“2020 - டிஜிட்டல் கொடுக்கல்வாங்கல்கள் ஆண்டு” ஊக்குவிப்புப் பிரசாரத்தினை தொடங்கி வைத்தல்

“2020 - டிஜிட்டல் கொடுக்கல்வாங்கல்கள் ஆண்டு” ஊக்குவிப்புப் பிரசாரம், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் அவர்களினால் 2020 மாச்சு 11ஆம் திகதியன்று சிரேஷ்ட வங்கியாளர்கள், வங்கியல்லா நிதி நிறுவனங்களின் அலுவலர்கள், மத்திய வங்கி அலுவலர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்களின் பங்கேற்புடன் இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் தொடங்கிவைக்கப்பட்டது. ஆரம்ப வைபவத்தைத் தொடர்ந்து இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. டி. குமாரதுங்க, “Cash වදේ” என்ற காசுத் தொல்லை பற்றிய விளம்பரப் பிரசாரத்தினை அறிமுகம் செய்தார். பணத்தைப் பயன்படுத்துவதன் காரணமாக திருட்டுப் போகும் இடர்நேர்வு அல்லது வரிசைகளில் காத்திருந்து நேரத்தை விரையமாக்குதல் போன்றன காரணமாக நுகர்வோரும் வர்த்தகர்களும் எதிர்கொள்கின்ற இன்னல்களை இவ்விளம்பரப் பிரசாரம் எடுத்துக்காட்டுகின்றது. சில்லறை மட்டப் பிரசாரத்தின் உத்தியோகபூர்வமான தொடக்கத்தினை அடையாளப்படுத்துகின்ற இத்தொடக்க நிகழ்வானது செல்லிடத் தொலைபேசிச் செயலிகள், லங்காQR குறியீடு மற்றும் கடன் அத்துடன் பற்று அட்டைகள் போன்ற டிஜிட்டல் ரீதியான கொடுப்பனவு முறைகளைப் பயன்படுத்துவதற்கு வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்ப்பதனை இலக்காகக் கொள்கின்றது. 

இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் திரு. எச். ஏ. கருணாரத்ன, சபையோரை வரவேற்று இலங்கையின் கொடுப்பனவு உட்கட்டமைப்பினை உலகளாவிய போட்டி மட்டத்தில் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி, லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட் மற்றும் வங்கிகள் என்பன கடந்த இரு தசாப்தத்திற்கும் மேல் நடைமுறைப்படுத்தியுள்ள பாரியளவிலான டிஜிட்டல்சார்ந்த முயற்சிகளை எடுத்துக்காட்டினார். சில்லறை மட்டப் பிரசாரத்தின் ஆர்வலர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பல புகழ்பெற்ற பேச்சாளர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். அதிதிப் பேச்சாளரான கார்கிள்ஸ் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அலுவலர், திரு. ஆர். தியாகராஜா “டிஜிட்டல் ரீதியான உருமாற்றத்தின் அடுத்த கட்டத்திற்கு இலங்கையின் வங்கித் தொழில்துறை தயாரா?” என்ற தலைப்பில் அவரது உரையின் மூலம் டிஜிட்டல் சகாப்தத்தில் வங்கித் தொழில்துறையின் வகிபாகத்தினை எடுத்துக்காட்டினார். பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தின் ஆசிய பசுபிக் நிதியியல் நிறுவனங்கள் குழுமத்தின் பிராந்திய தொழில்துறைப் பணிப்பாளர், திருமதி. ரோசி கன்னா இலங்கையில் டிஜிட்டல் ரீதியான நிதியியல் வசதிக்குட்படுத்தலை மேம்படுத்துவதனை நோக்கி அனைத்து ஆர்வலர்களும் பணியாற்றியுள்ளனர் என்பது முக்கியமானது என்பதனை தெளிவாகக்குறிப்பிட்டார். இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் திரு. ஆர். ஏ. ஏ. ஜயலத், இலங்கையில் அடுத்த மூன்று வருடங்களில் டிஜிட்டல்ரீதியான தோற்ற அமைப்பு பற்றி விபரித்தார். வாடிக்கையாளர் நம்பிக்கையினை உறுதிசெய்வதற்கு டிஜிட்டல் கொடுப்பனவுகளின் பாதுகாப்பினையும் வினைத்திறனையும் வலுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டிருந்த நடவடிக்கைகளை அவர் மேலும் எடுத்துக்காட்டினார். இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. டி. குமாரதுங்க, இலங்கையில் குறைவாகக் காசு பயன்படுத்தும் சமூகமொன்றினை ஊக்குவிப்பதற்கான முன்முயற்சிகளை எடுத்துரைத்தார். அண்மையில் தொடங்கப்பட்ட லங்காQR குறியீடு மற்றும் பின்டெக் ஒழுங்குமுறைப்படுத்தல் பரிசோதனைக் கட்டமைப்பு அத்துடன் டிஜிட்டல் பேரேடு அடிப்படையிலமைந்த பகிரப்பட்ட உங்களது வாடிக்கையாளர்களைத் தெரிந்துகொள்ளுங்கள் தீர்வு மற்றும் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற திறந்த வங்கித்தொழில் கருத்திட்டங்கள் போன்ற புதிய கருத்திட்டங்களை இது உள்ளடக்கியிருந்தது. இலங்கை மத்திய வங்கியினாலும் லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட்டினாலும் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய உற்பத்திகளுடன் இணைவதனூடாகவும் இவ்வுற்பத்திகள் பற்றிய விழிப்புணர்வுகளைத் தோற்றுவிப்பதில் முனைப்புடன் ஈடுபடுவதன் மூலமும் ஊக்குவிப்புப் பிரசாரத்தின் வெற்றியினை உறுதிசெய்வதற்கு அனைத்து ஆர்வலர்களினதும் விசேடமாக வங்கிகளினதும் ஏனைய நிதியியல் நிறுவனங்களினதும் பொறுப்பினை அவர் ஏற்றுக்கொண்டார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கு நகர்வதன் மூலமாகக் கிடைக்கும் பொருளாதார நன்மைகளை எடுத்துக்காட்டி நிகழ்வினை முடித்து வைத்தார். மேலும், உலக சுகாதார அமைப்பானது நாணயத் தாள்கள் வைரஸினை கடத்தக்கூடியதென இனங்கண்டுள்ளது என்பதனையும் குறிப்பிட்டு டிஜிட்டல் கொடுப்பனவுகள் விசேடமாக, தொடுகையற்ற கொடுப்பனவுகள் பயன்படுத்தப்பட வேண்டுமென பரிந்துரைத்தார். பொருளாதாரத்தின் அனைத்து மட்டங்களிலும் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் முழுமையான வாய்ப்பினை இலங்கை அறுவடை செய்வதற்கு இப்பிரசாரத்துடன் இணைந்துகொள்ளுமாறு அனைத்து ஆர்வலர்களுக்கும் அவர் அழைப்புவிடுத்தார்.

இலங்கையில் கிடைக்கப்பெறுகின்ற பல எண்ணிக்கையான அதிநவீன டிஜிட்டல் கொடுப்பனவுகள் பற்றி பொதுமக்களிடம் குறைந்தளவான விழிப்புணர்வு காணப்படுவதிலிருந்தே அத்தகைய ஊக்குவிப்பு பிரசாரமொன்றிற்கான தேவை தோற்றம்பெற்றது. இலங்கை மத்திய வங்கியானது வங்கிகள் மற்றும் ஏனைய கொடுப்பனவு சேவை வழங்குநர்களுடன் இணைந்து 2020ஆம் ஆண்டு முழுவதும் ஊக்குவிப்புப் பிரசாரத்தினை பல்வேறு கட்டங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. விழிப்புணர்வுப் பிரச்சாரமானது சமூகத்தின் அனைத்து வகுப்பினரிடமும் செயல்திறன்மிக்கவாறு கொண்டுசேர்க்கப்படுகின்றது என்பதனை உறுதிசெய்யும் விதத்தில் கட்டம் கட்டமான இவ்வணுகுமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரசாரத்தின் முதற்கட்டமானது பொதுமக்கள் மத்தியில் டிஜிட்டல் கொடுப்பனவுகள் பற்றி விழிப்புணர்வினைத் தோற்றுவிப்பதற்கு வங்கிகளினதும் நிதி நிறுவனங்களினதும் ஊழியர்களை இயலச்செய்வதாக அமைந்திருந்தது. இது 2020ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களின் போது இடம்பெற்றது. அடுத்த கட்டம், வாடிக்கையாளர்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள் ஆகிய இரு தரப்பினரையும் உள்ளடக்கி சில்லறை மட்டத்தினை இலக்குவைக்கின்ற ஊக்குவிப்புப் பிரசாரத்துடன் பொதுமக்கள் மத்தியில் வெளிப்படையாக விழிப்பூட்டலினை அதிகரிப்பதாகும். விளம்பரப் பிரசாரத்திற்கு மேலதிகமாக, இலங்கை மத்திய வங்கியானது டிஜிட்டல் கொடுப்பனவு பற்றிய விழிப்புணர்வினை அதிகரிப்பதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், ஊடகங்கள், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் வேறு பொது உறுப்பினர்கள் அதேபோன்று வெளியீடுகள் என்பவற்றுக்கான அமர்வுகள் உள்ளடங்களாக விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத் தொடர் ஒன்றினையும் திட்டமிட்டுள்ளது.

முழுவடிவம்

Published Date: 

Thursday, March 12, 2020