தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2021 திசெம்பருடன் ஒப்பிடுகையில் 0.6 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட அதிகரிப்புடன் 2022 சனவரியில் 58.7 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. மாதகாலப்பகுதியில் தொழில்நிலையில் மீட்சியுடன் ஒன்றிணைந்து புதிய கட்டளைகள், உற்பத்தி என்பவற்றில் பதிவாகிய மேம்பாடுகள் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும், மாதத்திற்கு மாதம் அடிப்படையில் கொள்வனவுகளின் இருப்பு அதிகரித்த அதேவேளை நிரம்பலர்களின் விநியோக நேரம் நீட்சியடைந்தது.
பணிகள் கொ.மு.சுட்டெண்ணானது, 57.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து 2022 இன் தொடக்கத்தில் பணிகள் துறையில் தொடர்ச்சியான விரிவடைதலினை எடுத்துக்காட்டியது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், தொழில்நிலை மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் துணைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள், இவ்வதிகரிப்பிற்கு துணையளித்திருந்தன.









இலங்கைக்கு வெளிநாட்டு பணவனுப்பல் உட்பாய்ச்சல்களை அதிகரிப்பதற்கும் அதேபோன்று வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு பணம் அனுப்புகின்ற போது முறைசார்ந்த பணம் அனுப்பும் வழிகளை உபயோகிப்பதனை ஊக்குவிப்பதற்கும் இலங்கை மத்திய வங்கி தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. அதற்கமைய, "Lanka Remit" என்ற வர்த்தகநாமத்தின் கீழ் தேசிய வெளிநாட்டு பணவனுப்பல் நடமாடும் செயலியினை இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்துள்ளது. இச்செயலி லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.