இலங்கை மத்திய வங்கி, 2026ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதிப்பாட்டு மீளாய்வினை வெளியிட்டிருக்கிறது

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 70(1)இன் நியதிகளில் இலங்கை மத்திய வங்கி 2026ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதிப்பாட்டு மீளாய்வினை வெளியிட்டிருக்கின்றது. இச்சட்டரீதியான அறிக்கை, நிதியியல் முறைமையின் உறுதித்தன்மை மீதான கணிப்பீட்டுடன் தொடர்பான இடர்நேர்வுகள் மற்றும் பாதிக்கப்படும் தன்மைகள் என்பனவற்றை அடையாளம் கண்டு, மதிப்பீடு செய்வதோடு மத்திய வங்கி மற்றும் ஏனைய ஒழுங்குமுறைப்படுத்தல்  அதிகாரசபைகளினால் செயற்படுத்தப்பட்ட கொள்கை வழிமுறைகளையும் மேற்கோடிடுகிறது. இவ்வறிக்கைஇ பொதுவாக 2026ஆம் ஆண்டின் யூன் வரையான தரவுகளை உள்ளடக்குகின்றது. இவ்வெளியீட்டின் இலத்திரனியல் பதிப்பினை இலங்கை மத்திய வங்கியின் வலைத்தளத்தில் பார்வையிடமுடியும்.

(https://www.cbsl.gov.lk/ta/வெளியீடுகள்/பொருளாதார-மற்றும்-நிதியியல்-அறிக்கை/நிதியியல்-முறைமை-உறுதிப்பாட்டு-மீளாய்வு)

2026ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதிப்பாட்டு மீளாய்வின் சுருக்கம் கீழே தரப்படுகின்றது:

இலங்கையின் நிதியியல் முறைமையானது பல்வகை அதிர்வுகளுக்கு மத்தியில், தொடர்ச்சியான பொருளாதார மீட்சி, வங்கிகள் மற்றும் நிதிக் கம்பனிகளுக்கிடையில் போதுமான மூலதன மற்றும் திரவத்தன்மை தாங்கியிருப்புக்கள் நிலையுறுதியடைந்தமை என்பவற்றுடன் மேம்பட்ட இறைச் செயலாற்றம் என்பன மூலம் துணையளிக்கப்பட்டு 2026இன் முதலரைக் காலப்பகுதியில் உறுதியானதாக விளங்கியது. உள்நாட்டு பேரண்டநிதியியல் நிலைமைகள் உறுதியாகக் காணப்பட்ட அதேவேளை, உலகளாவிய சூழலில் தீவிரமடைகின்ற நிச்சயமற்றதன்மைகள் உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு பாதகமான கசிவுத்தாக்கங்களின் இடர்நேர்வுகளை அதிகரித்தன. பொருளாதார நடவடிக்கைகளின் தொடர்ச்சியான மீட்சி, மேம்பட்ட இறைச் செயலாற்றம் மற்றும் வலுவான நிதியியல் துறைச் செயலாற்றம் என்பன மீளாய்வுக் காலப்பகுதியில்  உறுதிப்பாட்டிற்குத் துணையளித்தன. இத்தகைய அபிவிருத்திகள், தீவிரமடைந்த வெளிநாட்டு நிச்சயமற்றதன்மைகளுக்கெதிராக முக்கிய காப்பினை வழங்கியதுடன் ஒட்டுமொத்த நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கும் ஆதரவளித்தன. எவ்வாறிருப்பினும், வெளிநாட்டுச் சூழல் சவால்மிக்கதாகவே இருந்தது. தீவிரமடைந்த புவிசார் அரசியல் பதற்றங்கள், மீளெழுச்சிபெற்ற உலகளாவிய பணவீக்க அழுத்தங்கள், உயர்வடைந்த சக்தி மற்றும் பண்ட விலைகள், இறுக்கமான உலகளாவிய நிதியியல் நிலைமைகள், வளர்ச்சியடைகின்ற வர்த்தக பிளவுகள் மற்றும் அதிகரிக்கின்ற காலநிலையுடன் தொடர்புபட்ட இடர்நேர்வுகள் என்பன உள்நாட்டு பொருளாதாரத்திற்கு சாத்தியமான கசிவுத்தாக்கங்களைத் தொடர்;ந்தும் தோற்றுவித்தன. வர்த்தகம், சுற்றுலாக் கிடைப்பனவுகள், தொழிலாளர் பணவனுப்பல்கள், மூலதனப் பாய்ச்சல்கள், வெளிநாட்டு நிதியிடல் நிலைமைகள் மற்றும் செலாவணி இயக்கவாற்றல்கள் என்பனவற்றிற்கு ஊடாக இலங்கை குறிப்பிடத்தக்களவு ஆட்கொள்ளப்பட்டிருப்பதனைக் கருத்திற்கொள்கையில், குறிப்பாக, நாடு பாதகமான வெளிநாட்டு அபிவிருத்திகளுக்கு ஆட்பட்டுக் காணப்பட்டது. உள்நாட்டுப் பக்கத்தில், குறிப்பாக வாகன நிதியிடல் மற்றும் தங்கத்தினால் பிணையளிக்கப்பட்ட கடன்வழங்கல் உள்ளடங்கலாக வீட்டலகுக் கடன்வழங்கலின் கொடுகடன் வளர்ச்சியானது தனியார் துறை கொடுகடன் இடைவெளியை தொடர்ந்தும் விரிவுபடுத்தி, சாத்தியமான முறைமைசார் பாதிக்கப்படும்தன்மைகள் தோற்றுவிக்கப்படுவதை சமிக்ஞைப்படுத்தியது. மேலும், அரசாங்கத் துறைக்கான நிதியியல் துறையின் வெளிப்படுத்தல்கள் குறைந்த போதிலும், அது இன்னமும் முக்கியமானதாகவிருந்ததுடன் அரசாங்கத்திற்கும் நிதியியல் துறைக்கும் இடையிலான  குறிப்பிடத்தக்க பிணைப்பினை அடிக்கோடிட்டுக் காட்டியது. உயர்வடைகின்ற வீட்டலகு கடன்சுமைகள், பிணையுறுதியினால் பிணையளிக்கப்பட்ட கடன்வழங்கலுக்கு அதிகரித்தளவில் உட்பட்டிருகின்ற நிலைமையில் பிணையுறுதிப் பெறுமதிகளின் தளம்பல்கள், உண்மைச் சொத்து விலைகளில் தொடர்ச்சியான உயர்வு மற்றும் பணவீக்க அழுத்தங்கள் என்பன தோற்றும்பெற்று வருகின்ற இடர்நேர்வுகளை மேலும் தீவிரப்படுத்தின. இத்தகைய அபிவிருத்திகளுக்கு பதிலிறுத்தி பொருளாதாரத்தினுள் பாதிக்கப்படும்தன்மைகள் தோற்றம்பெறுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு, மத்திய வங்கி 2026 மே மாதத்தில் ஓரிரவுக் கொள்கை வீதத்தினை அதிகரித்ததுடன் வாகனங்கள் மற்றும் தங்கத்தினால் பிணையளிக்கப்பட்ட கடன்வழங்கல் மீது பெறுமதிக்கான கடன் வரையறைகள் உள்ளடங்கலாக பேரண்ட முன்மதியுடைய வழிமுறைகளை அறிமுகப்படுத்தியது.

நிதியியல் அழுத்தச் சுட்டெண் ஒப்பீட்டளவில் தாழ்வான மட்டங்களில் காணப்பட்டதுடன் உள்நாட்டு நிதியியல் சந்தைகள், மீளாய்வுக் காலப்பகுதியில் பெருமளவில் உறுதியாகக் காணப்பட்டன. தீவிரமடைந்த உலகளாவிய நிச்சயமற்றதன்மை, உள்நாட்டு பணவீக்க கரிசனைகள் மற்றும் இறுக்கமான நாணய நிலைமைகள் என்பன மூலம் நிதியியல் சந்தை நிலைமைகள் நெறிப்படுத்தப்பட்டன. பங்குரிமைச் சந்தைச் செயலாற்றமானது தாழ்வடைந்த முதலீட்டாளர் எண்ணப்பாங்கிற்கு மத்தியில் மிதமடைந்த அதேவேளை, திரவத்தன்மை நலிவடைந்துடன் தளம்பல்கள் அதிகரித்தன. படிப்படியாக வளர்ச்சியடைகின்ற சந்தை எதிர்பார்க்கைகள் மற்றும் நாணயக் கொள்கை இறுக்கமாக்கலைத் தொடர்ந்து அரசாங்கப் பிணையங்களின் விளைவு வீதங்கள் மீளாய்வுக் காலப்பகுதியில் முதிர்ச்சிகள் முழுவதும் அதிகரித்தன. இரண்டாந்தரச் சந்தை திரவத்தன்மை ஒப்பீட்டளவில் குறைவடைந்து, உள்நாட்டு படுகடன் சந்தையில் மட்டுப்படுத்தபட்ட விரிவையும் வர்த்தக நடவடிக்கைகளையும்  குறித்துக்காட்டியது. அதேவேளை வெளிநாட்டு முதலீட்டளர் பங்கேற்பானது தொடர்புடைய காலப்பகுதியின் பிந்திய பாகத்தை நோக்கிய மிதமான மீட்சியொன்றுக்கு மத்தியில் தொடர்ந்தும் குறைவாகவே இருந்தது. உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை குறிப்பாக மத்திய கிழக்கில் பதற்றங்கள் உயர்வடைந்தமை மூலம் தீவிரமடைந்த அழுத்தத்தைக் கொண்ட காலப்பகுதிகளை அனுபவித்து, உயர்வான இறக்குமதிச் செலவினம், உயர்வடைகின்ற சக்தி விலைகள் மற்றும் முதலீட்டாளர் எண்ணப்பாங்கின் மாறுதல்கள் என்பவற்றிலிருந்து தோன்றுகின்ற வெளிநாட்டு நாணயத்திற்கான அதிகரித்த கேள்வியினைப் பிரதிபலித்தது.  இத்தகைய அபிவிருத்திகள் ஐ.அ.டொலருக்கெதிராக இலங்கை ரூபாவின் தேய்விற்குப் பங்களித்தன. கொள்கை வழிமுறைகள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள், சுற்றுலா, ஏற்றுமதிகளிலிருந்தான தொடர்ச்சியான உட்பாய்ச்சல்கள் மற்றும் எரிபொருள் விலைகளில் அவ்வப்போதான வீழ்ச்சி என்பன மூலம் துணையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தை நிலைமைகள் மேம்பட்டன. காலப்பகுதியில் பணச் சந்தை நடவடிக்கை வலுவடைந்த அதேவேளை, ஒட்டுமொத்த திரவத்தன்மை மிகையாகக் காணப்பட்டதுடன் வட்டி வீதங்கள் நாணயக் கொள்கையுடன் பரந்தளவில் அணிசேர்ந்து காணப்பட்டன. தீர்ப்பனவு உட்கட்டமைப்பில் மேலும் டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் மேம்பாடுகள் மூலம் துணையளிக்கப்பட்டு கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் தொழிற்பாட்டு ரீதியாக தொடர்ந்தும்  தாக்குப்பிடிக்கும்தன்மையை எடுத்துக்காட்டின. இணைய, தொழிற்பாடு சார்ந்த மற்றும் மூன்றாந்தரப்பு இடர்நேர்வுகளுக்கு நிதியியல் முறைமை உள்ளாகின்ற தன்மை அதிகரிக்கின்றமைக்கு மத்தியில் டிஜிட்டல் நிதியியல் சேவைகளின் தொடர்ச்சியான விரிவடைதல் வினைத்திறனையும் நிதியியல் வசதிக்குட்படுத்தலையும் மேம்படுத்தியது. டிஜிட்டல் தொடர்புகள் விரிவடைந்து, தொழில்நுட்பவியல் துரிதமாக பரிணாம வளர்ச்சியடைவதற்கேற்ப நிதியியல் உறுதிப்பாட்டைப் பாதுகாப்பதற்கு போதுமான இணைய ரீதியான தாக்குப்பிடிக்கும்தன்மையை உறுதிசெய்வதும் தொழிற்பாடு சார்ந்த தயார்நிலையும் இன்றியமையாததாகக் காணப்படுகின்றன. 

பொருளாதார நடவடிக்கையில் மீட்சி, வலுவான இலாபத்தன்மை மற்றும் போதுமான மூலதனம் அத்துடன் திரவத்தன்மை தாங்கியிருப்புக்கள் என்பன மூலம் துணையளிக்கப்பட்டு  நிதியியல் நிறுவனங்கள் மீளாய்வுக் காலப்பகுதியில் தொடர்ந்தும் ஒட்டுமொத்த தாக்குப்பிடிக்கும்தன்மையை எடுத்துக்காட்டின. நுகர்வு, வர்த்தகம், நிதியியல் சேவைகள், கட்டடவாக்கம், கரைகடந்த தொடர்புபட்ட கடன்வழங்கல் என்பவற்றில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் தனியார் துறையின் கடனுக்கான வலுவான கேள்விக்கு மத்தியில் வங்கித்தொழில் துறையின் கொடுகடன் குறிப்பிடத்தக்களவு விரிவடைந்தது. கட்டம் 3 கடன் விகிதத்தின்  வீழ்ச்சியுடன் கட்டம் 3 பெறுமதியிழப்பு காப்பு விகிதத்தின் மேம்படுதலும் வங்கித்தொழில் துறையின் மேம்பட்ட தாக்குப்பிடிக்கும்தன்மையினை வெளிக்காட்டியது. எனினும், கட்டம் 2 கடன்கள் 2026 இரண்டாம் காலாண்டுப்பகுதியில் அதிகரித்து, உயர்வடைந்த கொடுகடன் விரிவடைதலுக்கு மத்தியில் கடன்பெறுநர்களுக்கிடையில் சாத்தியமான கொடுகடன் இடர்நேர்வு தோற்றம்பெறுவதை எடுத்துக்காட்டியது. வங்கித்தொழில் துறையில் திரவத்தன்மை விகிதங்கள், மீளாய்வுக் காலப்பகுதியில் மிதமடைந்த அதேவேளை, அவை ஒழுங்குமுறைப்படுத்தல் அடிப்படை அளவுகளுக்கு நன்கு மேலே காணப்பட்டன. இவ்வீழ்ச்சியானது முதன்மையாக உயர்தர திரவச் சொத்துக்களில் குறிப்பாக அரசாங்கப் பிணையங்களிலிருந்து தனியார் துறை கடன்வழங்கலுக்காக சொத்து ஒதுக்கீட்டின் மாற்றமொன்றைப் பிரதிபலித்தது. அதேவேளை, குறுகியகால முதிர்ச்சி பொருந்தாமைகள் விரிவடைந்து, எதிர்பாராத அழுத்த நிலைமைகளின் கீழ் துறையினுள் சாத்தியமான மீள்நிதியளிப்பு மற்றும் திரவத்தன்மை இடர்நேர்வுகளை அதிகரித்தன. மேலும், வங்கித்தொழில் துறையின் இலாபத்தன்மை, 2025இன் முதலரைக் காலப்பகுதியில் பதிவாகிய வளர்ச்சி வேக மட்டங்களிலிருந்து ஓரளவு மிதமடைந்த போதிலும் தொடர்ந்தும் மேம்பட்டன. வலுவான இலாபத்தன்மையினால் உந்தப்பட்டு மூலதனத்தின் தொடர்ச்சியான கட்டியெழுப்புதலுக்கு மத்தியில் இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களின் வளர்ச்சி மூலதன ஒன்றுசேர்த்தல் வேகத்தை விஞ்சிச்சென்றமையினால் வங்கித்தொழில் துறையின் மூலதனப் போதுமாந்தன்மை விகிதங்கள் வீழ்ச்சியடைந்தன. இம்மிதமடைதல் எவ்வாறிருப்பினும், மூலதனத் தாங்கியிருப்புக்கள் ஒழுங்குமுறைப்படுத்தல் அடிப்படை அளவுகளுக்கு நன்கு மேல் காணப்பட்டு, சாத்தியமான அதிர்வுகளை ஈர்ப்பதற்கான போதிய இயலளவினை வழங்கின. நிதிக் கம்பனிகள் துறையானது வாகன நிதியளிப்பு மற்றும் தங்கத்தினால்; பிணையளிக்கப்பட்ட கடன்வழங்கல் என்பவற்றிற்கான தீவிரமடைந்த கேள்வியினால் தூண்டப்பட்டு, குறிப்பிடத்தக்க கொடுகடன் விரிவடைதலை அனுபவித்தது. கட்டம் 3 கடன்கள் விகிதம் மேம்பட்ட போதிலும்; கட்டம் 2 கடன்களின் சடுதியான அதிகரிப்பானது நிதிக் கம்பனிகள் துறையினுள் அதிகரிக்கின்ற கொடுகடன் இடர்நேர்வுகளை எடுத்துக்காட்டின. டித்வா புயலினாலும் மத்திய கிழக்கு மோதலினாலும் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்கள் மீது ஏற்பட்ட பாதகமான விளைவுகள் இதற்கு பகுதியளவில் காரணமாக அமைந்து சொத்துத் தர அபிவிருத்திகளினதும் துறைசார் பாதிக்கப்படும் தன்மைகளின் சாத்தியமான ஒன்றுசேர்தல்கள் பற்றியும் தொடர்ச்சியான கண்காணித்தலுக்கான தேவையினை அடிக்கோடிட்டுக்காட்டின. மேலும், பெறுமதியிழப்பு காப்பு விகிதம் வீழ்ச்சியடைந்து, துறையினுள் இழப்புக்களை உள்ளீர்க்கும் இயலளவில் ஓர் சீர்குலைவொன்றினை எடுத்துக்காட்டியது. நிதிக் கம்பனிகள் துறையின் திரவத்தன்மை தாங்கியிருப்புக்கள் போதுமானதாகவும் ஒழுங்குமுறைப்படுத்தல் அடிப்படை அளவுகளுக்கு நன்கு மேலும் காணப்பட்ட அதேவேளை, வலுவான கொடுகடன் விரிவாக்கத்திற்கு மத்தியில் திரவத்தன்மை விகிதங்கள் வீழ்ச்சியடைந்தன. அதேவேளை, வைப்புக்களுடன் ஒப்பிடுகையில் கடன்பெறுதல்களின் விரைவான வளர்ச்சி நிதிக் கம்பனிகளுக்கும் வங்கிகளுக்குமிடையில் அதிகரிக்கின்ற ஒன்றுடனொன்று இணைந்த தன்மையினை எடுத்துக்காட்டியது. 2026/2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிதிக் கம்பனிகள் துறையின் இலாப வளர்ச்சி வீதம் மிதமடைந்த போதிலும் தேறிய வட்டி வருமானத்தினால் துணையளிக்கப்பட்டு இலாபங்கள் தொடர்ந்தும் அதிகரித்தன. கொடுகடன் விரிவடைதலினால் தூண்டப்பட்டு இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களின் அதிகரிப்புடன் ஒருங்கிணைந்து துறையின் மூலதன தாங்கியிருப்புக்கள் வீழ்ச்சியடைந்தன. காப்புறுதித் துறையின் இலாபத்தன்மை மிதமடைந்த போதிலும் அத்துறை போதுமானளவு மூலதனமாக்கப்பட்டு காணப்பட்டது. டித்வா புயலிலிருந்து தோன்றிய கணிசமமான கோரிக்கைகள், மீள்காப்புறுதி கிடைக்கப்பெறத்தக்கவைகளை அதிகரித்ததுடன் எழுத்துறுதி, திரவத்தன்மை மற்றும் இணைத்தரப்பு இடர்நேர்வுகள் என்பவற்றை தீவிரமாக்கியது.

வீட்டலகு மற்றும் நிறுவனசார் துறைகள்  இரண்டிற்குமான கடன்வழங்கல் 2026இன் முதலரைக் காலப்பகுதியில் அதிகரித்தன. வீட்டலகுக்கான கொடுகடன் வளர்ச்சி உயர்வடைந்து காணப்பட்ட போதிலும் காலப்பகுதியின் பிந்திய பாகத்தை நோக்கி சிறிதளவு மிதமடைந்தமை அவதானிக்கப்பட்டது. வீட்டலகுகளுக்கான முறைசார் நிதி வழங்கலின் முதன்மை மூலமாக வங்கித்தொழில் துறை காணப்பட்ட போதிலும், வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களினால் வழங்கப்படும் வீட்டலகுத் துறைக்கான கொடுகடனின் பங்கு 2026இன் முதலரைக் காலப்பகுதியில் மேலும் அதிகரித்தது. மேலும், ஒட்டுமொத்த கொடுகடன் புள்ளிகளால் பிரதிபலிக்கப்பட்டவாறு வீட்டலகு கடன்பெறுநர்களின் இடர்நேர்வுப் பட்டியல் 2026இன் முதலரைக் காலப்பகுதியில் பரந்தளவில் நிலையாகக் காணப்பட்டது. நிறுவனசார் துறைக்கான கொடுகடனும் துரிதமான வேகத்தில் விரிவடைந்ததுடன் துறைக்கான பாரிய பெரும்பான்மையான கடன்வழங்குதலுக்கு வங்கித்தொழில் துறை வகைகூறியது. அதேவேளை, பட்டியலிடப்பட்ட நிதியியல்லா கூட்டாண்மைத் துறையின்  ஒன்றுதிரட்டிய இலாபத்தன்மை பலவீனமடைந்த போதிலும் 2026இன் முதலரைக்காலப்பகுதியில் வலுவான வருவாய் வளர்ச்சியைப் பதிவுசெய்தது. ஒன்றுதிரட்டிய இலாபங்களில் வீழ்ச்சிக்கு உயர்வான விற்பனைக் கிரயம் மற்றும் தொழிற்பாட்டுச் செலவுகள் பெருமளவில் காரணமாக அமைந்தன. இப்பின்னணிக்கெதிராக ஒன்றுதிரட்டிய இலாபத் தன்மையிலும் படுகடன் தீர்ப்பனவு இயலளவிலும் மெதுவடைதலைப் பிரதிபலித்து பட்டியலிடப்பட்ட நிதியியல்லா கூட்டாண்மைத் துறையின் கடன்நம்பகத்தன்மை சில மிதமடைதல் சமிக்ஞைகளைக் காண்பித்தது. 

நிதியியல் துறையின் அபிவிருத்திகளையும்  தோற்றம்பெறுகின்ற இடர்நேர்வுகளையும் பதிலிறுத்தி, மீளாய்வுக் காலப்பகுதியில் பல்வேறு கொள்கை வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. வாகன நிதியளிப்பு மற்றும் தங்கத்தினால் பிணையளிக்கப்பட்ட கடன்வழங்கலில் துரிதமான கொடுகடன் விரிவடைதலைக் கொண்ட பின்னணிக்கெதிராக மிதமிஞ்சிய கடன் சுமையினைக் கட்டுப்படுத்துவதற்கும் தோற்றம்பெறுகின்ற இடர்நேர்வுகளைத் தணிப்பதற்கும் கடன்பெறுநர் அடிப்படையிலமைந்த பேரண்ட முன்மதியுடைய வழிமுறைகள் இறுக்கமாக்கப்பட்டன. முன்மதிமிக்க கடன்வழங்கல் நடைமுறைகளை ஊக்குவிப்பதையும் முறைமைசார்ந்த பாதிக்கப்படும் தன்மைகள் தோற்றம்பெறுவதைக் கட்டுப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு மோட்டார் வாகன நிதியளிப்பு மீது உயர்ந்தபட்ச பெறுமதிக்கான கடன் வரையறைகளை எளிமைப்படுத்தல் மற்றும் இறுக்கமாக்குதல் அத்துடன் தங்கத்தினால்; பிணையளிக்கப்பட்ட கடன்வழங்கல் மீது உயர்ந்தபட்ச பெறுமதிக்கான கடன் வரையறைகளை அறிமுகப்படுத்தல் என்பவற்றை இவ்வழிமுறைகள் உள்ளடக்கியிருந்தன. தங்கத்தினால் பிணையளிக்கப்பட்ட கடன்வழங்கல் மீது பெறுமதிக்கான கடன்வழங்கல் வரையறைகளுக்கு மேலதிகமாக மீளாய்வுக் காலப்பகுதியில் ஏற்புடைய இடர்நேர்வு நிறையேற்றங்களும் இறுக்கமாக்கப்பட்டன. டித்வா புயலின் பாதகமான தாக்கங்களுக்குப் பதிலிறுத்தும் வகையில் பாதிக்கப்பட்ட தனியாட்களுக்கும், வியாபாரங்களுக்கும் நிவாரண வழிமுறைகள் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி வங்கிகள் மற்றும் நிதிக் கம்பனிகள் இரண்டிற்கும் மத்திய வங்கி சுற்றறிக்கைகளை வழங்கியது. வங்கித்தொழில் மற்றும் நிதிக் கம்பனிகள் துறைகளின் தாக்குப்பிடிக்கும் தன்மையினை வலுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு ஒன்றுதிரட்டுதல் முன்முயற்சிகளுடன் சேர்த்து வங்கிகள் மற்றும் நிதிக் கம்பனிகள் இரண்டிற்கும் மீண்டெழுதல்; திட்டங்கள் மீதான பணிப்புரைகள் வழங்கப்பட்டன. நிதியியல் மோசடிகள் மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவு முறைகளில் இடம்பெறுகின்ற நிதியியல் மோசடிகளின் அதிகரிக்கின்ற பரவலுக்கு மத்தியில் டிஜிட்டல் கொடுப்பனவு முறைகளின் பாதுகாப்பினை வலுப்படுத்துவதையும் தொடர்புபட்ட இடர்நேர்வுகள் பற்றிய பொதுமக்கள் விழிப்புணர்வை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு மத்திய வங்கி கொள்கைசார் முயற்சிகளை அறிமுகப்படுத்தியது. நிதியியல் வசதிக்குட்படுத்தலை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்ட முயற்சிகள் மற்றும் தீர்மானக் கட்டமைப்பு, நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் பணம் தூயதாக்கலுக்கெதிரான பயங்கரவாத நிதியளிப்பைத் தடுத்தல் கட்டமைப்புக்கள் ஆகியவற்றை வலுப்படுத்துவதோடு பணம் தூயதாக்கலுக்கு ஆசிய பசுபிக் குழுமத்தினால் மேற்கொள்ளப்படும் இலங்கையின் பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை தடுத்தல் கட்டமைப்புக்காக மூன்றாவது இணக்க மதிப்பீட்டுக்கு தயாராதலுடன் ஒன்று சேர்ந்து வழிமுறைகள் எடுக்கப்பட்டன. 

நிதியியல் உறுதிப்பாட்டுத் தோற்றப்பாடு

நிதியியல்  உறுதிப்பாட்டிற்கான தோற்றப்பாடு  பரந்தளவில் சாதகமாகவே காணப்படுகின்ற போதும், முன்னெடுக்கப்பட்டுவருகின்ற பொருளாதார மீட்சி நிலையுறுதிமிக்கதாகக் காணப்படுதல், இறை திரட்சிப்படுத்தல் முன்னேறமடைதல், முன்மதிமிக்க கொள்கை நடைமுறைப்படுத்தல்கள் தொடர்ந்தும்  இடம்பெறல் என்பனவற்றில் தங்கியுள்ளது. எவ்வாறாயினும், புவிசார் அரசியல் மற்றும் நிதியியல் சந்தையில் நிச்சயமற்றதன்மைகள் உள்ளடங்கலான வெளிநாட்டு அபிவிருத்திகள், அதேபோன்று  பரிணமிக்கின்ற இணைய இடர்நேர்வுகளுடன் ஒன்றுசேர்ந்து  கொடுகடனின் மிதமிஞ்சிய விரிவாக்கம் மற்றும் துறைசார் செறிவு ஆகியவற்றிலிருந்து தோன்றுகின்ற உள்நாட்டு பாதிக்கப்படும்தன்மைகள் போன்றவற்றின் நிபந்தiனைக்குட்பட்டே இத்தோற்றப்பாடு காணப்படுகின்றது. ஆகையினால், நிதியியல்  உறுதிப்பாட்டினைப் பேணிக்காப்பதில்  தொடர்ச்சியான கண்காணித்தலும், உரியகால  கொள்கை ரீதியான தலையீடுகளும் முக்கியமானதாக விளங்கும். நீடித்த புவிசார் அரசியல் பதற்றங்களும் எரிசக்தி விலை அதிர்ச்சிகளும் வெளிநாட்டு  மீதிகளை பலவீனப்படுத்தி, பணவீக்க அழுத்தங்களை அதிகரித்து, இதனூடாக கடன்பெறுநர்களின் மீளச்செலுத்தும் இயலளவை பாதிக்கலாம். இத்தாக்கங்கள், வீட்டலகுகளுக்கான   பிணையுறுதி அடிப்படையில் வழங்கப்படும் கடன்வழங்கலில் வளர்ச்சி, அதிகரித்து வரும் கட்டம் 2 வெளிப்படுத்துகைகள் மற்றும் வீழ்ச்சியடைகின்ற திரவத்தன்மை அத்துடன்  மூலதன தாங்கியிருப்புகள் உள்ளடங்கலாக  ஏற்கனவேயுள்ள உள்நாட்டு பாதிக்கப்படும்தன்மைகளை மிகைப்படுத்தக்கூடும். முதலீட்டாளர் நம்பிக்கையை வலுப்படுத்துதல், சந்தைத் திரவத்;தன்மையை மேம்படுத்துதல், உள்நாட்டு மூலதனச் சந்தைகளை விரிவுபடுத்தல் என்பவற்றுடன் பரந்த மற்றும் மிகவும் உறுதியான வெளிநாட்டு முதலீட்டாளர் தளத்தை ஈர்த்தல்  போன்ற இயலுமையின் மூலம்  நிதியியல் சந்தையின் தாக்குப்பிடிக்கும்தன்மை  அதிகரித்தளவில் நெறிப்படுத்தப்பட்டு,  இதன் மூலம் அதிர்ச்சிகளை ஈர்ப்பதற்கும்  வினைத்திறன்மிக்க விலை கண்டறிதலுக்கு ஆதரவளிப்பதற்கும் சந்தையின் இயலளவு மேம்படுத்தப்படும். ஒட்டுமொத்தமாக, நிதியியல் உறுதிப்பாட்டைப் பேணுவதென்பது கட்டமைப்பு மறுசீரமைப்புகளில் தொடர்ச்சியான முன்னேற்றத்தினால் துணையளிக்கப்பட்ட முன்மதிமிக்க நாணய, பேரண்டமுன்மதிமிக்க மற்றும்  ஒழுங்குமுறைப்படுத்தல் கொள்கைகள் என்பவற்றின் நன்கு அளவமைக்கப்பட்ட ஒன்றிணைப்பினை வேண்டிநிற்கின்றது. எனவே, நிதியியல்  நிறுவனங்கள் முழுவதும் வலுவான மூலதன மற்றும் திரவத்தன்மை தாங்கியிருப்புகளை பேணிக்காத்தல், காலநிலை தொடர்புபட்ட மற்றும் இணைய இடர்நேர்வுகள் பற்றிய முகாமைத்துவத்தை வலுப்படுத்துதல், தீர்மான மற்றும் நெருக்கடிக்குத் தயார்நிலைக் கட்டமைப்புக்களை மேம்படுத்துதல், கொடுகடன் விரிவாக்கமானது அடிப்படைப் பொருளாதார நடவடிக்கை மற்றும் இடர்நேர்வு நிலைமைகளுக்கு ஒப்பிடத்தக்கவாறு இருப்பதை உறுதிசெய்தல் என்பவற்றின் மீது நிதியியல் துறை முன்னுரிமைகள் மையப்படுத்திருக்க வேண்டும். இம்முயற்சிகள், முறைமைசார் பாதிக்கப்படும் தன்மைகள் கடடியெழுப்பப்படுவதை தணிப்பதற்கும், நிதியியல்  முறைமையின் அதிர்ச்சியை ஈர்க்கும் இயலளவை வலுப்படுத்துவதற்கும், நடுத்தர காலத்தில் நிதியியல்  உறுதிப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் இன்றியமையாததாக விளங்கும்.

PDF

 

 

Published Date: 

Monday, October 12, 2026