கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2026 யூனில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துகாட்டுகின்றன.
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2026 யூனில் 53.0 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. இது முன்னைய மாதத்தை விட மெதுவான வேகத்திலேனும் தயாரிப்பு நடவடிக்கைளில் தொடர்ச்சியான விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றது.
புதிய கட்டளைகள் துணைச் சுட்டெண் நடுத்தர அடிப்படை அளவில் காணப்படுவதுடன் முன்னைய மாதத்திலிருந்து யூனில் உள்வருகின்ற கட்டளைகள் பரந்தளவில் மாற்றமின்றிக் காணப்பட்டன. உணவு மற்றும் குடிபானத் துறை தயாரிப்பினால் உந்தப்பட்டு, உற்பத்தி துணைச் சுட்டெண் தொடர்ந்தும் விரிவடைந்தது. தொழில்நிலை துணைச் சுட்டெண் முன்னைய மாதத்தில் இருந்ததைப் போன்று பணிக்கமர்த்தும் போக்குகளை எடுத்துக்காட்டி, நடுத்தர அடிப்படை அளவை அண்மித்துக் காணப்பட்டது. எனினும், தொடர்ச்சியான தேர்ச்சிமிக்க தொழிலாளர் பற்றாக்குறைகள் மற்றும் உயர்வடைகின்ற தொழில் செலவுகள் என்பவற்றை முக்கிய சவால்களாக பல பதிலிறுப்பாளர்கள் எடுத்துக்காட்டினர். தளம்பல்மிக்க நிரம்பல் சூழ்நிலைக்கு மத்தியில் கையிருப்பைக் கட்டமைப்பதற்கான நிறுவனத்தின் முயற்சிகளைப் பிரதிபலித்து கொள்வனவுகள் துணைச்சுட்டெண்னின் இருப்பு யூனில் மேலும் அதிகரித்தது. அதேவேளை, நிரம்பலர் விநியோக நேர துணைச்சுட்டெண் யூனில் தொடர்ந்தும் நீட்சியடைந்தது.
மத்திய கிழக்கில் மோதலுடன் தொடர்புபட்ட சவால்மிக்க சூழலினால் பிரதானமாக மிதமடைந்திருந்த போதிலும், தயாரிப்பு நடவடிக்கைகளுக்கான எதிர்பார்க்கைகள் சாதகமாகக் காணப்பட்டன.
பணிகளுக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – பணிகள்), 2026 யூனில் 58.5 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் பணிகள் நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவடைதலினை எடுத்துக்காட்டுகின்றது.
பரந்தளவிலான துறைசார் மேம்பாடுகள் மூலம் துணையளிக்கப்பட்டு, 2026 யூனில் வியாபார நடவடிக்கை விரிவடைந்தது. காப்புறுதித் துறையில் குறிப்பிடத்தக்களவிலான பெறுகைகளுடன் இணைந்து, நிதியியல் மற்றும் தொழில்துறைசார் பணிகள் துணைத் துறைகளினால் வளர்ச்சியானது முதன்மையாக உந்தப்பட்டது.
நிதியியல் பணிகள் துறையின் மூலம் முதன்மையாக வழிநடத்தப்பட்டு, புதிய வியாபாரங்கள் 2026 யூனில் வளர்ச்சியடைந்தன. காப்புறுதி, தொழில்துறைசார் பணிகள் மற்றும் ஏனைய தனிப்பட்ட பணிகளும் விரிவடைதலுக்குப் பங்களித்தன.
பல்தரப்பட்ட கம்பனிகள் தமது தொழிற்படையை விரிவுபடுத்தியமையால் 2026 யூனில் தொழில்நிலை அதிகரித்தது. அதேவேளை, மேயில் வீழ்ச்சியடைந்து காணப்பட்டிருந்த நிலுவையிலுள்ள பணிகள் துணைச் சுட்டெண் நடுத்தர அடிப்படை அளவை அடைந்ததனால் யூனில் நிலையாகக் காணப்பட்டன.
எதிர்பார்க்கப்படும் பொருளாதார மேம்பாடுகள் மற்றும் எதிர்வரும் கண்டி எசல பெரஹர பருவகாலத்தினால் பகுதியளவில் உந்தப்பட்ட சுற்றுலா வருகைகளில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பு என்பவற்றினால் தூண்டப்பட்டு அடுத்த காலாண்டிற்கான வியாபார நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் சாதகமாகக் காணப்பட்டன. எனினும், பரந்தளவிலான உலகளாவிய நிச்சயமற்றதன்மைகள் இவ்வளர்ச்சிக்கான இடர்நேர்வுகளை இன்னும் ஏற்படுத்துகின்றன.








