2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சியிற்கு நியமிக்கப்பட்ட நிருவாகியான திரு. பி. டபிள்யு. டி. என். ஆர். ரொட்ரிகோ என்பவரின் பதவிக்காலத்தை இலங்கை மத்திய வங்கி நீடித்துள்ளது.
2025.07.04ஆம் திகதியிட்ட 2443/57ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் விடுக்கப்பட்ட கட்டளையின் ஊடாக முதலில்; நியமிக்கப்பட்டு, பின்னர் 2026.07.03 வரை பதவிக்காலம் நீடிக்கப்பட்ட திரு. ரொட்ரிகோ அவர்கள், 2026.07.04ஆம் திகதியிலிருந்து 2027.01.03ஆம் திகதி வரையான மேலும் ஆறு (06) மாத காலப்பகுதியொன்றிற்கு இப்பொறுப்பைத் தொடர்ந்து முன்னெடுப்பார்.
நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி இன் தீர்மானச் செயன்முறையின் இடையறாத் தொடர்ச்சியை உறுதிசெய்வதற்காக இந்நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தினால் அனுமதியளிக்கப்பட்ட இச்செயன்முறையின் முக்கிய படிமுறைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக நிருவாகிக்கு மேலதிக காலம் தேவைப்படுகின்றது.
நீடிக்கப்படும் காலப்பகுதியில், நிருவாகி நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சியின் சகல சொத்துக்கள், தொழிற்பாடுகள் மற்றும் அலுவல்கள் மீதான முழுமையான கட்டுப்பாட்டைப் பேணுவாரென்பதுடன், வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக கம்பனியினை அதன் சார்பில் தொடர்ச்சியாக முகாமை செய்வார். நியதிச்சட்டத் தேவைப்பாடுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் தேவையான அறிக்கைகள் மற்றும் தகவல்களை இலங்கை மத்திய வங்கிக்குச் சமர்ப்பிப்பதற்கும் இவர் தேவைப்படுத்தப்பட்டுள்ளார்.
வைப்பாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டையும் நேர்மையையும் பாதுகாப்பதற்குமான தீர்மான அதிகாரசபை என்ற வகையில் இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய முயற்சிகளின் அங்கமாக இத்தீர்மானம் அமைகின்றது.
கம்பனி மீது நிதியியல் கடப்பாடுகளைக் கொண்டுள்ள நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி இன் அனைத்து ஆர்வலர்களும் தொடர்புடைய உடன்படிக்கைகளுக்கமைவாக கம்பனிக்கான அவர்களது ஒப்பந்தக் கடப்பாடுகளை நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி இன் பெயரின் கீழான வங்கிக் கணக்கொன்றின் ஊடாக மாத்திரம் உரிய காலத்தில் நிறைவுசெய்யுமாறும் அனைத்துக் கொடுப்பனவுகளுக்கான பதிவுகளைப் பேணுமாறும் ஆலோசனை வழங்கப்படுகின்றனர். மேலும் நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி இன் அனைத்து ஆர்வலர்களும் இது தொடர்பில் மத்திய வங்கிக்கு ஒத்துழைக்குமாறு தயவுடன் கோரப்படுகின்றனர்.








