கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது 2026 யூலையில் மேலும் அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை  (கொநுவிசு, 2021=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2026 யூனில் 6.8 சதவீதத்திலிருந்து 2026 யூலையில் 7.3 சதவீதமாக மேலும் அதிகரித்து உணவல்லா வகையின் வீட்டு வாடகைகளில் சீராக்கத்தையும் உணவுப் பணவீக்கத்தில் தளத்தாக்கத்தினையும் முதன்மையாகப் பிரதிபலித்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்காண்டு) 2026 யூனின் 3.6 சதவீதத்திலிருந்து 2026 யூலையில் 6.3 சதவீதமாக அதிகரித்து முதன்மைப் பணவீக்கத்தின் அதிகரிப்பிற்குப் பிரதானமாகப் பங்களித்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்காண்டு) 8.4 சதவீதத்திலிருந்து 2026 யூலையில் 7.8 சதவீதமாகக் குறைவடைந்தது.

மாதத்திற்கு மாதம் அடிப்படையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 2026 யூலையில் 0.24 சதவீத அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. பெருமளவில் வீட்டு வாடகை விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்புக் காரணமாக 0.23 சதவீதப் புள்ளிகள் பங்களிப்புச் செய்த உணவல்லா வகையினால் இவ்வதிகரிப்பு பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்த அதேவேளை உணவு வகை 0.01 சதவீதப் புள்ளிகளால் சிறிதளவு பங்களித்தது.

அதேவேளை, மையப் பணவீக்கமானது (ஆண்டிற்காண்டு) 2026 யூனின் 4.0 சதவீதத்திலிருந்து 2026 யூலையில் 4.4 சதவீதமாக அதிகரித்தது.

கிடைக்கப்பெறுகின்ற தகவல்கள் மற்றும் ஊகங்களை அடிப்படையாக் கொண்டு 2026 யூலை நாணயக் கொள்கைச் சுற்றில் ஆக்கப்பட்ட பணவீக்க எறிவுகள், முதன்மைப் பணவீக்கம் பொருத்தமான கொள்கை வழிமுறைகளினால் துணையளிக்கப்பட்டு நடுத்தரகாலத்தில் தளர்வடைந்து இலக்கினை அண்மித்து நிலைபெறுவதற்கு முன்னர் அண்மைய காலத்தில் 5 சதவீதம் கொண்ட இலக்கிற்கு மேல் காணப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றன. எனினும், மத்திய கிழக்கில் நிலவுகின்ற பதற்றங்களின் நிலையற்றதன்மை மற்றும் உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் முழுவதுமான அதன் பரந்த வீச்சிலான கசிவுத்தாக்கங்கள் என்பவற்றிற்கு மத்தியில் தற்போதைய பணவீக்கத் தோற்றப்பாடு உணர்வடைந்த நிச்சயமற்றதன்மைக்குட்பட்டுக் காணப்படுகின்றது.

PDF

Published Date: 

Friday, July 31, 2026