பொருளாதார ஆராய்ச்சி

பணவீக்கம் மற்றும் நாணய

அச்சிடல்/செலாவணி வீத முகாமைத்துவம்

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி மேற்கொள்கின்ற நடவடிக்கை என்ன?

பணவீக்க அழுத்தங்களின் அதிகரிப்பை கட்டுப்படுத்தி செலாவணி வீதத்தை முகாமைப்படுத்துவதில் ஏற்படும் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, இலங்கை மத்திய வங்கியானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்பு பொறுப்புக்களில் ஏற்புடைய அதன் கொள்கை வட்டி வீதங்களையும் நியதி ஒதுக்கு விகிதத்தையும் உயர்த்தியதன் மூலமாக 2021 ஓகத்தில் அதன் நாணயக் கொள்கை நிலையினை இறுக்கமடையச் செய்தது.
2021 ஓகத்திலிருந்து 2022 ஏப்பிறல் வரையான காலப்பகுதியில், இலங்கை மத்திய வங்கியானது அதன் கொள்கை வட்டி வீதங்களை அதாவது துணைநில் வைப்பு வீதத்தையும் துணைநில் கடன்வழங்கல் வீதத்தையும் முறையே, 13.50 வீதத்திற்கும் 14.50 வீதத்திற்கும் மொத்தமாக 900 அடிப்படை புள்ளிகளினால் அதிகரித்தது.
2021 செத்தெம்பர் தொடக்கம் நியதி ஒதுக்கு விகிதமானது 2 சதவீதப் புள்ளிகளிலிருந்து 4.0 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டு வங்கித்தொழில் முறைமையிலிருந்து ரூபாய் திரவத்தன்மையின் பெரும் பகுதியை ஈர்த்துக்கொண்டது.
தெரிவுசெய்யப்பட்ட கடன்வழங்கல் சாதனங்கள் அதாவது கடனட்டைகள், முன்கூட்டி ஏற்பாடுசெய்யப்பட்ட தற்காலிக மேலதிக பற்றுகள் அத்துடன் அடகு வசதிகள் மீதான உயர்ந்தபட்ச வட்டி வீதங்களை தளர்த்தல் மற்றும் அதனைத்தொடர்ந்து நீக்குதல் உள்ளடங்கலாக ஏனைய பல்வேறு ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இவ்வழிமுறைகளினால் ஆதரவளிக்கப்பட்டு, சந்தை வட்டி வீதங்கள் குறிப்பிடத்தக்களவில் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதுடன் இதனூடாக மிதமிஞ்சிய நுகர்வினை ஊக்கமிழக்கச்செய்து சேமிப்புக்களுக்கு ஆதரவளிக்கும். இது இறுதியாக, பொருளாதாரத்தில் கூட்டுக் கேள்வியை கட்டுப்படுத்துவதற்கு உதவும்.
மேலும், பணவீக்க வீதத்தைக் குறைக்கும் மூலோபாயம் பற்றி இலங்கை மத்திய வங்கியானது பொதுமக்களுடன் ஈடுபடுகின்றது. இது வரவிருக்கும் காலத்தில் பணவீக்கத்தைக் குறைப்பதற்கு உதவும். இத்தொடர்பூட்டலும் இலங்கை மத்திய வங்கியின் அர்ப்பணிப்பும் பணவீக்கத்தை மீண்டும் இலக்கிடப்பட்ட மட்டத்திற்கு துரிதமாக கொண்டுவருவதற்கான கடுமையான பணவீக்க எதிர்பார்க்கைகளை இல்லாதொழிப்பதற்கு உதவும்.
எனவே, பொருளாதாரத்தில் ஏற்பட்ட கேள்வித் தூண்டல் பணவீக்க அழுத்தங்கள் ஒன்றுதிரள்தல் எதிர்வரும் காலத்தில் சிதர்வடையும் மற்றும் பணவீக்கமும் பணவீக்க எதிர்பார்க்கைகளும் விரும்பத்தக்க மட்டங்களில் உறுதிநிலைபெறும் என்று எதிர்பாக்கப்படுகின்றது.
•    வரவிருக்கும் காலப்பகுதியில், உலகளாவிய விலை அழுத்தங்களும் தளர்வடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி நாணயம் அச்சிடுவதை குறைத்துள்ளதா?

நாணய அச்சிடல் என்பது இலங்கை மத்திய வங்கியினால் பொருளாதாரத்திற்கு புதிதாக பணம் நிரம்பல் செய்கின்ற  செயன்முறையாகும். நாணய அச்சிடலானது பின்வருமாறு பல நோக்குகளில் விபரிக்கப்படலாம்.

- சுற்றோட்டத்திலுள்ள நாணயத்தில் அதிகரிப்பு
­­- பண நிரம்பலில் அதிகரிப்பு அல்லது நாணயக் கூட்டுக்களில் விரிவடைதல்
­- முதலாந்தர சந்தையிலிருந்து இலங்கை மத்திய வங்கி அரச பிணையங்களை கொள்வனவு செய்தல் (அதாவது நாணய நிதியிடல்)
­- உள்நாட்டு பணச் சந்தையில் உள்ள மிதமிஞ்சிய திரவத்தன்மையில் அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி முதலாந்தர சந்தையிலிருந்து அரச பிணையங்களை கொள்வனவு செய்கிறது. இதன்பயனாக, அரச பிணையங்களின் இலங்கை மத்திய வங்கியின் உரித்துக்கள் அதிகரிக்கின்றது என்பது நாணய அச்சிடல் பற்றி பொதுவாக குறிப்பிடப்படும் வரைவிலக்கணமாகும்.
கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று மற்றும் தொடர்புடைய பொருளாதார நடவடிக்கைக்கான இடையூறுகள் மற்றும் தற்போதைய பாதகமான பேரண்டப்பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் போதியளவான அரசிறை இல்லாத நிலையில், அத்தியாவசிய அரசாங்க செலவினங்களை (சம்பளங்கள் மற்றும் கூலிகள்) நிறைவேற்றுவதற்கு நாணய அச்சிடல் அவசியமானதாக இருந்து வருகின்றது.
எனினும், நாணய அச்சிடலின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு கிரமமான அடிப்படையில் இலங்கை மத்திய வங்கியினால் பல்வேறு வழிமுறைகள் எடுக்கப்பட்டன. முதலாவதாக, அரச பிணையங்கள் மீதான விளைவுகள் சந்தை நிலைமைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அதிகரிப்பிற்கு அனுமதிக்கப்பட்டன, இது சந்தை மூலங்களினூடாக அரசாங்கத்திற்கு தேவையான நிதிகளின் பாரியளவான பங்கினை திரட்டுவதற்கு உதவியது. இரண்டாவதாக, மிகவும் அத்தியாவசியமான அரசாங்க செலவினத்தை நிறைவேற்றுவதற்கு மாத்திரம் வேண்டப்படும் நிதியளித்தலை இலங்கை மத்திய வங்கி வழங்கியது. இதற்கமைவாக, அரச பிணையங்களின் இலங்கை மத்திய வங்கியின் உரித்துக்களின்  அதிகரிப்பு அண்மையில் பாரியளவின் தளர்வடைந்தன. மேலும், எதிர்பார்க்கப்பட்ட இறைத் திரட்சி முயற்சிகளினால் ஆதரவளிக்கப்பட்டு, அரசிறையில் எதிர்பார்க்கப்பட்ட மேம்பாட்டுடன், வரவிருக்கும் காலத்தில் அரச பிணையங்களின் இலங்கை மத்திய வங்கியின் உரித்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் நாணய அச்சிடலின் அளவு குறைவடையும்.

வட்டி வீதங்கள் மேலும் உயர்வடையுமா அல்லது வட்டி வீதங்கள் குறைவடைவதற்கான சாத்தியம் காணப்படுகின்றதா?

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை வழிமுறைகளை இறுக்கமாக்குவதற்கு பதிலிறுத்தும் வகையில், 2021 நடுப்பகுதியில்/2021இறுதியில் அவதானிக்கப்பட்ட மட்டங்களிலிருந்து 2022இல் இதுவரை சந்தை வட்டி வீதங்கள் அதிகரித்துள்ளன.
இவ்வழிமுறைகள் குறிப்பாக, கொடுகடன் செலவையும் (வட்டி வீதங்களை) கிடைக்கபெறும் தன்மையையும் இறுக்கமடையச்செய்வதனூடாக கேள்விப் பக்கத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
பின்பற்றப்பட்ட வழிமுறைகள் பொருளாதாரத்தில் கேள்வியினால் தூண்டப்படும் பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுவதற்கு போதாமல் இருப்பின், இலங்கை மத்திய வங்கி வட்டி வீதங்களை மேலும் உயர்த்துவதற்கான அவசியத்தை அல்லது மிகையான கேள்வி அழுத்தங்களை கட்டுப்படுத்தும் வேறு ஏதேனும் வழிமுறைகளை கருத்திற்கொள்ளும். எனினும், பணவீக்க அழுத்தங்களை நிலைநிறுத்துவதற்கான சமிஞ்சைகள் (இறுக்கமான நாணயக் கொள்கை வழிமுறைகளைத் தொடர்ந்து) வெளிப்படத் தொடங்கியிருக்குமாயின், இலங்கை மத்திய வங்கியானது எதிர்காலத்தில் கொள்கை வட்டி வீதங்களை குறைப்பதன் மூலமாக நாணயக் கொள்கையை படிப்படியாக தளர்த்தக்கூடும். இதன் விளைவாக, சந்தை வட்டி வீதங்கள் வீழ்ச்சியடையக்கூடும்.
நாணயக் கொள்கை தீர்மானங்கள், முக்கியமாக வட்டி வீதங்கள் மீதான தீர்மானமானது பொதுவாக தரவுகளினால் தூண்டப்படுபவையும் முன்கூட்டிய நடவடிக்கையுமாகும். நாணயச் சபையானது ஏனையவற்றுக்கு மத்தியில் உலகளாவிய மற்றும் உள்நாட்டு பேரண்டப்பொருளாதார துறைகள், முக்கிய பேரண்டப்பொருளாதார மாறிகளின் எறிவுகள் மற்றும்  தோற்றும்பெற்று வரும் இடர்நேர்வுகள் மீதான அபிவிருத்திகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்கிறது. இதனால், எதிர்கால நாணயக் கொள்கை நடவடிக்கையின் போக்கு இக்காரணிகள் மீது பெருமளவில் தங்கியிருக்கும் என்பதுடன் விலை உறுதிப்பாட்டை மீளமைப்பதற்கு நாணயச் சபை பொருத்தமான நாணயக் கொள்கை தீர்மானங்களை எடுக்கும;.

 

பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்தான உதவி

நெருக்கடியை எதிர்கொள்வதற்கு பன்னாட்டு நாணய நிதியம் இலங்கைக்கு எவ்வாறு உதவ முடியும்?

அண்மைக் காலத்தில் பன்னாட்டு ஒதுக்குகளின் குறைந்த மட்டத்தைக் கருத்திற்கொண்டு, கணிசமானளவு உயர்ந்தளவு வெளிநாட்டுப் படுகடன் நிலுவை தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளை தீர்ப்பனவு செய்வது மிகவும் சவால்மிக்கதாகியுள்ளது. வர்த்தக வங்கிகளுக்கான தொடர் கடன்கள் உள்ளடங்கலாக, உயர்ந்தளவான இறக்குமதிக் கொடுப்பனவுகள், வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களில் குறைப்பு ஆகியவற்றுக்கு மத்தியில்  உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் திரவத்தன்மை குறைவடைந்துள்ளது. உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் பாரியளவிலானதொரு பற்றாக்குறையையும் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளில் கணிசமானளவு குறைவொன்றையும் இது தோற்றுவித்தது. இதன்விளைவாக, எரிபொருள், எரிவாயு, நிலக்கரி, மருந்துப் பொருட்கள் அத்துடன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு வெளிநாட்டுச் செலாவணிக்கான கேள்விகளை நிறைவேற்றுவதற்கு நாடு சில வெளிநாட்டுச் செலாவணியைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
இப்பின்னணியில், கிட்டிய எதிர்காலத்தில் கணிசமான வெளிநாட்டு நிதியிடலைப் பெற்றுக்கொள்வதற்கான தேவையொன்று காணப்படுகின்றது. பன்னாட்டு நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டமொன்றினுள் கைச்சாதிடுவது என்பது மேலதிக நிதியளித்தலுக்கான பெறுவழியினை வழங்குவது மாத்திரமன்றி பல்புடை மற்றும் இருபுடை இணைத்தரப்பினர்கள் உள்ளடங்கலாக வாய்ப்புமிக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் உயர்த்தும்.
பேரண்டப்பொருளாதார கொள்கைசார்ந்த பொதியொன்றை நடைமுறைப்படுத்துவதுடன் இது ஒன்றிணைந்து ஒட்டுமொத்த பேரண்டப்பொருளாதாரத்தை நிலைநிறுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. இது படுகடனல்லாத செலாவணி உட்பாய்ச்சல்களை மேலும் ஊக்குவிக்கும்.
மேலும், பன்னாட்டு நாணய நிதியம் ஆதரவளித்த பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டு நிகழ்ச்சித்திட்டமானது நாட்டிற்கான தரமிடலை படிப்படியாக மேம்படுத்துவதற்கு உதவும் என்பதுடன் எதிர்வரும் காலத்தில் வெளிநாட்டு நிதியளித்தலுக்காக பன்னாட்டு சந்தைகளை அணுகுவது சாத்தியமிக்கதாகும்.

பன்னாட்டு நாணய நிதிய மீட்பு நடவடிக்கை எவ்வாறு செயல்படும்?

பன்னாட்டு நாணய நிதிய நிதியளித்தல் ஒருங்கேற்பாட்டின் கீழ் உள்ள குறிக்கோள்கள், கொள்கைகள் மற்றும் நிபந்தனைகள் என்பன நாட்டின் குறிப்பான பொருளாதார சூழ்நிலைகளை சார்ந்து இருக்கின்றன.
கணியம்சார் செயலாற்ற பிரமாணம், குறிகாட்டி இலக்குகள், அமைப்பியல் அளவிடல்கள் போன்றவற்றை நிறைவேற்றுவதில் நிதிகள் பகிர்ந்தளிப்புக்களின் நிபந்தனைகளுக்குட்பட்ட வகையில்  பன்னாட்டு நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு நாணய நிதியமானது அதன் நிகழ்ச்சித்திட்டங்களின் செயலாற்றத்தை கால முறையாக மீளாய்வு செய்கின்றது. நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றியை மேம்படுத்தி இடர்நேர்வுகளை குறைப்பதற்கு, எறிவுகளை நடைமுறைத்தன்மையை மேம்படுத்துவதற்கும்,  படுகடன் உறுதிப்பாட்டு பகுப்பாய்வை முன்னேற்றுவதற்கும், இறைத் திரட்சியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் அத்துடன் அமைப்பியல் நிலைமைகளை தனிப்பட்ட தேவைக்கேற்றவாறு மேம்படுத்துவதற்குமான வழிமுறைகளை பன்னாட்டு நாணய நிதியம் பரிந்துரைக்கிறது.

மேலதிக விபரங்களுக்கு, 2021 இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையின் ‘பன்னாட்டு நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டங்களின் முக்கியத்துவம்’ என்ற சிறப்புக் குறிப்பை பார்வையிடவும்.

https://www.cbsl.gov.lk/ta/வெளியீடுகள்/பொருளாதார-மற்றும்-நிதியியல்-அறிக்கை/ஆண்டறிக்கைகள்/ஆண்டறிக்கை-2021

 

அரசாங்கத்தின் படுகடன் மறுசீரமைப்பு செயன்முறை

அரசப் படுகடன் என்றால் என்ன?

நாட்டின் அரசப் படுகடன் என்பது கடந்தகால கடன்பெறுகைகளிலிருந்து தோன்றுகின்ற அரசாங்கத்தின் மொத்த செலுத்தவேண்டிய நிதியியல் பொறுப்புக்களாகும். அரசாங்க செலவினத்தை நிறைவேற்றுவதற்கு போதியளவான அரசிறை இல்லாத காரணத்தினால் நாடு இறைப் பற்றாக்குறையை அனுபவிக்கின்றபோது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து கடன்பெறுவதன் மூலமாக பற்றாக்குறைக்கு நிதியளிக்கப்பட வேண்டும். இதன் விளைவாக, அரசப் படுகடன் ஒன்றுதிரள்கின்றது. அரசப் படுகடன் பாய்ச்சலன்பதை விட இருப்பாகும். ஆகவே இது, தரப்பட்ட திகதியில் அளவிடப்படுகிறது. அரசப் படுகடனானது நாட்டில் வதிவோருக்கு அல்லது வதிவற்றோருக்கு செலுத்தப்படகூடியதாகவிருக்கலாம். வதிவோருக்கு செலுத்தப்பட வேண்டிய படுகடன் உள்நாட்டுப் படுகடன் என்று கருத்தப்படுகின்ற அதேவேளை வதிவற்றோருக்கு செலுத்தப்படவேண்டிய படுகடன் வெளிநாட்டுப் படுகடன் என்று கருதப்படுகின்றது. படுகடன் உள்நாட்டு நாணயத்தில் அல்லது வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்படும் என்பதுடன் வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்படும் உள்நாட்டு நாணயத்தின் பெறுமதி செலாவணி வீத அசைவுகளுக்கு உணர்திறன் கொண்டதாகும். 2021இறுதியிலுள்ளவாறு, இலங்கையில் செலுத்த வேண்டிய மத்திய அரசப் படுகடன் ரூ.17,589.3 பில்லியனாகக் காணப்பட்டது. இதில் உள்நாட்டுப் படுகடன் 63.1 சதவீதமாக இருந்ததுடன் எஞ்சியது வெளிநாட்டுப் படுகடனாகக் காணப்பட்டது.

படுகடன் மறுசீரமைப்பு என்றால் என்ன?

நாடு அதன் தற்போதுள்ள படுகடன் கடப்பாடுகளை தீர்ப்பனவு செய்வதில் இடர்பாடுகளை சந்திக்கின்ற போது அல்லது அதன் தற்போதுள்ள படுகடனை மீள்நிதியிடுவதற்கு இயலாமல் இருக்கும் போது, வெவ்வேறு படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் நியதிகளைக் கொண்ட புதிய சாதனங்களுக்கு அல்லது படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளை மிகவும் முகாமைத்துவம்செய்வதற்கான முறையான செயன்முறை மூலம் நிதியளிப்பதற்கு கடன்கள் மற்றும் முறிகள் போன்ற நிலுவையில் உள்ள படுகடன் சாதனங்களைப் பரிமாற்றுவதற்கு அரசாங்கம் ஏற்கனவே உள்ள கடன்  வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். இது படுகடன் மறுசீரமைப்பு என்று அழைக்கப்படுகின்றது. படுகடன் மறுசீரமைப்பு செயன்முறை மூலம், அரசாங்கமானது புதிதாக  இணங்கிய படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவு நியதிகளின் கீழ் அதன் கடன்களை தீர்ப்பனவு செய்வதற்கு இயலுமாகவிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. படுகடன் மறுசீரமைப்பு பின்வரும் கூறுகளில் ஒன்று அல்லது இரண்டையும் உள்ளடக்கலாம்: அநேகமாக குறைந்த வட்டி வீதங்களின் கீழ் கடந்தகால கடனின் முதிர்ச்சிகளை நீடிக்கின்றதுடன் ஈடுபடுகின்ற படுகடன் மீள்அட்டவணைப்படுத்தல் மற்றும் முன்னைய கடன் சாதனங்களின் முகப் பெறுமதியைக் குறைப்பதில் ஈடுபடுகின்ற படுகடன் குறைப்பு. இரு கூறுகளும் தற்போதுள்ள பெறுமதி நியதிகளில் கடன்வழங்குநருக்கு இழப்பை ஏற்படுத்துகின்றன.

படுகடனை எவ்வாறு குறைப்பது/மறுசீரமைப்பது?

ஆரம்பத்தில், அரசாங்கத்தின் மொத்த பொறுப்புகள் மற்றும் அரசாங்கம் யாருக்கு கடன்பட்டிருக்கிறது என்பது பற்றிய அனைத்தையுமுள்ளடக்கிய மதிப்பீட்டை மேற்கொள்வது அவசியமாகும். புதிய கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவு நியதிகள் மற்றும் நிபந்தனைகளைக் கொண்ட புதிய படுகடன் சாதனங்களைக் கொண்டு தற்போதைய படுகடன் சாதனங்களைப் பரிமாற்றுவதற்கு அரசாங்கம் ஏற்கனவே உள்ள கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வட்டி வீதங்களைக் குறைத்தல், படுகடன் சாதனங்களின் முதிர்ச்சிக் காலத்தை நீடித்தல், படுகடன் சாதனங்களின் முகப் பெறுமதியை குறைத்தல், அத்துடன் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளுக்காக சலுகை அல்லது நிவாரண காலத்தைப் பெற்றுக்கொள்ளுதல் என்பன தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும். படுகடனின் திருத்தப்பட்ட நியதிகள் எதிர்காலத்தில் படுகடன் கடப்பாடுகளை தீர்ப்பனவு செய்வதில் அரசாங்கத்தின் இயலளவை முன்னேற்றுவதற்கு உதவும். இப்பேச்சுவார்த்தை செயன்முறையின் போது, இறைத் துறை உள்ளடங்கலாக, நாட்டின் பேரண்டப்பொருளாதார செயலாற்றத்தை மேம்படுத்தி மேற்பார்வை செய்வது தொடர்பில் பொருளாதார திட்டமொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும். கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் வெற்றியானது நாட்டின் பொருளாதாரத் தரவு, அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டம் அதேபோன்று பேரண்டப்பொருளாதாரம் மற்றும் இறை மேற்பார்வைக்கு உத்தரவாதமளிக்கக்கூடிய பன்னாட்டு நாணய நிதியம் போன்ற நம்பகரமான நிலைப்படுத்துநரின் ஈடுபாட்டில் சார்ந்திருக்கலாம். கடன்வழங்குநர்களுக்கு கடன் மறுசீரமைப்பு நியதிகள் வழங்கப்படும் போது, மறுசீரமைப்பு சலுகையை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது கடன்வழங்குநர்களின் தற்றுணிபின் பேரில் இடம்பெறுகிறது.  கடன் மறுசீரமைத்தல் பொதுவாக  மொத்த செலுத்த வேண்டிய படுகடனின் சில குறைந்தபட்ச பகுதியை வைத்திருப்போரின் சம்மதத்தினையும் வேண்டுகிறது. எனவே மறுசீரமைப்பு செயன்முறையின் போது, கடன்வழங்குநரின் ஒருங்கிணைப்புச் சிக்கல்கள் மற்றும் சலுகைகளைப் பெறுவதற்கு எண்ணுகின்ற தரப்பினர் இடர்நேர்வுகள் (அதாவது, கடன்வழங்குநர்களில் கணிசமான பகுதியினர் மறுசீரமைப்பதற்கான தமது சம்மதத்தை வழங்குவதை நிறுத்தி, படுகடனின் முழு முகப் பெறுமதியினை கோருவதற்கான அவர்களின் சட்டப்பூர்வ உரிமையை வைத்திருப்பர்) கடுமையான கரிசனைகளாக காணப்படுகின்றன. ஆகவேஇ கடன்படுநர் நாடுகள் எதிர்கொள்ளும் கொடுப்பனவு இன்னல்களுக்கான செயலாற்றக்கூடிய தீர்வைக் மேற்கொள்வதை குறிக்கோளாகக் கொண்டுள்ள பாரிஸ் கிளப் போன்ற கடனாளர் குழுக்களுடனான பேச்சுவார்த்தைகள், கடன் மறுசீரமைத்தல்  செயன்முறையை துரிதப்படுத்துவதிலும் கடன் வழங்குநர் ஒருங்கிணைப்பு மற்றும் சலுகைகளைப் பெறுவதற்கு எண்ணுகின்ற தரப்பினர் இடர்நேர்வுகளைக் குறைப்பதற்கும் உதவும்.

 

பொருளாதார வளர்ச்சி வாய்ப்புக்கள்

நடுத்தர காலம் தொடக்கம் நீண்ட காலத்தில் வேண்டப்படும் சீர்திருத்தங்கள் யாவை?

நடுத்தர காலத்திலிருந்து நீண்ட காலத்திற்கு, அரசாங்கமானது பொருளாதாரத்தின் அனைத்து ஆர்வலர்களினதும் குறிப்பாக தனியார் துறையின் கூட்டிணைப்புடன் முழு தேசத்திற்கும் சமமான நன்மைகளை கொண்டுசேர்க்கின்ற உயர்ந்தளவான மற்றும் நிலைபெறத்தக்க வளர்ச்சி பாதையை உறுதிசெய்கின்ற அதேவேளை பொருளாதாரத்தின் உற்பத்திதிறன் இயலளவை விரிவுபடுத்துவதை இலக்காகக்கொண்டு சீர்திருத்தங்களை உள்ளடக்கி நம்பகரமான பேரண்டப்பொருளாதார திட்டத்தையும் கொள்கை நிகழ்ச்சிநிரலையும் தாபித்தல் வேண்டும். தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடியினால் மீண்டும் வலியுறுத்தப்பட்டவாறு, எவ்வகையான எதிர்பாராத அதிர்வுகளுக்கும் எதிராக நீண்டகால பொருளாதாரத்தின் தாக்கும்பிடிக்கும் தன்மையை வலுப்படுத்தும் நோக்கில், நீடித்துநிற்கின்ற அமைப்பியல் தடைகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும்.
தற்போது பல பேரண்டப்பொருளாதார சமமின்மைகளில் மூல காரணங்கள் இறைசார்ந்தவற்றில் தோற்றம்பெறுகிறது என்று அவதானிக்கப்படுகிறது. ஆகையினால், நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு, அரசாங்கத்தின் அரசிறை திரட்டலை வலுப்படுத்துவதிலும் செலவினங்களை நிலைபெறத்தக்க விதத்தில் மறுசீரமைத்தல், முதலாந்தர நிலுவையில்; மிகைகளை இயலுமைப்படுத்தல் ஆகியவை இறைசார்ந்த நிலைபேற்று தன்மையை உறுதிசெய்வதற்கான முக்கிய சீர்திருத்தங்களாகும்.
அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் வியாபாரத்தை மீண்டும் உபாயமிக்கதாக்குதல் இதன்மூலமாக, அரசாங்கத்தில் அதேபோன்று உள்நாட்டு நிதியியல் துறை மீது இந்நிறுவனங்களின் நிதியியல் சுமையை தடுத்தல். இந்நோக்கில், செலவு பிரதிபலிப்பு விலைக் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துவதைத் தவிர, சிறந்த ஆளுகை மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளின் நிறுவனமயமாக்கல், குறிப்பிடத்தக்க உற்பத்தித்திறன் மேம்பாடுகள் மற்றும் துறையில் பணி வழங்கல் மேம்பாடுகள் ஆகியவை தேவைப்படுகின்றன.
தேவையுடைய துறைகள் மற்றும் குழுக்களை நன்கு இலக்கிட்டு அரசாங்கத்தின் சமூகப் பாதுகாப்பு திட்டங்களைச் சீரமைத்தல்.
அரச நிறுவனங்களின் பொதுமக்களுக்கான பொறுப்புக்கூறலையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிசெய்வதற்கான சட்டக் கட்டமைப்புக்களை வலுப்படுத்தல்.
பொதுப் படுகடன் நிலைபெறுதன்மையை அடைவதிலும் பேணுவதிலும் அனைத்தையுமுள்ளடக்கியதும் ஒத்திசைவான அணுகுமுறையையும் பின்பற்றுதல்.
மாற்றுவழி நிதியிடல் மூலங்களை கண்டறிதல் மற்றும் மத்திய வங்கி உள்ளடங்கலாக வங்கித்தொழில் முறைமை மீது பொதுத் துறை மிதமிஞ்சி தங்கியிருத்தலை குறைப்பதற்கு, வங்கித்தொழில் முறைமையின் நிதியியல் வலிமைக்கான மேம்படுத்தல்களை இயலச்செய்கின்ற  நிதியளித்தல் மற்றும் நீண்டகாலம் தீர்க்கப்படாதுள்ள கட்டமைப்புசார்ந்த மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்தல்.
சென்மதி நிலுவை பிரச்சனைகளை நிலைபெறத்தக்க அடிப்படையில் சமாளிப்பதற்கு படுகடனை தோற்றுவிக்காத வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களின் நியதிகளில், குறிப்பாக வெளிநாட்டு நேரடி முதலீடாக வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களை வலுப்படுத்தல்.
இறக்குமதி பதிலீட்டு கைத்தொழிலாக உள்நாட்டு கைத்தொழில்களை ஊக்குவிக்கின்ற அதேவேளை மரபுசாரா துறைகளுக்கும் மரபுவழியற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி தொகுப்பினை பன்முகப்படுத்தல்.
பொருளாதாரத்தின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிசெய்வதை இலக்காகக் கொண்ட மீள்புதுப்பிக்கத்தக்க மூலங்களில் அதிக கவனத்தை செலுத்தும் அதேவேளை, முழுமையான வலுசக்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.
சூழல்நட்புமிக்க தொழில்களை நோக்கி கொடுகடனை வழிப்படுத்துவதில் ஏதுவாகவிருக்கக்கூடிய இலங்கையில் நிலைபெறத்தக்க நிதி நடைமுறைகளை ஊக்குவித்தல்.
வளமாக்கி, விவசாய இரசாயனங்கள் மற்றும் விதைகள் என்பவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்வதை ஊக்குவித்தல்.
கிடைக்கபெறுகின்ற தேர்ச்சிபெற்ற தொழிற்படையின் மற்றும் அதிநவீன தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு ஆகியவற்றிலிருந்து பயனடைதல்.

 

வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்குகளை அதிகரிப்பதற்கு உதவுவதற்காக ஏற்றுமதிகளின் வருவாய்களை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி எவ்வாறு உதவ முடியும்?

ஏற்றுமதிகளை அதிகரிப்பதில் மத்திய வங்கிக்கு நேரடி பங்கு இல்லை. ஆயினும், பொருளாதாரத்திலும் நிதியியல் முறைமையிலும் உறுதிப்பாட்டினைப் பேணுவதன் மூலமும், கொள்கை மட்டத்தில் ஏற்றுமதி ஊக்குவிப்புக்கு நேரடியாகப் பொறுப்புடையதாகவிருக்கின்ற அரசாங்க முகவராண்மைகளுடன்  தொடர்புகொள்வதன் மூலமும், ஏற்றுமதியாளர்கள் முன்னேற்றமடைவதற்காக தூண்டுதலளிக்கும் ஆக்கப்பூர்வமான சூழலை உருவாக்குவதை மத்திய வங்கி இலக்காகக் கொண்டுள்ளது.
வர்த்தகம் செய்யத்தக்க பொருட்கள் மற்றும் சேவைகளின் பன்னாட்டளவிலான போட்டித்தன்மையை உறுதிசெய்யும் போட்டித்தன்மைமிக்க செலாவணி வீதத்தைப் பேணுவதை மத்திய வங்கி இலக்காகக் கொண்டுள்ளது.
மேலும், மத்திய வங்கி, அதன் கொள்கை ஆலோசனைப் வகிபாகத்தில், சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் முன்னுரிமைகளின் பொதுவாக்கப்பட்ட முறைமைத் திட்டங்களிலிருந்து (GSP திட்டங்கள்) நன்மையடைவதற்கான மூல நாட்டு பிரமாண விதிகளை நிறைவேற்றுவதற்கு மற்றும் ஏற்றுமதிகளின் வளர்ச்சியின்மை மற்றும் விரிவடையும் வர்த்தகப் பற்றாக்குறை உள்நாட்டு பெறுமதி சேர்த்தலை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் என்பன பற்றி அரசாங்கத்திற்கு தொடர்ந்து எடுத்துக்காட்டி தேவையான விதந்துரைப்புக்களை அரசாங்கத்திற்கு வழங்குகிறது.
உறுதியான நிதியியல் முறைமை மற்றும் முற்பண கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் முறைமை ஆகியவற்றைப் பேணுவதற்கு பங்களிப்பதன் மூலம், ஏற்றுமதியாளர்கள் தமது பொருட்களை வசதியாக அனுப்பி இலகுவாக கொடுப்பனவுகளை  மேற்கொள்ளலாம் மற்றும் பெற்றுக்கொள்ளலாம். நாட்டில் சட்டத்திற்கு புறம்பான மற்றும் முறைசாரா கொடுப்பனவு முறைகளை கட்டுப்படுத்துவதற்கான மத்திய வங்கியின் நடவடிக்கைகள் பன்னாட்டு வர்த்தகத்திற்கான மிகவும் உறுதியான, நிலையான மற்றும் நம்பகமான கொடுப்பனவு முறையை உருவாக்க உதவுகின்றன.
மத்திய வங்கி வர்த்தகத் தரவுகளைத் தொகுத்து, அவற்றை ஆர்வலர்;களுக்குப் பரவச்செய்து வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பான தகவலறிந்த தீர்மானங்களை எடுப்பதற்கு அவர்களை இயலச்செய்கிறது.
முன்னணி சேவைகள் மற்றும் வணிகப்பொருள் ஏற்றுமதி துறைகளின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்காக தாபிக்கப்பட்ட சனாதிபதி செயலணியில் மத்திய வங்கி முன்னணி வகிபாகமொன்றையும் வகித்துள்ளது.
மேலும், இருபுடை மற்றும் பல்புடை வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க மத்திய வங்கிக்கு அழைக்கப்பட்டு கொள்கை ஆலோசனை வழங்கப்படுகிறது.