கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (கொநுவிசு, 2021=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு), மத்திய கிழக்கில் இடம்பெற்றுவருகின்ற யுத்தத்திலிருந்தான கசிவுத்தாக்கங்களையும் குறிப்பாக உள்நாட்டு வலு விலைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மேல்நோக்கிய சீராக்கங்களைப் பிரதிபலித்து, 2026 ஏப்பிறலில் அதிகரித்தது. அதற்கமைய, முதன்மைப் பணவீக்கம், 2026 மாச்சின் 2.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2026 ஏப்பிறலில் 5.4 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.
உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2026 மாச்சின் 0.7 சதவீதத்திலிருந்து 2026 ஏப்பிறலில் 2.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2026 மாச்சின் 2.9 சதவீதத்திலிருந்து 2026 ஏப்பிறலில் 6.8 சதவீதத்திற்கு அதிகரித்து, முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு குறிப்பிடத்தக்களவில் பங்களித்திருந்தது.
மாதத்திற்கு மாதம் அடிப்படையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 2026 ஏப்பிறலில் 2.99 சதவீத அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தது. இவ்வதிகரிப்பானது பெரும்பாலும் போக்குவரத்து துணை வகையின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக 2.43 சதவீதப் புள்ளிகளால் பங்களித்திருந்த உணவல்லா வகையினால் தூண்டப்பட்டிருந்த அதேவேளை, உணவு வகை 0.56 சதவீதப் புள்ளிகளால் பங்களித்தது.
அதேவேளை, மையப் பணவீக்கமும் (ஆண்டிற்கு ஆண்டு), 2026 மாச்சின் 2.5 சதவீதத்திலிருந்து 2026 ஏப்பிறலில் 3.8 சதவீதத்திற்கு அதிகரித்தது.
2026 மாச்சு வரை நிலவிய 5 சதவீதம் கொண்ட இலக்குடன் ஒப்பிடுகையில் குறைந்தளவிலான பணவீக்க மட்டமானது, பணவீக்கம் மீதான உயர்ந்தளவிலான வலு விலைகளின் தாக்கத்திற்கும் அவற்றின் கசிவுத்தாக்கங்களிற்கும் இடமளித்திருந்தது. தற்போது நிலவுகின்ற மத்திய கிழக்கு யுத்தத்தின் நிலையற்ற தன்மை அத்துடன் அதன் உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார நடவடிக்கையில் ஏற்படுத்தும் பரந்த வீச்சிலான தாக்கவிளைவுகள் போன்றவற்றுக்கு மத்தியில், பணவீக்க தோற்றப்பாடு அதிகரித்த நிச்சயமற்றதன்மைக்குட்பட்டதாக காணப்படுகின்றது. அண்மைக்காலத்தில் சாத்தியமான நிரம்பலால் தூண்டப்பட்ட அசைவுகள் காணப்பட்ட போதிலும், தற்போது கிடைக்கப்பெறுகின்ற தகவல்கள் மற்றும் ஊகங்கள் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு, பொருத்தமான கொள்கைகளின் ஆதரவுடன், நடுத்தர காலத்தில் பணவீக்கமானது இலக்கினை அண்மித்துக் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.








