அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கடன் அட்டை 

கடன் அட்டை என்றால் என்ன? 

கடன் அட்டை என்பது பிணை தேவைப்படாத தற்போது நீங்கள் பொருட்களையும் சேவைகளையும் கொள்வனவுசெய்து, பின்னர் பணத்தைச் செலுத்துவதற்கு உங்களை இயலச்செய்கின்ற கடன் வகையொன்றாகும்.  

கடன் அட்டையொன்றின் ஊடாக நான் எவ்வளவு தொகையை கடனாகப் பெற முடியும்?

உங்களது வங்கி/நிதிக் கம்பனி முன்கூட்டியே நிர்ணயிக்கும் எல்லையாகும். இது உங்கள் “கடன் எல்லை” என அழைக்கப்படுகின்றது.  

எனது கடன் எல்லை எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது? 

முக்கியமாக உங்களது வருமானம் மற்றும் மீளச்செலுத்துவதற்கான இயலுமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது.  

கடன் அட்டையொன்றுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் நான் தெரிந்துகொள்ள வேண்டியவை யாவை? 

    • இது எவ்வாறு செயற்படுகின்றது 
    • தகைமைப் பிரமாணங்கள் 
    • கடன் எல்லைகள்
    • எவ்வாறு பயன்படுத்த வேண்டும் 
    • ஏற்புடைய கட்டணங்களும் விதிப்பனவுகளும் 
    • வட்டி வீதங்களும் அவற்றின் கணிப்பீட்டு முறைகளும்  
    • மீள்கொடுப்பனவுத் தெரிவுகள் 
    • குறைந்தபட்ச கொடுப்பனவுத் தேவைப்பாடுகள் 
    • கிடைக்கக்கூடிய வெகுமதிகளும் நன்மைகளும் 
    • பயன்பாட்டின் பாதுகாப்பு/பத்திரப்படுத்தல்
    • உங்களுக்கான பொறுப்புக்கள்

கடன் அட்டை எவ்வாறு செயற்படுகின்றது?

நீங்கள் கடன் அட்டையொன்றைப் பயன்படுத்தும்போது, உங்களது அனைத்து செலவுகளும் பட்டியல் சுழற்சி எனப்படும் குறிப்பான காலத்திற்கு பதிவுசெய்யப்படுகின்றது. பட்டியல் சுழற்சி முடிந்த பின்;னர், நீங்கள் பயன்படுத்திய முழுத்தொகையையும் மீளச்செலுத்துவதற்கு மேலும் 20-25 நாட்கள் (சலுகைகள் காலம் என அழைக்கப்படும்) வழங்கப்படும். இக்குறித்த காலப்பகுதிக்குள் நீங்கள் பயன்படுத்திய முழுத்தொகையையும் செலுத்தினால், வட்டி அல்லது தாமதக் கொடுப்பனவுக் கட்டணம் எதுவும் அறவிடப்படமாட்டாது.   

பயன்படுத்தல்

கடன் அட்டையினை நான் எங்கே பயன்படுத்தலாம்?

பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கொடுப்பனவுகளுக்கு அட்டைகளை ஏற்றுக்கொள்கின்ற கடைகளிலும், இணையவழி விற்பனைத் தளங்களிலும் வேறு இடங்களிலும் நீங்கள் அட்டையைப் பயன்படுத்தலாம்.

கடன் அட்டையைப் பயன்படுத்தி காசை எடுப்பனவு செய்ய முடியுமா? 

ஆம். காசு முற்பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இருப்பினும், காசு முற்பணத்தைப் பெறும்போது, வட்டியும் கட்டணமும் அறவிடப்படும். 

காசு முற்பணத்தை எவ்வாறு நான் பெற்றுக்கொள்ளலாம்? 

பொதுவாக, பண மீளெடுப்பு இயந்திரத்திலிருந்து (ATM) அல்லது வங்கியின்/நிதிக் கம்பனியின் கிளையொன்றிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். 

நான் எவ்வளவு பணத்தை எடுப்பனவு செய்யலாம்? 

உங்கள் கடன் அட்டை உங்களது வங்கி/நிதிக் கம்பனியினால் தீர்மானிக்கப்பட்ட உயர்ந்தபட்ச காசு முற்பணத் தொகையைக் கொண்டதாகும். இது பொதுவாக உங்கள் மொத்தக் கடன் எல்லையை விடக் குறைவானதாக இருக்கும்.

எனது கடன் எல்லையை விடவும் விஞ்சி செலவுசெய்யலாமா?

ஆம். அவசரத்தேவைக்காக உங்களது வங்கியினால்/நிதிக் கம்பனியினால் தீர்மானிக்கப்படும் குறிப்பிட்ட எல்லை வரை மாத்திரம் செலவுசெய்ய முடியும்.

நான் எனது கடன் எல்லையை விஞ்சி எவ்வளவு செலவுசெய்துள்ளேன் என்பதை எவ்வாறு அறிந்துகொள்ளலாம்? 

இது வழக்கமான பயன்பாட்டிற்கானது அல்ல என்பதால், எல்லையை விஞ்சிய சரியான தொகை வெளிப்படுத்தப்படமாட்டாது, இருப்பினும் உங்களது வங்கி/நிதிக் கம்பனியைத் தொடர்புகொண்டு நீங்கள் பரீட்சித்துக் கொள்ளலாம். 

நான் எனது கடன் எல்லையை விஞ்சினால் என்ன நடக்கும்?

உங்களிடமிருந்து எல்லையை விஞ்சியமைக்கான மேலதிக கட்டணம் அறவிடப்படும். 

வெளிநாட்டு நாணயத்தில் கொடுக்கல்வாங்கலை மேற்கொள்வதற்கு எனது கடன் அட்டையைப் பயன்படுத்தலாமா? 

ஆம்.

நான் எல்லா வகையான வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கலையும் செய்யலாமா?

இல்லை.  

கட்டுப்படுத்தப்பட்ட வகையிலான வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்கள் யாவை?

    • வெளிநாட்டுச் செலாவணியில் வணிகம்செய்தல் (வெளிநாட்டுச் செலாவணி வர்த்தகம்) 
    • மெய்நிகர் (Virtual) நாணயக் கொடுக்கல்வாங்கல்களுடன் தொடர்புடைய கொடுப்பனவுகள் 
    • இலங்கைக்கு வெளியிலான பந்தயம்பிடித்தல், சூதாட்டம் மற்றும் பணச்சூதாட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புடைய கொடுப்பனவுகள்
    • வர்த்தக நோக்கத்திற்காக இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கொடுப்பனவுகள்  

எனது கடன் அட்டையை வெளிநாடுகளில் பயன்படுத்தலாமா? 

ஆம். பயன்படுத்துவதற்கு முன்பு உங்களது வங்கிக்கு/ நிதிக் கம்பனிக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கலாம். 

கட்டணங்களும் விதிப்பனவுகளும் 

கடன் அட்டைகளுக்கு கட்டணங்கள் மற்றும் விதிப்பனவுகள் அறவிடப்படுகின்றனவா?

ஆம்.

ஏற்புடைய கட்டணங்கள் மற்றும் விதிப்பனவுகள் யாவை? 

இணைவுக் கட்டணம், ஆண்டுக் கட்டணம், தாமதக் கொடுப்பனவுக் கட்டணம், காசு முற்பணக் கட்டணம் போன்றன.

இணைவுக் கட்டணம் என்றால் என்ன?  

உங்களது அட்டையைப் பெற்றுக்கொள்ளும் போது ஒரு தடவை மாத்திரம் அறவிடப்படும் கட்டணமாகும். சில வங்கிகள்/நிதிக் கம்பனிகள் இக்கட்டணத்தை தள்ளுபடி செய்யலாம். 

ஆண்டுக் கட்டணம் என்றால் என்ன? 

அட்டையைப் பயன்படுத்துவதற்கான ஆண்டுக் கட்டணமாகும். தொகையானது அட்டை மற்றும் வங்கியை/ நிதிக் கம்பனியைப் பொறுத்து காணப்படும்.

தாமதக் கொடுப்பனவுக் கட்டணமென்றால் என்ன? 

வேண்டப்படும் கொடுப்பனவை செலுத்த வேண்டிய திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ மேற்கொள்வதற்கு தவறுகின்றபோது அறவிடப்படும் கட்டணம்.  

காசு முற்பணக் கட்டணமென்றால் என்ன? 

ஒவ்வொரு முறையும் நீங்கள் காசு முற்பணம் பெற்றுக்கொள்ளும் போதும் அறவிடப்படும் கட்டணமாகும். பொதுவாக, எடுப்பனவுசெய்யப்பட்ட சதவீதமாக அல்லது நிலையான குறைந்தபட்சக் கட்டணமொன்றாகவிருக்கும்.   

வெளிநாட்டுக் கொடுக்கல்வாங்கல்களுக்கு ஏற்புடைய கட்டணங்களும் விதிப்பனவுகளும் காணப்படுகின்றனவா?

ஆம். அநேகமான சந்தர்ப்பங்களில், வெளிநாட்டுக் கொடுக்கல்வாங்கல் கட்டணமொன்றாக ஏற்புடைய செலாவணி வீதத்திற்கு கூடுதலாக மேலதிக சதவீதமொன்று அறவிடப்படுகின்றது. மேலும், அத்தகைய கொடுக்கல்வாங்கல்களுக்காக உங்களது அட்டையைப் பயன்படுத்தும் போது அரசாங்க முத்திரைத் தீர்வையொன்று அல்லது ஏனைய நியதிச்சட்ட விதிப்பனவுகள் அறவிடப்படலாம்.

மீள்கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் 

பட்டியல் சுழற்சி என்றால் என்ன? 

இது, உங்களது வங்கி/ நிதிக் கம்பனி செலவினங்களைக் பதிகின்ற கால அளவாகும் (பொதுவாக, கிட்டத்தட்ட 30 நாட்கள்) 

எனது கட்டணச் சுழற்சியை நானே தெரிவு செய்ய முடியுமா?

ஆம். உங்களது வங்கி/நிதிக் கம்பனி வழங்கும் கிடைக்கப்பெறுகின்ற சுழற்சிகளில் ஒன்றை நீங்கள் தெரிவு செய்யலாம்.

எனது கட்டணச் சுழற்சியின் போது நான் எவ்வளவு செலவு செய்தேன் என்பதைச் பரீட்சிக்க முடியுமா?

ஆம்

நான் எவ்வளவு செலவு செய்துள்ளேன் என்பதை எப்படி பரீட்சிப்பது?

உங்கள் அட்டை நிலையத்தை தொடர்புகொள்ளலாம் அல்லது நீங்கள் செலவிட்டதை மற்றும் செலுத்த வேண்டிய தொகை ஆகியவற்றைக் காட்டும் கணக்குக்கூற்றினை வங்கி/நிதிக் கம்பனி நேரடியாகவோ அல்லது டிஜிட்டல் வடிவிலோ உங்களுக்கு அனுப்பி வைக்கும். 

கடன் அட்டையின் பட்டியல் தொகையை நான் எப்போது செலுத்த வேண்டும்?  

செலுத்த வேண்டிய திகதியன்று அல்லது அதற்கு முன்னர் பட்டியல்தொகையைச் செலுத்த வேண்டும். அத்திகதி உங்கள் மாதாந்த கணக்குக்கூற்றில் அச்சிடப்பட்டிருக்கும்.

கொடுப்பனவுகளுக்கு எனக்கு ஏதேனும் சலுகைக் காலம் கிடைக்குமா? 

ஆம். உங்கள் கணக்குக்கூற்று திகதிக்குப் பின்னர் பணத்தைத் மீளச்செலுத்துவதற்கு உங்களுக்கு மேலதிகமாக 20 தொடக்கம் 25 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படும். இது உங்களது கணக்குக்கூற்று திகதிக்கும் செலுத்தவேண்டிய திகதிக்கும் இடைப்பட்ட காலமாகும்.

கணக்குக்கூற்று திகதி என்றால் என்ன?

உங்களது மாதாந்த கணக்குக்கூற்றில் அச்சிடப்பட்டுள்ள உங்களது பட்டியல் சுழற்சியின் இறுதித் திகதியாகும். 

கொடுக்கல்வாங்கல் திகதி என்றால் என்ன? 

உங்களது கொள்வனவை அல்லது கொடுப்பனவினை மேற்கொள்கின்ற சரியான திகதியாகும். 

பதிவுத் திகதி என்றால் என்ன? 

இது உங்கள் கணக்கில் கொடுக்கல்வாங்கலைப் பதிவுசெய்யும் நாளாகும். இது பொதுவாக கொடுக்கல்வாங்கல் இடம்பெற்ற திகதியிலிருந்து 1-2 நாட்களுக்குள் இடம்பெறும்.

தீர்ப்பனவுத் திகதி என்றால் என்ன? 

இது உங்களது வங்கி/நிதிக் கம்பனி வணிகருக்கு நிதியங்களை அனுப்பும் நாள் ஆகும். பொதுவாக இது கொடுக்கல்வாங்கல் நடந்த பின்னர் 1–3 வேலை நாட்களுக்குள் இடம்பெறும். 

உரிய திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் செலுத்தத் தவறினால் என்ன நடக்கும்?  

உங்களிடம் வட்டியும், தாமதக் கொடுப்பனவுக் கட்டணமும் அறவிடப்படலாம்.

உரிய செலுத்த வேண்டிய திகதிக்குப் பின்னர் ஆனால் அடுத்த பட்டியல் சுழற்சி முடிவடைவதற்கு முன்னர் நான் முழுத் தொகையையும் செலுத்தினால் என்னவாகும்? 

உங்களிடம் வட்டி அறவிடப்படும். இதற்கு மேலதிகமாக, தாமதக் கொடுப்பனவுக் கட்டணமும் அறவிடப்படும். 

முழுத் தொகையையும் என்னால் செலுத்துவதற்கு முடியாவிட்டால் என்ன செய்வது?

நிலுவைத் தொகையின் ஒரு பகுதியை மாத்திரம் செலுத்துவதற்கு நீங்கள் தெரிவுசெய்யலாம். குறைந்தபட்ச கொடுப்பனவு அல்லது அதற்கு மேற்பட்ட தொகையைச் செலுத்துவது விரும்பத்தக்கது. 

நான் செலுத்த வேண்டிய ஏதேனும் குறைந்தபட்சத் தொகை காணப்படுமா?

ஆம். இத்தொகை உங்களது கணக்குக்கூற்றில் காணப்படும். 

செலுத்த வேண்டிய திகதி அன்று அல்லது அதற்கு முன்னர் குறைந்தபட்சத் தொகையை மாத்திரம்/ குறைந்தபட்சத் தொகையை விட அதிகமாக ஆனால் முழுத் தொகையை விடக் குறைவாகச் செலுத்தினால் என்ன நடக்கும்?

உங்களிடம் தாமதக் கொடுப்பனவுக் கட்டணம் அறவிடப்படமாட்டாது. எனினும், வட்டி அறவிடப்படும்.

செலுத்த வேண்டிய திகதிக்குக் பின்னர் குறைந்தபட்சத் தொகையை விட அதிகமாக ஆனால் முழுத் தொகையை விடக் குறைவாகச் செலுத்தினால் என்ன நடக்கும்?

உங்களிடம் தாமதக் கொடுப்பனவுக் கட்டணமும் வட்டியும் அறவிடப்படும். 

எதுவும் செலுத்தாமல் அல்லது குறைந்தபட்சத் தொகைக்குக் குறைவாக செலுத்தினால் என்ன நடக்கும்?

உங்களிடம் தாமதக் கொடுப்பனவுக் கட்டணமும் வட்டியும் அறவிடப்படும். 

கொடுக்கல்வாங்கல் செய்பவர்கள் என்போர் யார்?

வட்டியைத் தவிர்ப்பதற்காக, செலுத்த வேண்டிய திகதி அன்று அல்லது அதற்கு முன்னர் முழுமையான மீதியைச் செலுத்துபவர்கள் ஆவர்.

சுழற்சியாளர்கள் என்போர் யார்?

தாமதக் கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக மட்டும் குறைந்தபட்சத் தொகையைச் செலுத்திவிட்டு, ஏனைய மீதியை முன்கொண்டு செல்பவர்கள் ஆவர். இதனால் இவர்களுக்கான வட்டித் தொகை தொடர்ந்து ஒன்றுசேர்ந்துகொண்டே செல்லும்.

எனக்கு அதிகம் இலாபமளிப்பது எது?

வட்டியைத் தவிர்ப்பதற்கு, செலுத்த வேண்டிய திகதி அன்று அல்லது அதற்கு முன்னர் முழுத் தொகையையும் செலுத்தித் தீர்ப்பனவுசெய்வது உங்களுக்கு எப்போதும் பயனுள்ளதாகவிருக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கொடுக்கல்வாங்கல்செய்பவராக இருப்பதே சிறந்தது.

கடன் அட்டை கொடுப்பனவுத் தெரிவுகளும் வட்டி மற்றும் கட்டணங்கள் மீதான அவற்றின் தாக்கமும்

 

வட்டி வீதங்களும் அவற்றின் கணிப்பீட்டு முறைகளும்

எனது கடன் அட்டை வட்டி எவ்வாறு கணிப்பிடப்படுகின்றது?

    • 2025.01.31 இலுள்ளவாறான கணக்குக்கூற்று
    • 2025.01.01 தொடக்கம் 2025.01.31 வரையான பட்டியல் சுழற்சி
    • செலுத்த வேண்டிய திகதி 2025.02.25
    • குறைந்தபட்ச கொடுப்பனவு - ரூ. 803.92

கொடுக்கல்வாங்கல் திகதி 

விபரணம் 

கொடுக்கல்வாங்கல் தொகை (ரூ.) 

மீதி (ரூ.) 

25-சன-1 

ஆரம்ப மீதி 

-

0.00

25-சன-7

கொள்வனவு 

5,000.00

5,000.00

25-சன-20

காசு முற்பணம் 

10,000.00

15,000.00

25-சன-31

காசு முற்பணக் கட்டணம் 

1,000.00

16,000.00

25-சன-31

காசு முற்பணத்திற்கான வட்டி* 

78.36

16,078.36

25-சன-31

இறுதி மீதி 

-

16,078.36

    • காசு முற்பணத்திற்கான வட்டி = 78.36 (10,000 x 26/100 x 365 x 11*)

* 11 நாட்கள் –  25-சன-20 இலிருந்து 25-சன-31 வரை

 

 

    • 2025.02.28 இலுள்ளவாறான கணக்குக்கூற்று
    • 2025.02.01 தொடக்கம் 2025.02.28 வரையான பட்டியல் சுழற்சி

கொடுக்கல்வாங்கல் திகதி 

விபரணம் 

கொடுக்கல்வாங்கல் தொகை (ரூ.) 

மீதி (ரூ.) 

25-பெப்-1 

ஆரம்ப மீதி

-

16,078.36

25-பெப்-15

கொள்வனவு 

2,000.00

18,078.36

25-பெப்-21

கொடுப்பனவு 

5,000.00

13,078.36

25-பெப்-28

வட்டி 

455.26

13,533.62

25-பெப்-28

இறுதி மீதி

-

13,533.62

செலுத்த வேண்டிய திகதிக்கு முன்னர் பகுதியளவான கொடுப்பனவு (குறைந்தபட்ச கொடுப்பனவுத் தேவையை விட அதிகளவிலான) செலுத்தப்பட்டுள்ளது. 

 

வட்டிக் கணிப்பீடு

திகதி வீச்சு 

விபரணம் 

தொகை 

வீதம் 

நாட்களின் எண்ணிக்கை

வட்டிக் கணிப்பு 

வட்டித் தொகை (ரூ.) 

25-சன-20 

25-சன-21

காசு முற்பணம் 

10,000.00

26%

32

10,000 x (26/100)/ 365 x 32

227.95

25-பெப்-22

25-பெப்-28

எஞ்சியுள்ள காசு முற்பணம் 

5,000.00

26%

6

5,000 x (26/100)/ 365 x 6

21.37

25-பெப்-1

25-பெப்-28

காசு முற்பணக் கட்டணம்

1,000.00

26%

27

1,000 x (26/100)/ 365 x 27

19.23

25-சன-7

25-சன-28

கொள்வனவு

5,000.00

26%

52

5,000 x (26/100)/ 365 x 52

185.21

25-பெப்-1

25-பெப்-28

காசு முற்பணத்திற்கான வட்டி

78.36

26%

27

78.36 x (26/100)/ 365 x 27

1.51

மொத்த வட்டி

455.26

இது வட்டியை கணிப்பிடுவதற்கான ஓர் அடிப்படை முறையாகும். எனினும், உண்மையான கணிப்பீடானது நாள் கணக்கிலிடுதல் அடிப்படை மற்றும் குறிப்பான கொடுக்கல்வாங்கல் பரிசீலனைகளின் அடிப்படையில் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடலாம். இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் யாதெனில், நீங்கள் கொடுப்பனவொன்றைச் செலுத்தும்போது, அது ஏனைய செலுத்த வேண்டிய தொகைகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர், முதலில் ஏதேனும் காசு முற்பணங்கள், கட்டணங்கள் மற்றும் வட்டி விதிப்பனவுகளைத் தீர்ப்பனவுசெய்வதற்குப் பயன்படுத்தப்படும்.

காசு முற்பணத்திற்கான வட்டி எப்போது ஆரம்பமாகின்றது?

அதாவது நீங்கள் பணத்தை எடுப்பனவுசெய்த தருணத்திலிருந்து வட்டி ஆரம்பமாகின்றது. 

சாதாரண அட்டை கொள்வனவுகளுக்கு கிடைப்பது போன்ற சலுகைக் காலம் எதுவும் இதற்கு வழங்கப்படமாட்டாது.

காசு முன்பணங்களுக்கான வட்டி வீதம் அதிகமானதா?

சில வங்கிகள்/நிதிக் கம்பனிகள், சாதாரண கடன் அட்டை கொள்வனவுகளை விட உயர்ந்தளவிலான வட்டி வீதத்தினை அறவிடுகின்றன.

காசு முற்பணங்களை அடிக்கடி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டுமா?

ஆம். ஏனெனில் அவை அதிக செலவுமிக்கவை.

நீங்கள் செலுத்த வேண்டியவை:

    • எடுப்பனவுகள் கட்டணம் (இது பொதுவாக காசு முற்பணக் கட்டணம் எனக் குறிப்பிடப்படும்)
    • அதிகளவிலான வட்டி வீதங்கள்
    • முதல் நாளிலிருந்தான வட்டி

அடிக்கடி காசு முற்பணங்களைப் பெறுவது, உங்களது கடன் அட்டை பட்டியல் தொகையை நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் மிக உயர்ந்தளவில் அதிகரிக்கலாம். 

வெகுமதிகளும் நன்மைகளும்

கடன் அட்டையொன்றிற்கு வழங்கப்படும் வெகுமதிப் புள்ளிகள், பணம் மீண்டும் கிடைத்தல் மற்றும் ஏனைய நன்மைகள் என்பன யாவை?

நீங்கள் உங்களது கடன் அட்டையைப் பயன்படுத்துவதனை ஊக்குவிப்பதற்காக வங்கிகனால்;/நிதிக் கம்பனிகளினால் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. 

    • வெகுமதிப் புள்ளிகள்
      • நீங்கள் ஏதேனும் சில பொருட்களை கொள்வனவுசெய்வதற்கு உங்களது கடன் அட்டையைப் பயன்படுத்தும் ஒவ்வொரு தடவையும் ஈட்டுகின்ற புள்ளிகள் வெகுமதிப் புள்ளிகளாகும்.
      • இப்புள்ளிகளைப் பயன்படுத்தி பரிசில்கள், கொள்வனவு வவுச்சர்கள், விலைக்கழிவுகள் ஆகியவற்றை பெற்றுக்கொள்ளவதற்கு நீங்கள் இவற்றைப் பின்னர் பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது உங்களது கடன் அட்டை நிலுவையைக் குறைக்கலாம். (வங்கியின்/ நிதிக் கம்பனியின் வெகுமதி நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையில்)
    • பணம் மீண்டும் கிடைத்தல்
      • பணம் மீண்டும் கிடைத்தல் என்பது நீங்கள் செலவிடும் பணத்தில் சிறிய சதவீதத்தினை வங்கி/நிதிக் கம்பனி உங்களுக்குத் திரும்ப வழங்குவதைக் குறிக்கின்றது. 
      • இப்பணம் உங்களது அட்டைக் கணக்கில் காசாக அல்லது வரவாக மீண்டும் சேர்க்கப்படும். இதனை நீங்கள் பின்னர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    • ஏனைய நன்மைகள் 
      • சில கடன் அட்டைகள் பின்வரும் சிறப்புரிமைகளையும் வழங்குகின்றன:
        1. இலவச அல்லது விலைக்கழிவுடனான பயணக் காப்புறுதி 
        2. விமான நிலைய ஓய்வறைகளுக்கு செல்லும் சலுகை
        3. உணவகங்கள்/ ஹோட்டல் தங்குமிடங்களில் விலைக் கழிவுகள்
        4. பங்காளர் வர்த்தக நிலையங்களில் பிரத்தியேகச் சலுகைகள்
        5. வட்டியற்ற தவணைக்கட்டணத் திட்டங்கள் - (ஆனால் கையாளுகைக் கட்டணமொன்று அறவிடப்படலாம்) 

அனைத்து அட்டைகளும் ஒரே மாதிரியான நன்மைகளை வழங்குகின்றனவா?

இல்லை. அட்டையின் வகை மற்றும் வங்கி/நிதிக் கம்பனியைப் பொறுத்து நன்மைகள் மாறுபடும். ஒவ்வொரு அட்டையும் அதன் நன்மைகளுடன் தொடர்புடைய தனிப்பட்ட நியதிகளையும் நிபந்தனைகளையும் கொண்டிருக்கும். 

பாதுகாப்பும் பத்திரப்படுத்தலும் 

யாரேனும் எனது கடன் அட்டையை தவறாகப் பயன்படுத்த முடியுமா?

ஆம். மோசடி செய்பவர்கள் பொதுவாக கடன் அட்டைகளை இலக்கு வைக்கின்றனர்.

கடன் அட்டை மோசடியின் பிரதான வகைகள் யாவை?

பிரதானமாக இரண்டு வகைகள் உள்ளன:

    • இணையவழி மோசடி – யாரேனும் உங்கள் அட்டையின் விபரங்களைத் திருடி, அதனை இணையத்தில் பயன்படுத்தும்போது நிகழ்கின்றது.
    • நேரடி மோசடி – யாரேனும் திருடப்பட்ட உங்களது அட்டையை கடை அல்லது விற்பனை மைய இயந்திரத்தில் நேரடியாகப் பயன்படுத்தும்போது நிகழ்கின்றது.

இணையவழியில் ஏதேனும் மோசடி நடந்தால் என்ன நடக்கும்?

உங்களது அட்டை விபரங்கள் இணையவழியில் தவறாகப் பயன்படுத்தப்பட்டால், நீங்கள் அது பற்றிய முறைப்பாடொன்றைச் செய்ய வேண்டும். அதன்பின்னர், உங்களது வங்கி/ நிதிக் கம்பனி அது பற்றி விசாரணையை மேற்கொள்ளும். 

உங்களது முறைப்பாடு உண்மையானதாயின், “கட்டணத்தைத் திரும்பப் பெறுதல்” எனும் செயன்முறையினூடாக உங்களது பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு உதவுவார்கள்.

எனது அட்டை தொலைந்துபோனால் அல்லது திருடப்பட்டால், அது பற்றி நான் வங்கிக்கு/ நிதிக் கம்பனிக்கு அறிவிப்பதற்கு முன்னர் வர்த்தக நிலையங்களில் பயன்படுத்தப்பட்டால் என்ன நடக்கும்?

உங்களது அட்டை திருடப்பட்டதை நீங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னர், யாராவது உங்களது அட்டையை நேரடியாகப் பயன்படுத்தியிருந்தால், அந்த இழப்பை நீங்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். ஏனெனில், நீங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை அந்த அட்டை திருடப்பட்டது என்பதற்கான எந்த ஆதாரமும் இருக்காது.

கடன் அட்டை மோசடியிலிருந்து என்னை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம்? 

    • உங்களது அட்டையைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்.
    • உங்களது அட்டை இலக்கம், இரகசியக் குறியீட்டு இலக்கம் அல்லது ஒரு தடவைக் கடவுச்சொல் ஆகியவற்றை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
    • நம்பகமான இணையத்தளங்களில் மாத்திரம் உங்களது அட்டையைப் பயன்படுத்துங்கள்.
    • உங்களது கொடுக்கல்வாங்கல்களை கிரமமாகப் பரிசோதியுங்கள்.
    • உங்களது அட்டை தொலைந்துபோனால் உடனடியாக அறிவிக்கவும்.

மோசடிகள் நடப்பதற்கு முன்னர் விழிப்புடன் இருப்பதே அவற்றைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழியாகும். 

ஒவ்வொரு இணையவழியிலான கடன் அட்டை கொடுக்கல்வாங்கலிற்கு எப்போதும் ஒரு தடவைக் கடவுச்சொல் அனுப்பப்படுமா?

இல்லை. அனைத்து இணையவழிச் செலுத்துகைக்கும் ஒரு தடவைக் கடவுச்சொல் கோரப்படுவதில்லை. அது நீங்கள் பணம்செலுத்துகின்ற இணையத்தளம் அல்லது செயலியைச் சார்ந்து காணப்படும். 

சில இணையத்தளங்கள் ஒரு தடவைக் கடவுச்சொல்லினை ஏன் கோருவதில்லை? 

சில விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களின் பணம்செலுத்துகையினை வேகமாகவும் எளிதாகவும் மாற்றுவதற்காக ஒரு தடவைக் கடவுச்சொல் படிமுறைகளை நீக்குகின்றனர்.

ஒரு தடவைக் கடவுச்சொல்லினைக் கோராத இணையத்தளங்களில் பணம்செலுத்துவது பாதுகாப்பானதா?

அவ்வாறு செலுத்துவது பாதுகாப்புக் குறைவானதாகும். இயலுமானவரை, ஒரு தடவைக் கடவுச்சொல்லினைக் கோராத இணையத்தளங்கள் அல்லது செயலிகளில் பணம்செலுத்துவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

எனது பாதுகாப்புக்காக நான் என்ன செய்ய வேண்டும்?

பணம்செலுத்தி முடிப்பதற்கு முன்னர், எப்போதும் ஒரு தடவைக் கடவுச்சொல்லினைக் கோருகின்ற இணையவழி விற்பனையாளர்களைத் தெரிவுசெய்யுங்கள். இது மோசடிகளுக்கு எதிராக மேலதிக பாதுகாப்பு அரணை வழங்குகின்றது. 

பிணக்கிற்குரிய கொடுக்கல்வாங்கலொன்றினைக் கண்டறிந்தால் என்ன செய்ய வேண்டும்?

உங்களது கடன் அட்டையில் அடையாளங்காண்பதற்கு முடியாத கொடுக்கல்வாங்கலொன்றினை நீங்கள் அவதானித்தால், அக்கொடுக்கல்வாங்கல் உங்களால் அல்லது அதிகாரமளிக்கப்படாத பயனாளரினால் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக முதலில் உங்களது பதிவுகளைச் சரிபார்க்கவும். தொடர்ந்தும் சந்தேகத்திற்குரியதாகக் காணப்படும் பட்சத்தில், அப்பிணக்கு பற்றி உடனடியாக அறிக்கையிடுவதற்கு உங்களது வங்கியின்/நிதிக் கம்பனியின் உடனடித் தொடர்பு இலக்கம் அல்லது வாடிக்கையாளர் சேவை நிலையத்தினைத் தொடர்புகொள்ளவும். விசாரணைக்கு உதவும் வகையில் திகதி, தொகை மற்றும் வணிகரின் பெயர் போன்ற கொடுக்கல்வாங்கல் விபரங்களை வழங்கவும். வங்கி அல்லது நிதிக் கம்பனி இந்த விடயத்தை மீளாய்வுசெய்து, பாதுகாப்பு காரணங்களுக்காக உங்களது அட்டையை முடக்குமாறு அல்லது பதிலீடுசெய்யுமாறு உங்களுக்கு அறிவுறுத்தலாம்.

ஏனைய தகவல்கள் 

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணம்செலுத்துவதற்கு எனது கடன் அட்டையைப் பயன்படுத்தலாமா? 

ஆம், ஆனால் சில வங்கிகள்/ நிதிக் கம்பனிகள் பொதுவாக ஏறத்தாழ 1மூ தரகுப்பணத்தை அறவிடலாம். 

பல கடன் அட்டைகளை வைத்திருப்பது உசிதமானதா? 

ஆம். அவ்வாறு வைத்திருப்பது வசதியானதாக அமையலாம்.  

என்னிடம் பல கடன் அட்டைகள் இருந்தால் என்ன நடக்கும்?

வங்கிகள்/ நிதிக் கம்பனிகளிடமிருந்து கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கான உங்களது இயலுமை கடுமையாகப் பாதிக்கப்படலாம்.

அது எவ்வாறு?

நீங்கள் அவதானமாக இல்லாவிடின், பல அட்டைகளை வைத்திருப்பது உங்களது கடன் தரமிடலைப் (கொடுகடன் தகவல் பணியகத் தரமிடல்) பாதிக்கலாம். பின்வரும் சந்தர்ப்பங்களில் இது நிகழலாம்:

    • கொடுப்பனவுகளைத் தவறவிடுதல்
    • உங்களது கடன் எல்லையினை அதிகளவில் பயன்படுத்துதல்
    • அனைத்து அட்டைகளையும் உரியவாறு நிர்வகிப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளுதல்

குறைந்த கடன் புள்ளியானது கடனொன்றைப் பெற்றுக்கொள்வதனைக் கடினமாக்குகின்றது. 

பல கடன் அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னர் எதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்?

எதிர்காலக் கடன்கள் அல்லது நிதியியல் தேவைகளுக்காக சிறந்த கடன் தரமிடலொன்றினைப் பேணுவதற்கு நீங்கள் விரும்பினால், பல அட்டைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு அல்லது அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்னர் ஆழமாகச் சிந்தியுங்கள். கடனுக்கான உண்மையான தேவை இருப்பதை உறுதிசெய்வதுடன், அதனைப் பொறுப்புணர்வுடன் நிர்வகியுங்கள். 

துணை அட்டை என்றால் என்ன?

இது உங்களது கணக்கின் கீழ் உங்களது குடும்ப உறுப்பினர்கள் போன்ற வேறொரு நபரினால் பயன்படுத்துவதற்காக வழங்கப்படும் ஒரு மேலதிக கடன் அட்டையாகும். 

அவ்வட்டை எனது பெயரின் கீழ் வழங்கப்படுமா?

இல்லை. அது வேறொரு நபரின் பெயரிலேயே வழங்கப்படும்.

அதற்கெனத் தனியான கடன் எல்லை காணப்படுமா?

இல்லை. உங்களது கடன் எல்லையானது உங்களுக்கும் உங்களது துணை அட்டைதாரருக்குமிடையில் பகிர்ந்துகொள்ளப்படும்.

துணை அட்டை உடைமையாளருக்குத் தனியான கணக்குக்கூற்று வழங்கப்படுமா?

இல்லை. அவற்றின் செலவுகள் உங்களது மாதாந்த கணக்குக்கூற்றில் காண்பிக்கப்படும்.

துணை அட்டையின் செலவிடுதலுக்கு பொறுப்பானவராகக் காணப்படுபவர் யார்?

மொத்தமாகச் செலுத்த வேண்டியுள்ள நிலுவைத் தொகையை மீளச்செலுத்துவதற்கு நீங்களே முழுமையாகப் பொறுப்பானராவீர்கள்.

துணை உடைமையாளர் பணம்செலுத்தவில்லையாயின் என்ன நடக்கும்?

ஏதேனும் தாமதங்கள் அல்லது கொடுப்பனவுகளை மேற்கொள்ளத் தவறுதல் உங்களது கடன் பதிவினைக் கடுமையாகப் பாதிக்கும்.