கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2026 மேயில் சிறிதளவு அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்;ணை (கொநுவிசு, 2021=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு), மத்திய கிழக்கில் இடம்பெற்றுவருகின்ற யுத்தத்திற்கு மத்தியில் உள்நாட்டு வலு விலைகளில் ஏற்பட்ட மேல்நோக்கிய சீராக்கங்களின் தாக்கத்தைப் பிரதிபலித்து, 2026 மேயில் இலக்கிற்கு மேல் சிறிதளவு காணப்பட்டது. அதற்கமைய, முதன்மைப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2026 ஏப்பிறலின் 5.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2026 மேயில் 5.5 சதவீதமாக பதிவுசெய்யப்பட்டது.

உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2026 ஏப்பிறலின் 6.8 சதவீதத்திலிருந்து 2026 மேயில் 7.8 சதவீதத்திற்கு அதிகரித்து, முதன்மைப் பணவீக்கத்தில் அதிகரிப்பிற்கு பங்களித்திருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2026 ஏப்பிறலின் 2.8 சதவீதத்திலிருந்து 2026 மேயில் 0.9 சதவீதத்திற்கு குறைவடைந்தது.

மாதத்திற்கு மாதம் அடிப்படையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 2026 மேயில் 0.9 சதவீத அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தது. இவ்வதிகரிப்பானது பெரும்பாலும் வீடமைப்பு, நீர், மின்சாரம், பெற்றோலிய வாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள் (திரவ பெற்றோலிய வாயு) மற்றும் போக்குவரத்து (பெற்றோல்) துணை வகைகளின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக 0.6 சதவீதப் புள்ளிகளால் பங்களித்திருந்த உணவல்லா வகையினால் தூண்டப்பட்டிருந்த அதேவேளை, உணவு வகை 0.3 சதவீதப் புள்ளிகளால் பங்களித்திருந்தது.

அதேவேளை, மையப் பணவீக்கமும் (ஆண்டிற்கு ஆண்டு), 2026 ஏப்பிறலின் 3.8 சதவீதத்திலிருந்து 2026 மேயில் 3.9 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றங்களின் நிலையற்ற தன்மை அத்துடன் உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள பரந்த வீச்சிலான கசிவுத்தாக்கங்கள் போன்றவற்றுக்கு மத்தியில், உள்நாட்டுப் பணவீக்க தோற்றப்பாடு அதிகரித்த நிச்சயமற்றதன்மைக்குட்பட்டதாக காணப்படுகின்றது. தற்போது கிடைக்கப்பெறுகின்ற தகவல்கள் மற்றும் ஊகங்களை அடிப்படையாகக் கொண்டு முதன்மைப் பணவீக்கமானது பொருத்தமான கொள்கை வழிமுறைகளின் ஆதரவுடன், தளர்வடைந்து அதன் இலக்கினை அண்மித்து உறுதியடையும் முன்னர், எதிர்வரும் காலத்தில் 5 சதவீதம் கொண்ட இலக்கிற்கு மேல் காணப்படக்கூடுமென 2026 மே மாதத்தின் நாணயக் கொள்கைச் சுற்றில் மேற்கொள்ளப்பட்ட பணவீக்க எறிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

PDF

Published Date: 

Friday, May 29, 2026