சேர் ஆதர் ரணசிங்க (1954 – 1959)

Sir Arthur Ranasinghe

சேர் ஆதர் கொட்வின் ரணசிங்க மூன்றாவது ஆளுநராக 1954 ஒத்தோபரில் பதவியேற்றதுடன் 1959 யூனில் பதவியிலிருந்து விலகிக் கொண்டார்.

சேர் ஆதர் ரணசிங்க கொழும்பு புனித தோமஸ் கல்லூரியிலும் கேம்பிறிட்ஸ் ரினிட்டி ஹோல் இலும் கல்வி கற்றார். இவர் 1917இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் புலமையாளராவார். அவர் வரலாற்றில் கலை இளமானி சிறப்புப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார் (இலண்டன்). 1920இல் இந்திய நிர்வாக சேவை திறந்த பரீட்சையினை மேற்கொண்ட பின்னர் 1921இல் இலங்கை நிர்வாகச் சேவை பணியினை ஆரம்பித்தார்.

புகழ்பூத்த அரச சேவையாளராக விளங்கிய சேர் ரணசிங்க நாட்டின் அரச துறையில் பல முக்கிய பதவிகளை வகித்திருக்கின்றார். 1923 – 1928 காலப்பகுதியில் பருத்தித்துறை, பலப்பிட்டிய மற்றும் யாழ்ப்பாணத்தில் நீதவானாகப் பணியாற்றினார். அதன் பின்னர் அவர் மாவட்ட நீதவானாக (1928 - 1930) அவிசாவளையிலும் (1930 - 1932) பதுளையிலும் பணிபுரிந்தார். வேளாண்மை மற்றும் காணி அமைச்சின் செயலாளராக இருந்த அவர் (1933-1936) பின்னர் பொது நம்பிக்கைப் பொறுப்பாளராக 8 ஆண்டுகள் பதவியிலிருந்ததுடன் எதிரிகளின் சொத்தின் கட்டுப்பாட்டாளராகவும் (1939 - 1944) விளங்கினார். அவர் குடிசன மதிப்பின் கண்காணிப்பாளர் பதவியை 1944 – 1946 காலப்பகுதியில் வகித்ததுடன் 1946 – 1947 காலப்பகுதியில் காணி ஆணையாளராகவும் இருந்தார். அரச துறையிலான அவரது அனுபவம் மற்றும் வேளாண்மை மற்றும் காணி அமைச்சிற்கு நிரந்தரச் செயலாளராக இருந்தமை (1947 - 1950), நிதியமைச்சின் நிரந்தர செயலாளர், திறைசேரியின் செயலாளர் மற்றும் அமைச்சரவை செயலாளராக இருந்தமை என்பன மத்திய வங்கியின் ஆளுநராக அவர் நியமிக்கப்படுவதற்கான அவரின் அனுபவத்தினைக் கூட்டின. இப்பதவியில் அவர் ஐந்து ஆண்டுகள் நீடித்தார். மத்திய வங்கியில் பணியாற்றிய பின்னர் அவர் 1959 இலிருந்து 1961 வரையான காலப்பகுதியில் இத்தாலிக்கும் கிரேக்கத்திற்குமான தூதுவராகப் பணியாற்றினார். 

அவரின் சேவையினை மெச்சி நைட் கிறான்ட் குறொஸ் (1954) மற்றும் ஓடர் ஒவ் மெறிட் விருதுகள் வழங்கப்பட்டன.