தேசமான்ய என். யு. ஜயவர்த்தன (1953 – 1954)

N U Jayawardena

தேசமான்ய என். யு. ஜயவர்த்தன இரண்டாவது ஆளுநராக 1953 யூலையில் பதவியேற்றதுடன் 1954 ஒத்தோபரில் அவரது பதவியிலிருந்தும் விலகிக் கொண்டார். தேசமான்ய என். யு. ஜயவர்த்தன இலங்கை மத்திய வங்கியின் முதலாவது இலங்கை ஆளுநராவார்.

தேசமான்ய ஜயவர்த்தன மாத்தறை புனித சேவரியஸ் கல்லூரியில் பயின்றதுடன் காலி புனித அலோசியஸ் கல்லூரியில் இரண்டாந்தரக் கல்வியை நிறைவு செய்து கொண்டார். 1931இல் அவருக்கு லண்டன் ஸ்கூல் ஒவ் எக்னமிக்ஸ்ஸில் வெளிவாரி பிஎஸ்சி பட்டம் வழங்கப்பட்டது. அவர் 1938இல் லண்டன் ஸ்கூல் ஒவ் எக்னமிக்ஸ்ஸில் வியாபார நிருவாக கல்வியைத் தொடர்ந்தார்.

அவர் தனது சேவையினை அரசாங்க எழுதுவினைஞர் பதவியில் ஆரம்பித்ததுடன் பொருளாதாரப் பட்டத்துடன் இலங்கை அரச பணியில் இருந்த ஒரே எழுதுவினைஞராகவும் காணப்பட்டார். 1934இல் அவர் பொக்கனவால இலங்கை வங்கித்தொழில் ஆணைக்குழுவின் உதவிச் செயலாளராக இருந்தார். 1941இல் அவர் இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரியின் பகுதிநேர விரிவுரையாளராகப் பணியாற்றினார். தேசமான்ய ஜயவர்த்தன 1942இல் பொதுப்போர் வழங்கல்களின் உதவிப் பணிப்பாளராகப் பதவியேற்றார். 1947இல் பதில் செலாவணிக் கட்டுப்பாட்டாளராக விளங்கிய இவர் 1949இல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளராக நியமிக்கப்பட்டார்.

மத்திய வங்கியை உருவாக்குவதற்கான எக்ஸ்ரர் அறிக்கையினை தயாரிக்கும் பொழுது            திரு. ஜோன் எக்ஸ்ரர் செலாவணிக் கட்டுப்பாட்டாளரான திரு. ஜயவர்த்தனவுடன் ஆலோசனைகளை மேற்கொண்டிருந்தார். 1950இல் இலங்கை மத்திய வங்கி நிறுவப்பட்டதும் திரு. ஜயவர்த்தன துணை ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் அவர் ஆளுநர் ஜோன் எக்ஸ்ரருடன் நெருங்கிப் பணியாற்றும் அரிய சந்தர்ப்பத்தினைப் பெற்றுக்கொண்டார். இவ்வனுபவமானது ஜோன் எக்ஸ்ரரைத் தொடர்ந்து 1953இல் ஆளுநராவதற்குத் தேவையான அறிவாற்றலையும் நிபுணத்துவத்தினையும் அவர் பெற இயலுமைப்படுத்தியது.

மத்திய வங்கியில் பதவி வகித்த பின்னர், நாட்டின் அரசாங்கம் மற்றும் தனியார் துறை ஆகிய இரண்டிலும் முக்கிய பதவிகளை வகித்த அவர் இலங்கை செனட் சபையிலும் பணியாற்றினார். நாட்டின் நிதியியல் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களை வழங்கிய வேளையில் தனியார் துறையிலும் தொழிலாற்றினார். அவர் மேர்க்கன்டைல் குறூப் ஒவ் கம்பனிகளின் நிறுவனராக இருந்தார். நாட்டின் நன்கறிந்த வங்கியான சம்பத் வங்கி (1987) இக்குழுமத்தின் கீழேயே உருவாக்கப்பட்டது.

அவருக்கு 'தேசமான்ய" விருது 1991இல் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது.