வெளிநாட்டுத் துறைச் செயலாற்றத் தொகுப்பு - 2026 மே

வெளிநாட்டுத் துறை செயலாற்றமானது மத்திய கிழக்கு யுத்தத்தின் தாக்கத்தினை தொடர்ச்சியாக பிரதிபலித்ததுடன், நடைமுறைக் கணக்கானது 2026 மேயில் இரண்டாவது தொடர்ச்சியான மாதத்திற்கான பற்றாக்குறையொன்றினைப் பதிவுசெய்தது.   

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், தொழிலாளர் பணவனுப்பல்களில் அதிகரிப்பொன்று காணப்பட்டபோதிலும், பிரதானமாக விரிவடைந்த வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் மிதமடைந்த பணிகள் மிகை என்பவற்றினால் தூண்டப்பட்டு, வெளிநாட்டு நடைமுறைக் கணக்கானது 2026 மேயில் ஐ.அ.டொலர் 194 மில்லியன் பற்றாக்குறையைப் பதிவுசெய்தது. இதன் விளைவாக, 2026 சனவரி தொடக்கம் மே வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையானது ஐ.அ.டொலர் 97 மில்லியனாக விளங்கியது. 

ஏற்றுமதி வருவாய்களை விட அதிகரித்த வேகமொன்றில் இறக்குமதி செலவினம் அதிகரித்தமையின் காரணமாக, வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2026 மேயில் விரிவடைந்தது. இதன் விளைவாக, 2026 சனவரி-மே வரையான காலப்பகுதியில், ஒன்றுசேர்ந்த வர்த்தகப் பற்றாக்குறையானது 2025இன் தொடர்புடைய காலப்பகுதியின் ஐ.அ.டொலர் 2.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 4.7 பில்லியன் தொகைக்கு விரிவடைந்தது. 

எண்ணெய் விலைகள் மற்றும் அளவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பினால் தூண்டப்பட்டு, எரிபொருள் இறக்குமதிகள் மீதான செலவினமானது 2026 மேயில் ஐ.அ.டொலர் 536 மில்லியனிற்கு ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் 112 சதவீதத்தினால் அதிகரித்தது. இருப்பினும், 2026 மேயில், எரிபொருள் இறக்குமதிகள் மீதான செலவினமானது மாதத்திற்கு மாத அடிப்படையில் 39.5 சதவீதத்தினால் குறைவடைந்தது.   

தனியாள் மற்றும் வர்த்தக நோக்குடைய வாகனங்கள் ஆகிய இரண்டும் உள்ளடங்கலாக மோட்டார் வாகன இறக்குமதிகள் மீதான செலவினம் 2026 மேயில் 20.0 சதவீதத்தினால் (மாதத்திற்கு மாத அடிப்படையில்) ஐ.அ.டொலர் 250 மில்லியனாக அதிகரித்து, 2026 சனவரி-மே வரையான காலப்பகுதியில்; மோட்டார் வாகன இறக்குமதிகள் மீதான ஒன்றுசேர்ந்த செலவினத்தை ஐ.அ.டொலர் 1,071 மில்லியனிற்குக் கொண்டுசென்றுள்ளது.

இறக்குமதி விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பானது ஏற்றுமதி விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பினை விஞ்சிக் காணப்பட்டமையினால் வர்த்தக மாற்று விகிதமானது 2026 மேயில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் தேய்வடைந்து காணப்பட்டது. அதேபோல, 2026 சனவரி-மே வரையான காலப்பகுதியில், வர்த்தக மாற்று விகிதமானது முன்னைய ஆண்டின் தொடர்புடைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் தேய்வடைந்து காணப்பட்டது.  

பணிகள் கணக்கு மிகையானது 2026 மேயில் ஐ.அ.டொலர் 143 மில்லியனாக ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 36.8 சதவீத சுருக்கமொன்றினைப் பதிவுசெய்து, பணிகள் கணக்கிற்கான உட்பாய்ச்சல்களுடன் ஒப்பிடுகையில் பணிகள் வெளிப்பாய்ச்சல்களில் உயர்ந்தளவிலான வளர்ச்சியொன்றினைப் பிரதிபலித்தது. 2026 சனவரி தொடக்கம் மே வரையான காலப்பகுதியில், ஒன்றுசேர்ந்த மிகையும் 2025இன் தொடர்புடைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 20.8 சதவீதத்தால் சுருக்கமடைந்தது. 

2026 மேயில் சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் 9.6 சதவீதம் கொண்ட வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்ததுடன், ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் ஒரு மில்லியனை விஞ்சிக் காணப்பட்டது. சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் 2026 மேயில் ஐ.அ.டொலர் 156 மில்லியன் தொகையாக மதிப்பிடப்பட்டு, ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 5.1 சதவீத வீழ்ச்சியினை பிரதிபலித்த அதேவேளை ஒன்றுசேர்ந்த வருவாய்கள் 2026இன் முதல் ஐந்து மாதக்காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 1,360 மில்லியனாக, முன்னைய ஆண்டின் தொடர்புடைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 11.9 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன.

2026 மேயில், ஐ.அ.டொலர் 847 மில்லியனாக விளங்கிய தொழிலாளர் பணவனுப்பல்கள்   அண்மைய மாதங்களில் அவதானிக்கப்பட்ட சாதகமான போக்கினைத் தொடந்தது. 2026இன் முதல் ஐந்து காலப்பகுதியில் ஒன்றுசேர்ந்த பணவனுப்பல்கள் ஐ.அ.டொலர் 3.9 பில்லியனிற்கு ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் 26.0 சதவீதத்தினால் அதிகரித்தது. 

அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் ஐ.அ.டொலர் 60 மில்லியன் தொகையிலான தேறிய வெளிப்பாய்ச்சலொன்றைப் பதிவுசெய்த வேளையில், முதலாந்தர மற்றும் இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்கள் ஆகிய இரண்டும் உள்ளடங்கலாக கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2026 மே மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 23 மில்லியன் தொகையிலான தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தன. 

பாரிய வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட தேறிய வெளிநாட்டுச் செலாவணி விற்பனைகள் என்பவற்றிற்கு மத்தியில், விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் கூட்டாக வழங்கப்பட்ட ஆறாவது மற்றும் ஏழாவது தொகுதிகளின் பெறுகையினால் ஆதரவளிக்கப்பட்டு, சீன மக்கள் வங்கியுடனான பரஸ்பர பரிமாற்றல் வசதி உள்ளடங்கலாக மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2026 மே இறுதியில் ஐ.அ.டொலர் 6.9 பில்லியனாகக் காணப்பட்டன. 

மத்திய கிழக்கு மோதலிலிருந்து எழுகின்ற வெளிநாட்டுத் துறை அழுத்தங்களை பிரதிபலித்து, 2026 யூன் இறுதியிலுள்ளவாறு, ஐ.அ.டொலரிற்கெதிராக இலங்கை ரூபா ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் 7.9 சதவீதத்தினால் தேய்வடைந்தது. அயல் நாடுகளின் பொருளாதாரங்களில் அவதானிக்கப்பட்ட நாணயப் பெறுமதித்தேய்மானப் போக்குடன் இசைந்து செல்லும் விதத்தில் இப்பெறுமதித்தேய்வானது காணப்படுகின்றது.

PDF

Published Date: 

Tuesday, June 30, 2026