தேசமான்ய ஏ. எஸ். ஜயவர்த்தன (1995 – 2004)

Deshamanya A S Jayawardena

தேசமான்ய ஏ. எஸ். ஜயவர்த்தன இலங்கை மத்திய வங்கியின் பத்தாவது ஆளுநராக 1995 நவெம்பரில் பதவியேற்றுக் கொண்டதுடன் 2004 யூனில் பதவியிலிருந்தும் விலகிக் கொண்டார்.

தேசமான்ய ஏ. எஸ். ஜயவர்த்தன மாத்தளை புனித தோமஸ் கல்லூரியிலும் கொழும்பு றோயல் கல்லூரியிலும் கல்வி கற்றார். பட்டதாரி மாணவர் கல்வியை 1957இல் இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனையில் கற்று கலைமானி சிறப்புப் பட்டத்தினைப் பொருளியலில் பெற்றுக் கொண்டார். 1965இல் லண்டன் ஸ்கூல் ஒவ் எக்கனமிக்ஸ்ஸிலிருந்து அரச துறைப் பொருளாதாரத்தினை சிறப்பாகக் கொண்ட விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார். 1975இல் அவர் பொது நிதியைச் சிறப்பாகக்கொண்ட பொது நிருவாகத்தில் ஹாவார்ட் பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலை முதுமானிப் பட்டமொன்றினைப் பெற்றுக் கொண்ட வேளையில் திரு. ஜயவர்த்தனவிற்கு எட்வேர்ட் மாசன் அங்கத்துவ விருதும் கிடைத்தது.

1958இல் மத்திய வங்கியில் இணைந்து கொண்ட தேசமான்ய ஜயவர்த்தன பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களப் பணிப்பாளராக (1977 – 1980) நியமிக்கப்படுவதற்கு முன்னர் செயலக, நிறுவன மற்றும் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களங்களில் பணியாற்றியிருக்கின்றார். இவர் 1980 – 1981 காலப்பகுதியில் ஆளுநரின் உதவியாளராகவும் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டதுடன் 1981 – 1986 காலப்பகுதியில் ப.நா. நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 1986 – 1989 காலப்பகுதியில் துணை ஆளுநராகவும் 1993 – 1994 காலப்பகுதியில் மூத்த துணை ஆளுநராகவும் பணியாற்றினார்.

தேசமான்ய ஜயவர்த்தன மத்திய வங்கியிலிருந்து விடுவிக்கப்பட்டு பல்வேறு அரச நிறுவனங்களிலும் பணியாற்றியிருக்கின்றார். 1976 – 1977 காலப்பகுதியில் இவர் இலங்கை வங்கியின் பொது முகாமையாளராகவும் (முதன்மை நிறைவேற்று) 1989இல் மீண்டும் இலங்கை வங்கியினதும் மேர்ச்சன்ட் வங்கியினதும் தலைவராகவும் பணியாற்றினார். 1989 – 1993 காலப்பகுதியில் அவர் கைத்தொழில், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராகவும் 1994 – 1995 காலப்பகுதியில் திறைசேரி மற்றும் நிதி, திட்டமிடல், இன அலுவல்கள் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 1965 – 1976 காலப்பகுதியில் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பொருளியலில் வருகைதரு விரிவுரையாளராகவும் பணிபுரிந்திருக்கின்றார்.

2001இல் தேசமான்ய ஜயவர்த்தன உலக வங்கியின் அபிவிருத்தி சந்தைப்படுத்தல் போட்டியில் விருது பெற்ற வெற்றியாளரொருவராக இருந்தார். அவருக்கு ''தேசமான்ய" விருது இலங்கை அரசாங்கத்தினால் 2005இல் வழங்கப்பட்டது.