இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – கட்டடவாக்கம் 2026 யூனில் விரிவடைந்தது

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு, கட்டடவாக்க நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவடைதலை எடுத்துக்காட்டி, 2026 யூனில் 60.0ஆக அதிகரித்தது. முன்னைய மாதங்களில் வழங்கப்பட்ட கட்டடவாக்க கருத்திட்டங்களின் முன்னெடுக்கப்படுகின்ற நிறைவேற்றல்கள் இவ்வதிகரிப்பிற்கு காரணமாகவிருந்தன என பல பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

முன்னைய மாதத்தில் பதிவாகிய உயர்வான மட்டத்திலான கருத்திட்ட வழங்கலைத் தொடர்ந்து, புதிய கட்டளைகள் சுட்டெண் மெதுவான வேகமாயினும், தொடர்ச்சியாக விரிவடைந்தது. நிறுவனங்கள் ஊழியர் ஆட்சேர்ப்பினை தொடர்ச்சியாக துரிதப்படுத்தியதால், தொழில்நிலைச் சுட்டெண் யூனில் மேலும் அதிகரித்தது. எனினும், தேர்ச்சிபெற்ற கட்டடவாக்க தொழிலாளர்களின் பற்றாக்குறை தொடர்ச்சியாக காணப்படுகின்றது என பல பதிலிறுப்பாளர்கள் சுட்டிக்காட்டினர். கட்டடவாக்க நடவடிக்கைகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான அதிகரிப்புடன் கொள்வனவுகளின் அளவுச் சுட்டெண் அதிகரித்தது. எவ்வாறிருப்பினும், முக்கிய மூல, குறிப்பாக தார் போன்ற பொருட்களின் பற்றாக்குறையானது கட்டடவாக்க நடவடிக்கைகளின் வேகத்தினை தொடர்ச்சியாக தடைப்படுத்தியதாக பல பதிலிறுப்பாளர்கள் அறிக்கையிட்டனர். அதேவேளை, நிரம்பலர் விநியோக நேரம், தற்போது இடம்பெற்றுவரும் வழங்கல் இடையூறுகளின் காரணமாக யூனில் உயர்வடைந்து காணப்பட்டது.

உள்ளீட்டுப்  பற்றாக்குறை இடர்நேர்வானது இத்துறையின் வளர்ச்சிக்கு தொடர்ந்தும் முட்டுக்கட்டைகளைத் தோற்றுவித்த போதிலும், ஆரோக்கியமான ஏற்கனவே திட்டமிடப்பட்ட பணிக் கருத்திட்டங்கள் மூலம் துணையளிக்கப்பட்டு, கட்டுமான நிறுவனங்கள் மத்தியில் எதிர்வரவிருக்கின்ற காலாண்டிற்கான வியாபார எண்ணப்பாங்கு சாதகமாகக் காணப்படுகின்றது.

PDF

Published Date: 

Friday, July 31, 2026