படவில்லை என்பதுடன் தொடர்பானவையாகும். ஆறு மாத சட்ட இசைவுதாமதத்தினைப் பெற யார் தகைமையுடையவர்கள், தகைமையுடையவர்களாக இருந்து குறைந்த காலப்பகுதி வழங்கப்பட்டிருப்பின் என்ன நடவடிக்கை எடுக்கமுடியும்?

அடிக்கடி கேட்கப்படும் வினா 1 மற்றும் அடிக்கடி கேட்கப்படும் வினா 2 இலுமுள்ள தனிப்பட்டவர்களும் வியாபாரங்களும் அடிக்கடிகேட்கப்படும் கேள்வி 8இல் உள்ளவாறு சட்ட இசைவுத்தாமதத்திற்கு உரித்துடையனவாகும். வாடிக்கையாளரொருவர் வழங்கப்பட்ட சட்ட இசைவுத்தாமதத்திற்கு உரித்துடையவராக இருந்து தகைமையுடைய காலத்திலும் பார்க்க காலம் குறைவாக இருக்குமிடத்து அவர்/ அவள் நிதியியல் நிறுவனத்துடன் கலந்துரையாடி இலங்கை மத்திய வங்கியின் சுற்றறிக்கையினை எடுத்துக்காட்டி உடன்படிக்கையொன்றிற்கு வரலாம்.

4.

படுகடன் இசைவுத்தாமதம் என்பதன் கருத்து யாது?

படுகடன் இசைவுத்தாமதம் என்பது தொடர்பான சலுகைக் காலப்பகுதியில் செலுத்தப்படவேண்டியிருக்கும் மூலதனம் அத்துடன்/ அல்லது வட்டிக் கொடுப்பனவுகளைப் பிற்போடுவதனைக் குறிக்கிறது. எது எவ்வாறெனினும், படுகடன் இசைவுத்தாமதம் மூலதனத்தினையும் அத்துடன்/ அல்லது வட்டியையும் நிரந்தரமாக தள்ளுபடி செய்துவருவது என அர்த்தம் தராது. வாடிக்கையாளர் சலுகைக்காலமொன்றிற்குள் செலுத்தப்படவேண்டியிருக்கும் மூலதனம் மற்றும் வட்டிக் கொடுப்பனவுகளை திருத்தப்பட்ட மீள்கொடுப்பனவுத் திட்டத்திற்கிணங்க பின்னைய திகதியொன்றில் செலுத்துவதாகும்.

5.

இந்நிவாரணத்தினை யாரிடமிருந்து நான் பெறமுடியும்?

சுற்றறிக்கைகளில் தரப்பட்டுள்ள தொடர்பான அறிவுறுத்தல்களின்படி, இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்துகின்ற அனைத்து உரிமம்பெற்ற வங்கிகளும், உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்நத வங்கிகளும், உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளும் இந்நிவாரணங்களை வழங்கும்.

மேலே குறிப்பிட்ட ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட கடன் வழங்கும் நிறுவனங்கள் தவிர்ந்த கடன் வழங்கும் நிறுவனங்களினால் வழங்கப்பட்ட கடன்கள் நிவாரணத்திற்கு உரித்துடையனவல்ல.

6.

இத்திட்டத்தின்கீழ் எவ்வகையிலான கொடுகடன் வசதிகள் நிவாரணத்திற்கு தகைமையுடையனவாகும்?

இத்திட்டத்தின் கீழ் ஆதரவளிக்கப்படக்கூடிய கொடுகடன் வசதிகளாக தவணைக் கடன்கள், குத்தகை வசதிகள், அடகுபிடித்தல், மேலதிகப் பற்று மற்றும் வர்த்தக நிதி வசதிகள் போன்ற குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கான கடன்கள் காணப்படுகின்றன.

“தவணைக் கடன்கள்”, “குத்தகைகள்” போன்ற பொதுவான கடன் வசதிகளுக்கு புறம்பாக, வேறுபட்ட நிதிக் கம்பனிகளினால் வேறுபட்ட கடன் வகைகள் அல்லது வேறுபட்ட பெயர்கள் பயன்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டிருக்கின்றதுடன், எங்களினாலும் இலங்கை மத்திய வங்கி முகாமைத்துவத்தினாலும் பல வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகள் பெறப்பட்டிருக்கின்றன. அதாவது உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள்/ சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் அத்தகைய கடன்கள் குறிப்பிடப்பட்ட அந்நிறுவனங்களில் உள்ளடக்கப்படவில்லை என குறிப்பிட்டு அத்தகைய கடன் வசதிகளுக்கு கடன் இசைவுத்தாமதத்தினை வழங்க மறுத்திருக்கின்றன.

மத்திய வங்கியினால் விடுக்கப்பட்ட சுற்றறிக்கைகளில் அத்தகைய வேறுபட்ட பெயர்கள் பற்றி குறிப்பிடப்படாதபோதும் 2020ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க சுற்றறிக்கையில் அடையாளம் காணப்பட்ட துறைகளுக்காக அத்தகைய வசதிகள் பெறப்பட்டிருப்பின் அத்துடன் தனிப்பட்டவர்களின் வருமானம்/ வியாபாரம் கொவிட்-19 இனால் உண்மையில் பாதிக்கப்பட்டு, அத்தகைய ஆள்/ வியாபாரம் அந்நோக்கத்திற்காக வசதிகளைப் பெற்றிருக்கின்றன என்பதற்கு சான்றாக போதுமான ஆவணங்களை வைத்திருப்பின் அவ்வாடிக்கையாளர்கள் கடன் இசைவுத்தாமதத்திற்கு தகைமையுடையவர்களாக இருப்பர். அதாவது வாடிக்கையாளர் சுற்றுலாவுடன் தொடர்பான நடவடிக்கைக்கு வசதிகளை பெற்றிருக்கலாம். ஆனால் கடன்களின் பெயர் சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருக்காது. வாடிக்கையாளர் வசதிகள் சுற்றுலாவுடன் தொடர்பானவற்றிற்காக பெறப்பட்டது என்பதனை நிரூபிக்கக்கூடியதாக இருப்பின் தற்போதைய சூழ்நிலையின் காரணமாக அவரின் வருமானம் பாதிக்கப்பட்டிருக்குமிடத்து அவர் சட்ட இசைவுத்தாமதத்திற்கு தகைமையுடையவராவர்.

7.

இந்நிவாரணம் நடைமுறைக்குவரும் திகதி யாது?

அடிக்கடி கேட்கப்படும் வினா 8இல் குறிப்பிடப்பட்டவாறான கடன் தவணைகள் அத்துடன்/ அல்லது குத்தகை வாடகைகள் 2020.03.25 அன்றோ அல்லது அதன் பின்போ வருகின்றவிடத்து காலப்பகுதியில்.

8.

சட்ட இசைவுத்தாமதக் காலப்பகுதி என்றால் என்ன?

உங்களின் சட்ட இசைவுத்தாமதத்திற்கான கோரிக்கை உரிமம்பெற்ற நிதிக் கம்பனியினால்/ சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்குமிடத்து, நிதியியல் நிறுவனங்கள் கீழே குறிப்பிடப்பட்டவாறு படுகடன் சட்ட இசைவுத்தாமதத்தினை வழங்குதல் வேண்டும்.

அ. அனைத்து முச்சில்லுவண்டிகள், பள்ளிக்கூட வான், சரக்கு வண்டிகள், பொருட்களைக் கொண்டுசெல்லும் சிறிய ஊர்திகள் மற்றும் பேருந்துக்கள் மற்றும் சுயவேலையாட்கள்/ சொந்தக்காரர்களினால் பயன்படுத்தப்படும் உந்து ஈருருளிகள் மற்றும் வாடகை ஊர்திகள் என்பனவற்றின் குத்தகை வாடகைகளின் மீது ஆறு மாத படுகடன் இசைவுத்தாமதம்.

ஆ. தனியார் துறையிலுள்ள அனைத்து நிறைவேற்றுத்தரமல்லா ஊழியர்களுக்குமான தனியாள் கடன்கள் மீது 2020.05.30 வரை படுகடன் இசைவுத்தாமதம்.

இ. வழங்கப்பட்ட கடன் ரூ.1 மில்லியனுக்கும் குறைவாக இருக்குமிடத்து அனைத்து தனிப்பட்ட கடன்களுக்கும் குத்தகைகளுக்கும் 2020.05.30 வரை மூன்று மாத சட்ட இசைவுத்தாமதம் வழங்கப்பட்டது.

ஈ. சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளிலுள்ள பாதிக்கப்பட்ட தொழில்முயற்சிகள் சுற்றுலாத்துறை, பெருந்தோட்டம், தகவல்தொழில்நுட்பம் மற்றும் தொடர்பான ஏற்பாட்டு வசதிகளை வழங்குவோருக்கு ஆறு மாத படுகடன் சட்ட இசைவுத்தாமதம்.

உ. 2020ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க சுற்றறிக்கையின் 2ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்ட மற்றைய அனைத்து தகைமையுடைய வியாபாரங்கள்/ துறைகளுக்கு ஆறு மாத சட்ட இசைவுத்தாமதம்.

9.

சட்ட இசைவுத்தாமத காலப்பகுதிக்கு ஏதேனும் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதா?

சுற்றுலா தொடர்பான ஊர்திகளுக்கு வழங்கப்பட்ட குத்தகை வசதிகளின் வெளிநிற்கும் மூலதனம் தொடர்பில், 2020 மாச்சு 27ஆம் திகதியிடப்பட்ட 2020ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க சுற்றறிக்கையின் 2ஆம் மற்றும் 3ஆம் பந்திகளின் நியதிகளில் வழங்கப்பட்ட தற்போதுள்ள ஆறு மாத சட்ட இசைவுத்தாமதத்தினை நிதியியல் நிறுவனங்கள் 12 மாதங்களுக்கு (செத்தெம்பர் இறுதியிலிருந்து மேலும் 6 மாதங்கள்) நீடிக்கும்.

எனினும், கடன்பாட்டாளர்கள் சட்ட இசைவுத்தாமத காலப்பகுதியில் வட்டியினை செலுத்துவது அவசியமாகும். நிதியியல் நிறுவனங்கள் சட்ட இசைவுத்தாமத காலத்தில் தகைமையுடைய கடன்பாட்டாளர்களிடமிருந்து கடன்பாட்டாளர்களுக்கு வசதியீனங்கள் ஏற்படாதவிதத்தில் வட்டியை அறிவிட்டுக்கொள்ளலாம்.

நிதியியல் நிறுவனங்கள் சுற்றுலாவுடன் தொடர்பான ஊர்திகளுக்கு வழங்கப்பட்ட குத்தகை வசதிகள் தொடர்பான ஒன்று சேர்ந்த தண்ட வட்டியை தள்ளுபடி செய்தல் வேண்டும்.

10.

இந்நிவாரணத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு நான் கோரிக்கையொன்றினை சமர்ப்பித்தல் வேண்டுமா? அவ்வாறாயின் எப்படி?

ஆம், வாடிக்கையாளர் 2020.05.15 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ கணனி வழி அதேநேர முறைமையூடாக அல்லது வசதியான வேறேதேனும் தொடர்பூட்டல் ஏற்பாடுகளின் மூலம் கோரிக்கையினை சமர்ப்பித்தல் வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

11.

எவரேனும் சட்ட இசைவுத்தாமதத்திற்கான கோரிக்கையினை மே 15 இற்குப் பின்னர் சமர்ப்பிப்பின் என்ன நடக்கும்?

வாடிக்கையாளர்கள் கோரிக்கைகளினை 2020.05.15 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ அதேநேர கணனி ஊடாக அல்லது அஞ்சல்/ குறுஞ்செய்தி/ வட்ஸ்அப் போன்ற ஏற்பாடுகளின் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திகதிக்குப் பின்னர் பெறப்படும் எந்தவொரு சட்ட இசைவுத்தாமதத்திற்கான கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எனினும், கம்பனி அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு சட்ட இசைவுத்தாமதத்தினை வழங்க விரும்புமாயின் அத்தகைய வசதிப்படுத்தல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு ஆட்சேபனை எதுவுமில்லை.

12.

கோரிக்கை தொடர்பில் சலுகைகள் எனக்கு வழங்கப்பட்டுள்ளனவா என்பது பற்றி எவ்வாறு நான் அறிந்துகொள்வது?

கோரிக்கை பெறப்பட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குள் வாடிக்கையாளரின் கோரிக்கையினை முழுமையாக செய்முறைப்படுத்துமாறு நிதியியல் நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. அத்தகைய நிறுவனங்கள் 45 நாட்களுக்குள் கோரிக்கை தொடர்பான பெறுபேறுகளை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

13.

இத்திட்டத்தின் நடைமுறைத் திகதிக்கு முன்னதாக செலுத்தப்படவேண்டிய (நிலுவையிலுள்ள) கொடுகடன் வசதிகள் பற்றி நிலைப்பாடு யாது?

2020.03.25 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ செலுத்தப்பட வேண்டிய கடன் தவணைகள்/ குத்தகை வாடகைகளுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும், கொடுகடன் வசதிகள் நிலுவையில்/ வரவேண்டிய நிலைமையுடன் செயற்படும் வகைக்குள் காணப்படுமாயின், வாடிக்கையாளர் நிலுவைகளை ஏற்புடைத்தான சட்ட இசைவுத்தாமத காலப்பகுதியொன்றிற்குள் செலுத்துவதற்கு அந்நிதியியல் நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கமுடியும்.

உதாரணமாக, 2020 பெப்புருவரி மற்றும் மாச்சு மாதங்களுக்கான கடன் தவணைகள் செயற்படும் கடன்களுக்கான நிலுவையில் காணப்படுமாயின் அது 2020 ஏப்பிறல் மாதம் தொடக்கம் 6 மாத காலப்பகுதியினை பெற்றுக்கொள்ள தகுதியுடையதாகும். வாடிக்கையாளர் அத்தகைய சட்ட இசைவுத்தாமத காலப்பகுதியில் 2020 இலிருந்து தொடங்கும் விதத்தில் பின் திகதியிடுமாறு நிதியியல் நிறுவனங்களை கோரமுடியும். இவ்விடயத்தில் ஆறு மாதங்கள் 2020 பெப்புருவரியிலிருந்து கணிப்பிடப்படுமேயன்றி 2020 ஏப்பிறலிலிருந்தல்ல.

14.

சட்ட இசைவுத்தாமத காலப்பகுதிக்கு ஏற்புடைத்தான மூலதனம் மற்றும் வட்டித் தவணைப் பணத்தினை உரிமம்பெற்ற நிதிக் கம்பனி/ சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களிடமிருந்து அறிவிடுமா? அவ்வாறாயின் எப்படி?

ஆம், சுற்றறிக்கைகளின்படி, தொடர்பான சட்ட இசைவுத்தாமதமானது மூலதனம் மற்றும் வட்டிக் கொடுப்பனவுகளை பிற்போடுவதற்கான இயலாற்றலை மாத்திரமே வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. சட்ட இசைவுத்தாமதம் மூலதனத்தினையோ அத்துடன் அல்லது வட்டித் தவணைப் பணத்தினையோ தள்ளுபடி செய்துவிடுமாறு உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளை/ சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளை கேட்டுக்கொள்ளாது. பிற்போடப்பட்ட மூலதனம் அத்துடன் அல்லது வட்டித் தவணைப் பணத்தின் மீது உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மேலதிக வட்டி தொகையை விதிக்காது.

15.

சட்ட இசைவுத்தாமத காலப்பகுதிக்காக மூலதனம் மற்றும் வட்டிக்கூறுகள் எவ்வாறு கணிக்கப்படும்?

மூலதனத்தின் மீள்கொடுப்பனவு பின்வருமாறு இருக்கும்

உதாரணமாக, சட்ட இசைவுத்தாமதம் பின்வருமாறு கணிக்கப்படும்.

உதாரணம்;

கடன் வழங்கப்பட்;ட திகதி 01.04.2019
கடன் தொகை Rs. 2,000,000
கடன் காலம் (ஆரம்ப காலம்) 24 months
வட்டி வீதம் 16%
மாதாந்த தவணைப் பெறுமதி (பெறப்பட்டவை) Rs.97,926
2020 மாச்சு இறுதியில் எஞ்சியுள்ள மாதத் தவணைகளின் எண்ணிக்கை 12

வாடிக்கையாளரொருவர் 2020 ஏப்பிறலிருந்து 6 மாத படுகடன் இசைவுத்தாமதத்திற்கு தகைமையுடையவராக இருக்குமிடத்து, அவ்வாடிக்கையாளர் 2020 ஏப்பிறலிருந்து 2020 செத்தெம்பர் வரை உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள்/ சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்காக தவணைப் பணத்தினைச் செலுத்துமாறு தற்பொழுது கேட்டுக்கொள்ளப்படமாட்டார். எனினும், இவ்வாடிக்கையாளர் 2020 ஒத்தோபரிலிருந்து ஆரம்பத்தில் இணங்கிக்கொள்ளப்பட்ட திகதியான 2021 மாச்சு வரையும் 2021 செத்தெம்பர் வரையான மேலும் 06 மாத காலப்பகுதியில் மாதாந்தத் தவணையாக ரூ.97,926இனை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுவார். அடிப்படையில், ஆரம்பத்திலுள்ள மீள்கொடுப்பனவு அட்டவணை சமமான காலப்பகுதியொன்றினால் சட்ட இசைவுத்தாமதக் காலப்பகுதி வரையில் அதேதவணைப் பெறுமதியினை வாடிக்கையாளரினால் செலுத்தவேண்டியிருக்கும்.

 

சட்ட இசைவுத்தாமத காலப்பகுதியில் வட்டி ஒன்று சேர்த்தல் பின்வருமாறு இருக்கும்.

வட்டியானது சட்ட இசைவுத்தாமத காலப்பகுதியில் சலுகை வீதத்தில் தொடர்ந்தும் ஒன்றுசேர்த்தல் வேண்டும் என்பதுடன் அவ்வாறு ஒன்று சேரும் வட்டி கடன்பாட்டாளரிடமிருந்து அறவிடப்பட வேண்டிய புதிய வட்டியற்ற தவணைக் கடனுக்கு மாற்றல் செய்யப்படல்வேண்டும்.

உதாரணமாக, மாதாந்த வட்டி விதிப்பினை கணிப்பதற்காக: 2020 ஏப்பிறல் மாதமொன்றிற்கான வட்டி விதிப்பு = கடன் இசைவுத்தாமத காலப்பகுதியின் தொடக்கத்தில் (2020 ஏப்பிறல் தொடக்கம்)* வெளிநின்ற கடன்தொகை சலுகைவீதம்/ 12.

உரிமம்பெற்ற நிதிக் கம்பனியும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனியும் தகைமையுடைய கடன்பாட்டாளரின் சம்மதத்துடன் கீழே காட்டப்பட்டுள்ள இரண்டு தேர்வுகளைப் பயன்படுத்தி கடன்பாட்டளரிடமிருந்து வட்டியற்ற கடனை அறவிட்டுக்கொள்ளமுடியும்.

தேர்வு 1 மற்றும் தேர்வு 2 இற்கு விதிக்கப்படக்கூடிய சலுகைவீதம் ஆண்டொன்றிற்கு 11.5 சதவீதமாக இருக்கும். மேலும் செலுத்தப்படவேண்டிய மொத்த வட்டிச் செலவு உட்பட குறிப்பிட்ட தேர்வுகளின் வேறுபட்ட சிக்கலான தன்மைகளை சரியான முறையில் விளக்கிய பின்னரே கடன்பாட்டாளரின் சம்மதம் பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.

தேர்வு 1 – உரிமம்பெற்ற நிதிக் கம்பனி/ சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனியின் வட்டியற்ற தவணைக் கடன்களை சட்ட இசைவுத்தாமதக் காலப்பகுதி முடிவடைந்ததும் சமமான மாதாந்தத் தவணைகளில் அறவிட்டுக்கொள்ளலாம் என்பதுடன் மீள்கொடுப்பனவுக் காலம் இரண்டு ஆண்டுகளாக அல்லது கொடுகடன் வசதியின் எஞ்சிய காலப்பகுதியாக இதில் எது குறைவானதோ அதுவாக இருத்தல் வேண்டும்.

தேர்வு 2 - உரிமம்பெற்ற நிதிக் கம்பனி/ சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனி வட்டியற்ற தவணைக் கடன்களை ஒப்பந்தக் காலம் முடிவடைந்ததன் பின்னர் (சட்ட இசைவுத்தாமதகாலம் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் நீடிக்கப்பட்ட ஒப்பந்தக் காலம்) ஆரம்ப ஒப்பந்தத்தின் மாதாந்தத் தவணைகளை விஞ்சாததொரு தவணைகளில் அறவிடல் வேண்டும்.

16.

கொடுகடன் அட்டைகளின் வசதிக்கான பிந்திய கொடுப்பனவுகளுக்காக எனக்கு ஏதாவது தண்டக் கட்டணம் அல்லது பிந்திய கொடுப்பனவு விதிக்கப்படுமா? சலுகைகளுக்கு நான் தகைமையுடையவனா அல்லது இல்லையா?

அனைத்து நிதியியல் நிறுவனங்களும் 2020.09.30 வரையான காலப்பகுதிக்கு கொடுகடன் அட்டைகள் மற்றும் ஏனைய கொடுகடன் வசதிகளுக்காக ஏதேனும் தண்ட வீதங்களையோ அல்லது பிந்திய கொடுப்பனவுகளையோ விதிக்கவேண்டாமென அறிவுறுத்தப்படுகின்றன.

17.

சட்ட இசைவுத்தாமதத்திற்காக தனியாள் பேருந்துகளின் மீது விசேட வட்டி வீதம் ஏதும் விதிக்கப்படுகின்றதா?

தனியார் பயணிகள் பேருந்துக்களுக்கு வழங்கப்பட்ட குத்தகை வசதிகளுக்காக சட்ட இசைவுத்தாமத காலப்பகுதியில் அனைத்து நிதிக் கம்பனிகள்/ சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் ஆண்டிற்கு 4 சதவீதம் கொண்ட வட்டி வீதமொன்றினை விதிக்கலாம்.

18.

கம்பனிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்ததைப் போன்று சட்ட இசைவுத்தாமதத்தினை வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கி ஏதேனும் மதிப்பீடுகளை நடத்துகின்றதா?

இல்லை, சட்ட இசைவுத்தாமதத்தினை வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கி எந்தவொரு மதிப்பீட்டினையும் நடத்தவில்லை.