கசகல கிரீன் பிளான்டேஷன் (பிறைவேட்) லிமிடெட்டின் பணிப்பாளர் திரு. மல்வத்தகே ரஞ்சித் நந்தன பீரிஸ் இலங்கை சுயாதீனத் தொலைக்காட்சி சேவையின் “பினி வியன” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 2026.06.08 அன்று ஏனையவற்றுக்கு மத்தியில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார் என்பது இலங்கை மத்திய வங்கியின் அவதானத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது:
(i) கசகல கிரீன் பிளான்டேஷன் (பிறைவேட்) லிமிடெட் இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிறுவனம்,
(ii) ஒவ்வொரு ஆறு (06) மாத காலத்திற்கும் இலங்கை மத்திய வங்கியினால் கோரப்படும் தகவல்களை/ஆவணங்களை/தரவுகளை நிறுவனம் இலங்கை மத்திய வங்கிக்குச் சமர்ப்பிக்கின்றது, அத்துடன்
(iii) ஏதேனும் கரிசனை காணப்படுமாயின் அது பற்றி கசகல கிரீன் பிளான்டேஷன் (பிறைவேட்) லிமிடெடிடம் இலங்கை மத்திய வங்கி விசாரிக்கலாம்.
சுயாதீனத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட “பினி வியன” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 2026.06.08 அன்று திரு. பீரிஸ் தெரிவித்த மேற்குறித்த கூற்றை முறையாகவும் திட்டவட்டமாகவும் மறுக்கின்ற அதேவேளை அதில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது, தவறாக வழிநடாத்தக்கூடியது என்றும் சட்ட ரீதியான அடிப்படையற்றது என்றும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகின்றது.
திரு. பீரிஸ் தெரிவித்த கூற்றுக்கள் இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்கின்ற பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பைத் தோற்றுவிக்கக்கூடியது என்பதை அவதானத்திற்கொண்டு, 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 02ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு முரணாக இக்கம்பனி நிதித் தொழிலை கொண்டு நடாத்தியுள்ளதா அல்லது கொண்டு நடாத்துகின்றதா அல்லது பொதுமக்களிடமிருந்து வைப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளதா அல்லது ஏற்றுக்கொள்கின்றதா என்பதை உறுதிப்படுத்துவதற்கு நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் கசகல கிரீன் பிளான்டேஷன் (பிறைவேட்) லிமிடெட்டின் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் தற்போது விசாரணையொன்று நடாத்தப்பட்டு வருகின்றது என இத்தால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது.








