2016 மேயில் பணவீக்கம்

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான, பணவீக்கம், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 ஏப்பிறலில் 4.3 சதவீதத்திலிருந்து 2016 மேயில் 5.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு மற்றும் ஏனைய எரிபொருள் துணைத்துறை தவிர்ந்த உணவல்லா அனைத்து வகைகளும் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்தின் அதிகரிப்பிற்கு பங்களித்துள்ளன.  

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் 2016 ஏப்பிறலில் 2.6 சதவீதத்திலிருந்து 2016 மேயில் 2.7 சதவீதத்திற்கு அதிகரித்தது.  

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாதாந்த மாற்றத்தினைக் பரிசீலனையில் கொள்ளும்பொழுது,  தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் 2016 ஏப்பிறலிலிருந்து 2016 மேயில் 1.9 சதவீதத்தினால் அதிகரித்தது. இம்மாதாந்த அதிகரிப்பிற்கு முக்கியமாக, உணவல்லா வகையிலுள்ள விடயஙக் ளின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாக அமைந்தது. ஆடைகள் மற்றும் காலணிகள்; வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு மற்றும் எரிபொருட்கள்;  தளபாடங்கள், வீட்டுச் சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டு பேணல்கள்; நலம்; தொடர்பூட்டல்; பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம்; உணவகங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகளின் துணை வகைகளின் விலைகள் 2016 மேயில் அதிகரித்தன. வரிகளில் அண்மையில் செய்யப்பட்ட மாற்றங்களின் நேரடித் தாக்கமும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த அதிகரிப்பில் அவதானிக்கப்பட்டது. 2016 மேயில் உணவு மற்றும் வெறியமல்லா குடிபான வகைகளின் விலைகளும் அதிகரித்தன. இம்மாத காலப்பகுதியில் காய்கறிகள், அரிசி, எலுமிச்சம்பழம், உருளைக்கிழங்கு, பருப்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சீனி மற்றும் கருவாடு என்பனவற்றின் விலைகள் அதிகரித்தன. அதேவேளை 2016 மேயில் வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலை துணை வகையின் விலைகள் வீழ்ச்சியடைந்தன.   

இருப்பினும், போக்குவரத்து; மற்றும் கல்வி துணை வகைகள் இம்மாத காலப்பகுதியில் மாற்றமின்றிக் காணப்பட்டன. அதேவேளை, ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2016 ஏப்பிறலின் 5.9 சதவீதத்திலிருந்து 2016 மேயில் 7.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டுச்சராசரி தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2016 ஏப்பிறலில் 4.7 சதவீதத்திலிருந்து 2016 மேயில் 5.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.

முழுவடிவம்

Published Date: 

Tuesday, June 21, 2016